- டாக்டர் கோ.லதா
அமைதியே என் ஆயுதம்...!
ஆர்ப்பரிக்கும் சினமறுக்கும்
அறிவாயுதம் அமைதியே
போர்க்களம் போகாமலே
புகழ்சேர்க்கும் அமைதியே
வன்முறை வழியினை மாற்றும்
பெரிய அமைதியே
புன்னகை பூக்கவே
துணை நிற்கும் அமைதியே
தீயவை எரித்திடும்
தீயற்ற அமைதியே
காயங்கள் ஆற்றிடும்
மருந்தாகும் அமைதியே
மெளனம் கொண்டுபகை வென்றிடும் அமைதியே
உள்ளத்து ஒளியினை ஏற்றிடும் அமைதியே
பொறுமை காத்து வெற்றி தந்திடும் அமைதியே
வெறுமை நீக்கிவாழ்வு செழிக்க வைக்கும் அமைதியே
ஆத்திரக்காரர்க்கு அறிவூட்டும் அமைதியே
சாத்திரம் போற்றிடும் சார்பான அமைதியே...!
--
நான் என உறுதி கொள்
விழுந்தால் எழுவேன் உறுதி கொள்
வியர்வை சிந்து உறுதி கொள்
தடைகள் உடைக்க உறுதி கொள்
தலைவன் ஆக உறுதி கொள்,
சோர்வை நீக்க உறுதி கொள்
துணிவை ஏந்த உறுதி கொள்
இலக்கை எட்ட உறுதி கொள்
இமயமாய் நிற்க உறுதி கொள்

அறிவை வளர்க்க உறுதி கொள்
அறத்தை காக்க உறுதி கொள்
உண்மையை பேச உறுதி கொள்
உழைப்பை நம்ப உறுதி கொள்
மாற்றத்தை தொடங்க உறுதி கொள்
நேர்மை பேண உறுதி கொள்
சாதனைகள் படைக்க உறுதி கொள்
நானே வெல்வேன் உறுதி கொள்
--
தமிழெனும் வானம்
ஆதித் தமிழே அகண்ட வானம்
நீதி வழங்கும் நிலவின் மேன்மை!
சங்கப் புலவர் தாரகைக் கூட்டம்
மங்கா ஒளிதரும் வானின் ஏடு!
கதிரவன் எனவே குறளும் தோன்றி
மதியொளி தந்து மனதை மாற்றும்!
கவிதை மேகம் கருணை பொழியும்
செவிக்கு அமுதம் சிந்தும் மழையாய்!
எல்லை இல்லா இலக்கண வானம்
சொல்லின் ஆழம் சுடர்விடும் கோளாய்!
வானின் உயர்வு தமிழில் உயர்வு
தேனின் இனிமை தேமதுரப் பண்பு!
அண்டம் கடந்து ஆளும் தமிழ்
கொண்டல் வண்ணக் கவிதை வானம்!
வானின் நீலம் வற்றாத் தமிழ்
நானிலம் காக்கும் நற்றமிழ்த் தேன்!
காப்பியக் காற்றே கவிதை வீசும்
மூச்சாய் அமைந்து மொழியைக் காக்கும்!
வானவில் வண்ணமாய் இலக்கியக் கோலம்
காணக் கிடைக்கும் கலைகளின் மேளம்!
விண்மீன் ஒளிபோல் வீரம் காட்டும்
பண்ணின் இசையாய் பண்பு ஊட்டும்!
காலப் பெருவழி கடந்த வானம்
ஞானம் வியக்கும் ஞானத்தமிழ் வானம்!
--
நினைத்தல் நேர்த்தி செய்
நித்தம் ஒருமுறை உன்னை நினைத்தல்
நித்திலம் போன்றே நெஞ்சில் நிலைத்தல்
முத்தின் ஒளியாய் முகமே முளைத்தல்
சித்திர மாகச் சிந்தை திளைத்தல்!
பத்துத் திசையும் பரவி நிற்கும்
சித்தத் தெளிவைத் தந்து முருக்கும்
கொத்துக் கனியாய் இன்பம் பெருக்கும்
பித்துப் பிடிக்கும் பேரின்பத் துருக்கும்!
உன்னைப் பிரிந்தால் உயிரே உலரும்
எண்ணும் பொழுதோ இதயம் மலரும்
கண்ணில் கனவாய் என்றும் புலரும்
மண்ணில் நினையே மழையாய் குளிரும்!
நெஞ்சில் எழும்இந் நினைவே திசையாய்
மிஞ்சும் அழகின் மென்நிகர் விசையாய்
அஞ்சத் தக்கார் அறிவின் இசையாய்
தஞ்ச மெனவே தங்கும் நசையாய்!
--
நீர் வளம் காத்திடு
வானத்துப் புனலினை வையத்துள் சேமித்தே
கானத்து மரங்களை கண்னெனக் காத்திடுவோம்
தானத்துச் சிறந்ததாம் தாகம் தணித்திடும்
ஈனமில் நீர்வளம் போற்றிட வேண்டியே
மானிடர் யாவரும் ஒன்றெனக் கூடுவோம்!
மண்ணின் ஈரமே மன்னுயிர் மூச்சாகும்
விண்ணின் கொடையினை வீணாக்க லாகாது
நண்ணும் ஏரியும் குளமும் தூர்வாரியே
நன்னிலம் காத்திட நற்பணி செய்திடுவோம்
உன்னத வாழ்வினை உலகினில் பெற்றிடுவோம்!
ஓடும் நதியினை மாசாக்கி அழிக்காதேn
கூடும் மழையினை மண்ணுக்குள் ஊட்டுவோம்
தேடும் செல்வமே தீஞ்சுவைத் தீம்புனல்
நாடும் நலம்பெற நாளும் உழைத்திடுவோம்
வீடும் நாடும் வியப்புற வாழ்வோம்!
நீர் வளம் காத்திடு நீயும்!
--
பாவேந்தர் பாரதிதாசன்
அறிவை விரிவு செய்....
அறிவு விரிவு செய்திடப் பாராய்
அகிலம் முழுதும் அன்பினை வாராய்
குறுகிய கூட்டில் குதித்திட வேண்டா
கொள்கை ஒன்றே என்றிடத் தூண்டா
சாதி மதம்எனும் வேலிகள் தள்ளு
சமத்துவப் பாதையில் நித்தமும் துள்ளு
உலகம் உனது வீடென்றே எண்ணு
உயர்ந்த குணத்தால் அறத்தினைப் பண்ணு
ஏழை எளியோர் இங்கில்லை என்ன
யாவரும் இன்புற வழிகளைப் பண்ண
மங்காத தமிழால் அறிவினை ஊட்டு
மன்பதை மாண்பினை பாரினில் காட்டு
பகுத்தறிவு கொண்டே பயிரினை வளர்ப்போம்
பழமை இருளை முழுதும் ஒழிப்போம்
புதியதோர் உலகம் செய்திடும் வேகம்
புத்தியில் மின்னட்டும் புரட்சி ராகம்
விண்வெளி ஏகி விந்தைகள் காண்பாய்
மேதினி போற்றிடச் சாதனைகள் பூண்பாய்
மானிட சமுத்திரம் நானெனப் பாடு
மக்கள் உரிமையை ஓங்கிட ஆடு
பாவேந்தர் சொன்ன வழியினில் செல்வோம்
பைந்தமிழ் ஓங்கிட தொண்டுகள் செய்வோம்
விரிந்த அறிவே வலிமையை தந்திடும்
வீழ்ந்த மனிதனை நிமிர்ந்திட வந்திடும்
--
நிர்வாகத் தூண்கள்
நாட்டின் முதுகெலும்பாய் திகழும் தூண்கள்
நல்லாட்சி வழங்கிடும் குடிமைப் பணிகள்
வாட்டும் வறுமை ஒழித்திடத் துடிக்கும்
வல்லமை மிக்கவர் அர்பணிப்பு உணர்வு
மக்களின் குறைகளை மனிதம் போற்றி
மகிழ்வுடன் தீர்க்கும் மாண்பு மிக்கவர்
சட்டத்தின் வழியில் நேர்மை காத்து
சமத்துவப் பாதை வகுத்திடும் மேதைகள்
ஏழை எளியவர் கண்ணீர் துடைத்து
ஏற்றம் பெற்றிட வழிவகை செய்வார்
ஆளுமைத் திறனால் அரசுத் திட்டங்களை
அனைவருக்கும் சேர்த்திட அயராது உழைப்பார்
இன்னல்கள் வந்திடும் காலங்கள் தோறும்
இதயத்தில் உறுதியைக் கொண்டு நிற்பார்.
மண்ணின் உயர்வுமே மாபெரும் இலக்கென
மனதில் சுமந்து கடமை செய்வார்
நிர்வாக எந்திரம் தடையின்றி இயங்க
நேர்மையும் துணிவும் கொண்டு நடப்பார்
பாரதத் திருநாடு பார்புகழ் அடைய
பண்புடன் பணியாற்றும் பாரதி கண்டவர்
அர்ப்பணிப்பு மிக்க அதிகார வர்க்கம்
அறத்தின் வழியில் நின்றே காக்கும்
இப்பணி சிறக்க வாழ்த்துக்கள் கூறி
இன்றைய அவர்தம் பெருமை போற்றுவோம்
--
100% வாக்களிப்போம்...

சனநாயக நாட்டின் உயிர்நாடி வாக்கு
சமத்துவம் காக்கும் வலிமைமிக்க நோக்கு
மனசாட்சிப் படியே வாக்கினைச் செலுத்து
மாற்றங்கள் கண்டிட மனதினை உயர்த்து
வறுமை ஒழிந்திட வாக்கினை அழிப்போம்
வளமான பாரதம் நாமே படைப்போம்
ஊழல் இல்லா ஆட்சி அமைப்போம்
உரிமை கடமையை உறுதி செய்வோம்
தகுதியுள்ள நபரைத் தேர்வுகள் செய்வோம்
தன்னலம் இன்றித் தலைவரை ஏற்போம்
மகுடம் சூட்டிட மக்கள் வருவோம்
மகத்தான தேர்தல் திருவிழா காண்போம்
இளைய தலைமுறை எழுச்சி கொள்ளட்டும்
இனியதோர் விடியல் இன்று மலரட்டும் வளையட்டும்
வளையும் விரல்கள் மையில் நனையட்டும்
வாய்மை வென்றிட வாக்குச் சேரட்டும்
காசுக்கு வாக்கினை விற்றிடல் வேண்டாம்
காலத்தின் கட்டாயம் மறந்திடல் வேண்டாம்
தூசுத் தட்டி துணிந்து எழுவோம்
தூய்மை நிலவிட வாக்கினை அளிப்போம்
நூறு விழுக்காடு வாக்கை எட்டுவோம்
புதியதோர் வரலாறு நாமே தீட்டுவோம்
நாடு செழிக்க நற்பணி செய்வோம்
நாளைய உலகம் நமதே என்போம்
--
பெற்ற தாயாம் மண்ணைப் போற்று!
சுற்றும் புவியின் சூழல் காக்க
பெற்ற தாயாம் மண்ணைப் போற்ற
பசுமை போர்த்திய பாரினைச் செய்ய
உறுதி ஏற்போம் உலகத் தினத்தில்!
மண்ணின் மடியில் மரம்வ ளர்த்தே
விண்ணின் அமுதை விரும்பி ஏற்போம்
தரிசு நிலத்தைத் தழைக்கச் செய்தே
வரிசைத் தென்றல் வளர்ப்போம் நாமே!
நெகிழிப் பகையை நீக்கி நிறுத்தி
அகிலம் காக்கும் அன்பை வளர்த்து
முகிலின் மழையை மண்ணில் தேக்கி
மகிழும் வாழ்வை மண்ணில் காண்போம்!
ஆறு குளம்நீர் அசுத்தம் போக்கி
ஊறும் கிணற்றை உயிராய்ப் பேணி
காற்று மாசு கடுகும் குறைத்து
ஏறும் வெப்பம் எரிப்போம் நாமே!
காடு அளிக்கும் கொடுமை நீக்கி
கூடு கட்டும் குருவிகள் காத்து
பீடு ததும்பும் பாரினைச் செய்து
நாடும் நலத்தைப் பேணிடுவோமே!
வருங்கைச் சந்ததி வாழ்ந்து பெருகப்
பெருங்கை கோத்துத் துணிவு கொள்வோம்
ஒன்றாய் இணைந்து உறுதி ஏற்போம்
குன்றா வளமே கூட்டிடு வோமே!
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
திருக்கடையூரில் பிறந்த குங்கிலியக் கலய நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
{{comments.comment}}