பாவைக் கூத்து!

Nov 02, 2026,03:09 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


"ஞாயிறு மதியம் பாவைக் கூத்து போடலாமா?" என்று கேட்டு நண்பர்கள் வந்தார்கள்.


பாவைக் கூத்து என்பது 70-80 கால கட்டத்தில் சிறிய மனித உருவங்களை வரைந்து, அட்டையில் ஒட்டி, கைப்பிடிக்கு ஐஸ் குச்சியை ஒட்டி, வேட்டிக்கு பின்னால் இதை வைத்து நாடகம் போடுவோம். இதற்காகக் குகை போல வேலி மரங்களின் நடுவில் இடம் தயார் செய்து காட்சி நடத்துவோம். ஒவ்வொருவரும் ஒரு கலைஞர்! ரொம்ப ஜாலியாக இருக்கும்.


பகலெல்லாம் பம்பரம், கோலிக்குண்டு, செதுக்குமுத்து, திருடன்-போலீஸ் விளையாடுவோம். மிதிவண்டி ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்து எடுத்துக்கொண்டு, அதில் தொட்டு விளையாட்டு... ஓய்வு நேரத்தில் மரத்து குரங்கு, சதுரக் கிணற்றில் இறங்கித் தொட்டு விளையாட்டு, சில்லாங்குச்சி எனப் பருவகாலத்திற்கு ஏற்றவாறு விளையாட்டுகள் மாறி மாறி வரும்.


இரவு நேரத்தில் 'கொலை கொலையா முந்திரிக்கா', 'ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்தது', அப்புறமாக கபடி மற்றும் 'லண்டன் விளையாட்டு' என்று இரவிலும் நிலவொளியில் விளையாட்டு அருமையாக இருக்கும். எல்லா வீட்டுக்காரர்களும் வெளியில் அமர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம். அது ஒரு தெய்வீக விருந்து! விடியும் வரை வெளியிலேயே பாய் விரித்து அனைவரும் உறங்கிவிடுவோம்.




ஒவ்வொருவரும் தனித் தனி வீடு என்றாலும், அனைவரும் ஒரு கூட்டுக் குடும்பமாக அல்லது ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக வாழ்ந்த அந்த வாழ்க்கை மீண்டும் வருமா என்று ஒவ்வொருவர் மனமும் இப்போதும் ஏங்கத்தான் செய்கிறது!


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்