தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

Sep 23, 2026,03:29 PM IST

புதுடெல்லி:இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் முடிவெடுக்கும் முறைகள் குறித்த சர்ச்சைகள் எழுந்த நிலையில், ஆணையத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டே வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகின்றன என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.   


தேர்தல் ஆணையர்களின் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை தலைமைத் தேர்தல் ஆணையர் நிராகரிப்பதாக அண்மையில் புகார்கள் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தச் சூழலில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:  


சட்டப்படியான செயல்பாடுகள் :


இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 324-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றியே ஆணையம் தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பாக, ஆணையத்தில் பல்வேறு கருத்துகளும், கருத்து வேறுபாடுகளும் எழுவது இயல்பான ஒரு ஜனநாயக நடைமுறையே ஆகும்.   


அதிகாரிகளின் அதிகாரம் & ஜனநாயகக் கடமை :




தேர்தல் ஆணையர்கள் மட்டுமின்றி, ஆணையத்தின் கீழ் இயங்கும் ஒவ்வொரு அதிகாரியும் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் சுதந்திரமாக முன்வைக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். (SIR) உள்ளிட்ட சுமார் 40 புதிய திட்டங்கள் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் அனைத்தும் எவ்வித மாறுபட்ட கருத்துமின்றி, ஒருமனதான முடிவுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் ஜனநாயக அமைப்பைப் பாதுகாப்பதிலும், அரசியலமைப்பு நமக்கு அளித்துள்ள கடமைகளை நேர்மையாகவும், நாணயத்துடனும் நிறைவேற்றுவதிலும் தேர்தல் ஆணையம் என்றும் உறுதியாகச் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


அரசியலமைப்புப் பிரிவு 324: 


இந்தியாவில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களை மேற்பார்வையிடவும், வழிகாட்டவும், கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 324 முழு அதிகாரத்தை அளிக்கிறது.


முக்கியத்துவம்: இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களைக் கொண்டு செயல்படும் அமைப்பாகும். முக்கியமான தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் அனைத்தும் ஆணையர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்