- முனைவர் என்.பத்ரி
பழங்காலத்தில் புறாவின் கால்களில் கடிதத்தைக் கட்டி தகவல்கள் பிறருக்கு அனுப்பப்பட்டன. பின்னர், மன்னர்கள் ஒற்றர்கள் மூலம் ஓலைகளில் தகவல்களை பரிமாறிக் கொண்டார்கள். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு (தன் மகள் இந்திராவுக்குச் சிறையிலிருந்து எழுதியவை), பாரதியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்ற அரசியல் மற்றும் இலக்கியத் தலைவர்களின் கடிதங்கள் இன்றும் சிறந்த ஆவணங்களாக நம்மால் பாராட்டப்பட்டு வருகின்றன.
இவ்வகையில், தற்போது வரை மக்களின் தகவல் பரிமாற்றத்திற்கு அஞ்சல் துறை என்றழைக்கப்டும் தபால் துறை அரியப் பணிகளைச் செய்து வருகிறது.ஆனால்,பல்வேறு தனியார் தூதஞ்சல்களின் சேவைகள் அஞ்சல் துறையின் சேவையின் தேவையை வெகுவாகக் குறைத்து விட்டன.
இயந்திரத்தனமான நம் வாழ்க்கைமுறைக்கு நம் தகவல் பரிமாற்றத்திற்கும் விரைவுப் ப(ய)ன்பாடு அவசியமாகிவிட்டது. அதனால், இன்று தகவல் தொடர்பில் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள், கைப்பேசி போன்றவற்றை நாம் அதிகமாக பயன்படுத்தத் தொடங்கி விட்டோம். இருப்பினும் இந்தியாவில் அரசுகளும்,அலுவலகங்களும் அலுவல் ரீதியான கடிதங்களை அனுப்ப இன்றும் தபால் துறையை பயன்படுத்தி வருகின்றன.
நாட்டில் முதன் முதலில் ஆங்கிலேய ஆளுனர் வாரன் ஹேஸ்டிங்ஸ்தான் 1774 மார்ச் மாதம் தபால் நிலையங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதற்கு முன் வரை தபால் அமைப்பின் முக்கிய நோக்கம் கிழக்கிந்திய கம்பெனி வணிக நலன்களுக்காக மட்டுமே இருந்து வந்தது.1854ல் டல்ஹவுசி பிரபுக்காலத்தில் நவீன மற்றும் சீரான இந்திய அஞ்சல் துறை சட்ட வடிவம் பெற்று அக்டோபர் ஒன்று அன்று ஓர் அதிகாரப்பூர்வமான அமைப்பாக உருவானது. 1764 முதல் 1776 வரையிலான காலத்தில் மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் அஞ்சலகங்கள் நிறுவப்பட்டன.

இந்தியாவில் முதல் தபால் தலை 1852 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சிந்து மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக இந்தியா முழுவதும் பயன்படும் தபால் தலைகள் உருவாக்கப்பட்டன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு புதிய இந்திய அரசாங்கம் தபால் சேவைகளுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டது.
இதற்கிடையில், 09.10.1874-அன்று முதன் முதலில் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சர்வதேச தபால் ஒன்றியம் என்னும் அமைப்பு நிறுவப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் வகையில் இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளிலும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி அன்று உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அஞ்சல் துறையின் சேவைகளை பாராட்டுவதும், நடப்பில் உள்ள பல்வேறு அஞ்சலகத் திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்துவதும் இந்த நாளின் முக்கிய நோக்கங்களாகும்.
உலகிலேயே அதிக தபால் நிலையங்களைக் கொண்ட நாடான இந்தியாவில் தற்போது ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களில் உள்ள இந்தத் துறையில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த தபால் நிலையங்கள் தலைமை தபால் அலுவலகங்கள், துணை தபால் அலுவலகங்கள், கிளை தபால் அலுவலகங்கள் என்ற மூன்று பிரிவுகளாக இயங்குகின்றன. 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தபால் அலுவலகக் குறியீட்டு எண் முறை தபால்களை வகைப்படுத்தி விரைவாக பெறுனர்களுக்கு பட்டுவாடா செய்வதில் உதவியாக இருக்கிறது.
1653 ஆம் ஆண்டு லாங்குவிலே மாகாண அமைச்சர் பாகுட் என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின் பேரில்தான் தபால்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் அமைத்துக் கொடுத்தார். மக்களின் பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி இந்தப் பெட்டியின் சிவப்பு நிறத்திற்கு இருந்தது. பொதுமக்கள் அஞ்சல் சேவைக்கு தங்களின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள இவ்வாறான பெட்டிகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், தற்போது பொது இடங்களில் இவ்வாறான தபால் பெட்டிகள் குறைந்து விட்டன.
‘My Stamp’ (மை ஸ்டாம்ப்) முறை நம் புகைப்படங்களையே நாம் அஞ்சல் தலைகளாக பெறும் முறையாகும். இதனை முறையாக தபால் துறையில் விண்ணப்பித்து ரூ.300-க்கு பணிரெண்டு தபால் தலைகளை நாம் பெறலாம். இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும். நம் புகைப்படங்களையே அஞ்சல் தலையாக பார்க்கும் இந்த நடைமுறை மகிழ்ச்சிக்குரியதாகும். இதை நாம் ஒரு பரிசாகவும் பிறகுக்கு அளிக்கலாம்.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் பொது மக்களிடையே தபால் துறையின் சேவைகளை பயன்படுத்தும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. கைபேசிப் பயன்பாட்டில் உடனுக்குடன் தாங்கள் நினைக்கும் வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் தீர்வு கிடைப்பதால் கடிதங்களை எழுதுவதில் பலர் முனைப்பு காட்டுவதில்லை. தற்போதைய சமூகத்தில் நாம் பேசுவதற்கும்,பிறர் பேசுவதைக் கேட்பதற்கும் தேவையான பொறுமை நம்மிடம் காணாமல் போய் விட்டது. இந்த நிலையில் ஒரு கடிதத்தை எழுதுவதில் தொடங்கி அதை அஞ்சல் பெட்டியில் சேர்ப்பது வரை நமக்குத் தேவைப்படும் அபரிமிதமான ஊக்கம்,நேரம், பொறுமை போன்ற அனைத்தும் வெகுவாகக் குறைந்து விட்டன.
அஞ்சல் துறை வங்கிச் சேவை, ஆயுள் காப்பீடு, முத்திரைத் தாள் விற்பனை,பதிவுத் தபால், விரைவுத் தபால், மின்னஞ்சல் பண பரிமாற்றம், பார்சல் அனுப்புதல் போன்ற மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அஞ்சல் அலுவலகங்களில் காணப்படும் பணியாளர் பற்றாக்குறை அஞ்சலகப்பட்டுவாடாக்களில் பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது. அரசின் துறையான அஞ்சலகத்துறை நம் அனைவரின் நம்பகத் தன்மையையும் ஆதரவையையும் மீண்டும் பெற வேண்டும்.இன்று நடைமுறையில் உள்ள காகிதம் இல்லா கடித முறை சுற்றுச்சூழலையை பாதுகாப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அஞ்சல் துறையின் அரும் பெரும் சேவைகளை நாம் என்றும் போற்றிக் காக்க கடமைப்பட்டுள்ளோம்.கடிதம் எழுதுவதும் ஒரு கலைதானே?
(இன்று 09.10.2026 சர்வதேச அஞ்சல் தினம்)
(டாக்டர். என். பத்ரி சுமார் 50 ஆண்டுகள் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராகத் தொடங்கி, பள்ளித் தலைமை ஆசிரியர், கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் எனப் பல தளங்களில் பணியாற்றி, தற்போது பொறியியல் கல்லூரியின் கௌரவ ஆங்கிலப் பேராசிரியராக விளங்குபவர். கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம், 4 முதுகலை பட்டங்கள் பெற்ற இவர், 1997-98-இல் தேசிய NCERT விருதைப் பெற்றவர். அகில இந்திய வானொலிக் கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக வழிகாட்டியுள்ளார். 'மை இங்கிலீஷ் கற்றல் அகாடமி' (MELA) நிறுவனச் செயலாளரான இவர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினராகவும், புதுவை அரசின் சிறந்த கவிஞர் விருதைப் பெற்றவராகவும் திகழ்கிறார். பல்வேறு இதழ்களில் 800-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 100 சிறுகதைகள் எழுதியுள்ள இவர், முதியோர் மற்றும் இளைஞர் நலனை மையமாகக் கொண்டு 'முதுமை ஒரு வரம்', 'வாய்ப்புகள் வெற்றிகள் ஆகட்டும்' உட்பட பல நூல்களைப் படைத்துச் சிறந்த கல்விச் சேவையாளராகப் புகழ்பெற்றவர்.
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
வான் சிறப்பு .. மாமழை போற்றுதும்..மாமழை போற்றுதம்!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
ஒரு நம்பி அப்பூதி அடியாருக்கும் அடியேன் .. அப்பூதி நாயனார்
கற்பனைக் குதிரை
அஞ்சல்துறையின் அருமை உணர்வோம்!
டெல்லியில் கரப்பான ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
மீண்டும் என் தந்தை!
{{comments.comment}}