எது சுதந்திரம்?

Aug 12, 2026,01:26 PM IST

- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி


அந்த  நம்ம ஊரு டீக்கடை வாசலில்  மாலை நேரப் பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது. தெருவில் நடந்து சென்ற ஒரு இளம் பெண்ணை நோக்கிய பார்வைகள் பலவிதமாக மாறின. அந்தப் பெண் தோல் நிறத்தில் (ஸ்கின் கலர்) லெக்கின்ஸ் அணிந்து, மேலே ஒரு சிறிய டாப்ஸ் போட்டிருந்தாள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது, ஆடையே அணியாமல் செல்வது போன்ற தோற்ற மயக்கத்தை அது ஏற்படுத்தியது. காற்றில் பறந்த,  விரித்த தலைமுடியும், அந்த ஆடை தேர்வும் வழியில் செல்பவர்களை ஒரு கணம் முகம் சுளிக்க வைத்தன.


அங்கிருந்த பெரியவர் பொன்னம்பலம் சற்றே அமைதியின்மையுடன், "என்னம்மா இது... தூரத்துல இருந்து பார்த்தா ஆடையே போடாத மாதிரி இருக்கு. தலையை வேற விரிச்சுப்போட்டுட்டு போறாங்க... இதுக்கு பேருதான் சுதந்திரமா?" என்று புலம்பினார்.


அருகில் நின்றுகொண்டிருந்த ஆசிரியை பாரதி, தெருவில் சென்ற அந்தப் பெண்ணையும், அவளைப் பார்த்து சங்கடத்தோடு கடந்து சென்ற பிற பெண்களையும் கவனித்தார்.


பாரதி மென்மையாகப் பேசத் தொடங்கினார்: "பொன்னம்பலம் ஐயா, சுதந்திரம்ங்கிறது கண்டிப்பா எல்லாரோட உரிமைதான். ஆனா, உடை நாகரிகம்ங்கிறது  பெண்களுக்கும்,  ஏன் ஆண்களுக்கும்  அவசியம் தேவை.‌ அது சமூகத்தில் ஒரு பரஸ்பர மரியாதையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.  சந்தையில எத்தனையோ கண்ணியமான, அதே சமயம் வசதியான உடைகள் கிடைக்கும்போது, பார்க்கிறவங்களுக்கே கூச்சத்தை ஏற்படுத்துற மாதிரி ஆடைகளை  அணிவது  உண்மையான சுதந்திரம் ஆகாது."




அங்கே வந்த மற்றொரு இளம் பெண் திவ்யாவும், அந்த விவாதத்தில் இணைந்தாள். "ஆமா டீச்சர்... ஒரு பெண்ணாவே எனக்கு இதைப் பார்க்க சங்கடமா தான் இருக்கு. நாகரிகமான உடைங்கிறது நம்ம தகுதியையும், கம்பீரத்தையும் தான் அதிகப்படுத்தும். நாம போடுற உடை நமக்கு வசதியா இருக்கணும், அதேநேரம் அது பார்க்கிறவங்களுக்கு ஒரு தவறான அல்லது ஆபாசமான தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. சுதந்திரம் என்ற பெயரில் ஆடை நாகரிகத்தைக் கைவிடுவது சரியில்லை."


பாரதி அதை ஆமோதித்துத் தொடர்ந்தார்: "உண்மைதான் திவ்யா. நாகரீகம்,  சுதந்திரம்ங்கிறது உடலை வெளிப்படுத்துவதிலோ அல்லது தலைவிரி கோலமாக அலைவதிலோ இல்லை. அது நம்முடைய சிந்தனையிலும், செயலிலும், சுயமரியாதையிலும் தான் இருக்கிறது. கலாச்சாரத்தை முழுசா மூடநம்பிக்கையா பார்க்காம, அதில் இருக்கிற நல்ல  விஷயங்களையும் , ஆடை நாகரிகத்தையும் கண்ணியத்தையும் நாம பின்பற்றுவது தான் நமக்கும் நல்லது, சமூகத்துக்கும் நல்லது."


"தலையைச்  அழகாக சீவி ஒழுங்குபடுத்தி,  கண்ணியமான ஆடை அணிந்து செல்லும்போது ஒரு பெண்ணுக்குக் கிடைக்கிற கம்பீரமும் மரியாதையும் தனி தான். தன் சுதந்திரம் அடுத்தவரைச் சங்கடப்படுத்தக் கூடாது என்கிற பொறுப்புணர்ச்சி  அனைவருக்கும் இருக்க வேண்டும். அது தான்  உண்மையான நாகரிகம்," என்று பாரதி கூறி முடித்தார்.


அங்கிருந்தவர்கள் பாரதியின் கருத்தை ஆமோதித்தனர். சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்ற செயல் அல்ல; அது சுயக்கட்டுப்பாடும் கண்ணியமும் இணைந்தது என்பதை அந்த மாலை நேரத்து டீக்கடை விவாதம் தெளிவுபடுத்தியது.


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா ‌ போன்ற 30 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்