குயிலின் கூவலாய்!

Nov 02, 2026,04:39 PM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


மணிமாறன் இருபத்து ஐந்து வயது இளைஞன். அப்போதுதான் எம்ஃபில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, புதிதாக உதவிப் பேராசிரியர் பணியில் சேர்ந்திருந்தான். 


அவனுக்கு தான் படித்த கல்லூரியிலேயே பணியில் சேர்ந்தது மிகுந்த சந்தோஷத்தைத் தருவதாக இருந்தது.  மணிமாறன் அக்கல்லூரியில் மாணவனாகப் படித்த காலத்தில் அனைத்துக் கலைகளிலும் படிப்பிலும் முதன்மையானவன்.  அதனால் அவன்துறை சார்ந்த பேராசிரியர்கள் மட்டுமல்லாது கிட்டத்தட்ட அந்தக் கலை அறிவியல் கல்லூரி மொத்தத்திற்கும் நன்கு அறிமுகமானவன். செல்லப்பிள்ளை போன்றவன். 


படிக்கின்ற காலத்து அனுபவம் வேறு; பணிபுரியும் அனுபவம் வேறு என்பதைப் போகப்போக அதிநுட்பமாக உணரத் தலைப்பட்டான். 


இந்தச் சூழலில் அடுத்த வாரம் நடைபெற இருந்த, அந்தத் தனியார் கல்லூரியின் 50வது பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பான ஏற்பாடுகள்  நடைபெற்றுக் கொண்டிருந்தன. 




அதில் மணிமாறன் பழைய மாணவன் மற்றும் தற்போது கூடுதலாக இளம் ஊழியன் என்பதாலும் திறமைகள் பல கொண்டவன் என்பதாலும் வரவிருக்கின்ற சிறப்பு விருந்தினரைப் புதுமையான முறையில் வரவேற்க வேண்டும் என்ற 

முக்கியப் பொறுப்பு அவன்வசம் விடப்பட்டிருந்தது. 


எனவே மணிமாறன் இரவுபகலாக முயன்று அழகான கவிதை நடையில் வரவிருக்கும் சிறப்பு விருந்தினரைப் பற்றியும் அவரது சிறப்புகள் பற்றியும் தான் பயின்ற கல்லூரியின் மேன்மைகள் பற்றியும் ஒரு சிறப்பான கவிதையை எழுதித் தயார் செய்து வைத்திருந்தான். 


கல்லூரியின் நுழைவாயில் தொடங்கி விழா மேடை வந்தடையும் வரையிலான அந்த தூரத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றார்போல், சற்று நீண்ட கவிதையாக உருவாக்கி வைத்திருந்தான். 


அதற்காகத் தினமும் மாலையில் கல்லூரி முடிந்து மாணவர்கள் எல்லாம் வீடு சென்றபிறகு, தான் எழுதிய கவிதை நோட்டினைக் கையில் வைத்துக் கொண்டு, கல்லூரியின் நுழைவாயிலில் இருந்து விழா மேடை வரையாக நடந்துகொண்டே வாசித்துப் பார்த்து நேர மேலாண்மை சரியாக வருகிறதா? என்று பயிற்சியோடு பரிசோதித்துக் 

கொண்டு இருந்தான். 


நாளை விழா, எனவே அவன் ஒருவித பதற்றத்தோடு, பயிற்சி செய்துகொண்டு இருந்தான். மற்ற பேராசிரியர்கள் சிலர், விடுதி மாணவர்கள் என்று விழா ஏற்பாட்டின் ஒரு பகுதியாக வரவேற்பு அலங்கார வேலைகள் தோரணம் கட்டுவதும் விடுதி மாணவிகள் தங்கள் கைத்திறனால் வண்ணக் கோலமிட்டு அழகுபடுத்திக்கொண்டும் இருந்தனர். 


விழா ஏற்பாடுகள் எல்லாம் எவ்வாறு நடைபெற்றுள்ளன என பார்வையிட திடீரென கல்லூரி முதல்வர் வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் அனைவரும் தங்கள்தங்கள் கைவேலைகளைப் போட்டது போட்டபடி எழுந்து அவருக்கு மரியாதை செய்தனர். 


மணிமாறனோ தனது புதுமையான நீண்ட கவிதை வரவேற்பு மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது. அப்போதுதான் அது சுவாரஸ்யப்படும் என்று எண்ணி மிகவும் ரகசியம் காத்துவந்தான். 


முதல்வரைக் கண்டதும் தனது கையில் இருந்த கவிதை நோட்டினை ஒரு புதர் மறைவில் வைத்துவிட்டு, வேகவேகமாக வந்து எல்லோரோடும் சேர்ந்து நின்று கொண்டான். முதல்வரின் பொதுவான விழா ஏற்பாடுகள் குறித்த விசாரிப்புகள் எல்லாம் முடிந்து மீண்டும் தான் வைத்துச் சென்ற இடத்தில் சென்று பார்த்த மணிமாறன், அரண்டுபோனான். 


எங்கு தேடியும் காணவில்லை. 'இது என்னடா! நமக்கு வந்த சோதனை' என்று மேலும் அதிகமாகப் பதற்றமடைந்தான். நேரமும் மிகவும் இருட்டிவிட்டாதாலும் நாளை காலையில் சீக்கிரம் விழாவிற்கு வந்து சேர வேண்டும் என்பதாலும் எல்லோரும் விரைந்து தங்கள் வேலைகளை முடித்துவிட்டு   அவரவர் விடுதியறைக்குச் சென்றுவிட்டனர். 


மணிமாறனும் ஆண்கள் விடுதியில்தான் தங்கியிருந்தான் இளம் வார்டனாக. வெகுநேரம் புதர்களில் தேடி அலுத்தவனாக மனம் வெறுத்து தனது அறைக்குச் சென்றான். 


படுத்தால் உறக்கமே வரவில்லை. கண்ணை மூடி நிதானமாக யோசித்தான். தான் அந்தப் புதரில் மறைத்து வைத்ததை யார் பார்த்திருப்பார்கள் என்று கடந்து போன சூழலை நிதானமாக நினைவுபடுத்திப் பார்த்தான். 


சட்டென அந்தப் பெண்ணின் முகம் வந்து போனது. ஓஹோ..! விஷயம் இதுதானா? இந்த ஒருவாரத்தில் மாலை நேரத்தில் அடிக்கடி நம் கண்ணில்பட்டவள் இவள் ஒருத்திதான்...

 

சிக்கினாள் சிறுபெண்... நாளை காலையில் முதல்வேளையாக அந்த மாணவியை ஒருகை பார்த்துவிடுவது என்று முடிவு செய்தகணத்தில் அவன் மனபாரம் தீர்ந்து நிம்மதியாகத் தூங்கினான். 


மறுநாள் அவன் எங்கு தேடியும் காணவில்லை அவள்?!


விழாவிற்கான நேரம் நெருங்கிவிட்டது. மணிமாறனின் இதயம் பலத்த மணியோசையாக அடித்துக் கொண்டு துடித்தது. தனது இந்தப் பெரும்பிழையால் வேலை பறிபோய்விடுமோ? எல்லார் முன்னும் பெருத்த அவமானமாகிவிடுமே? இப்போது என்ன செய்வது என்று பலவாறாக எண்ணங்கள் தாறுமாறாக ஓடிக்கொண்டு

இருந்தது. 


சரியான நேரத்திற்குச் சிறப்பு விருந்தினர் வந்தார். வெகு துல்லியமான நேர மேலாண்மையோடு கனகச்சிதமான ஏற்ற இறக்கத்தோடு அழகான உச்சரிப்பில் மணிமாறனின் நீண்ட அழகிய கவிதை வாசிக்கப்பட்டது!


குயிலின் கூவலாய்... தேனில் தோய்த்தெடுத்த குரலில் ஒலிப்பெருக்கியில் ஒலித்து வரவேற்றது! 


குரலின் குழைவால், இனிமையால் விழா அரங்கில் குழுமியிருந்த அனைவருக்கும் பேராச்சரியம் தந்து, விழிவிரியச் செய்து, சபாஷ் போடச் செய்தது. 


ஆனால், இது எதுவுமே தெரியாது, விடுதியின் மேல்மாடியின் கட்டைச் சுவரில் அமர்ந்து 'அடுத்து என்ன செய்வது? எப்படி வரவிருக்கும் அவமானத்தை எதிர்கொள்வது?' என்று தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.


இன்று மணிமாறன் - தேன்மொழி தம்பதியரின் மணிவிழா. அதே விழாமேடையில் மிகவும் கோலாகலமாகக் கல்லூரி மொத்தமும் கொண்டாடிக் குதூகலித்தது. ஆம், அன்றைய பொன்விழா நிகழ்வின் கல்லூரி முதல்வரின் ஏகபுத்திரியே தேன்மொழி!


தனது மணிமணியான கையெழுத்தில் மணிமாறனின் கவிதை நோட்டுப் புத்தகத்தின் எல்லாக் கவிதைகளுக்கும் ஒரு வரி குறுங்கவி வாசகம் தீட்டி, பேராசிரியரின் இதயத்தை வென்ற குறும்புக்காரி இவள்!


(முனைவர்  தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீபாவளி பண்டிகை 2026: தென்காசி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்; நாளை புக்கிங் தொடக்கம்

news

பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவரகாம் : அன்பில் மகேஷ் மனைவி ஜனனியிடம் விசாரணை நடத்த திட்டம்!

news

‘முரசு’ புயல் எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட் வானிலை மையம் எச்சரிக்கை

news

செட்டிநாடு ரெசிப்பி.. தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீட்.. தித்திக்கும் கந்தரப்பம்

news

சிறைச்சாலை பாதுகாப்பில் கவன குறைவாக செயல்பட்டால்... முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு

news

இரவும் பகலும் முதல் பூவாசம் வரை.. மறக்க முடியாத தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்!

news

அன்பில் மகேஸுக்கு நவம்பர் 4 வரை போலீஸ் காவல்: சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

news

அந்த பிரியாணி.. இந்த பிரியாணியை விடுங்க.. அவரைக் கொட்டை பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களா??

news

லஞ்ச வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்