சென்னை: அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசுக்கு சில யோசனைகளையும் அவர் கொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 51 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பல பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த சம்வம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகரும், தயாரிப்பாளரும் ஆன சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:
ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது.
விஷச்சாரயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? தற்போது அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் கவனமும், கவலையும், கோபமும் அதிகரித்திருக்கிறது. அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது.
கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாரயத்தை குடித்து 22 பேர் பலியானர்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள் இப்போதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்களை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கிற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'மதுவிலக்கு கொள்கை' என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது.
டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள் பணம் இல்லாதபோது 50 ரூபாய்க்கு கிடைக்கும் விஷச்சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். குடிக்கு அடிமையானவர்களின் பிரச்சனை என்பது தனிநபர் பிரச்சனை அல்ல, அந்த ஒவ்வொரு குடும்பத்தின், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை என்பதை எப்போது நாம் அனைவரும் உணரப்போகிறோம்?
அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும். குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி அவர்களை குடிநோயிலிருந்து மீட்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற அரசு எத்தகைய தொலைநோக்கு செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறதோ, அதேபோல குடிப்பழக்கதிற்கு அடிமையானவர்களின் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்.
அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும். குறுகிய கால தீர்வை கடந்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை. இனி ஒரு விதி செய்வோம்.. அதை எந்நாளும் காப்போம் என்று தெரிவித்துள்ளார்.
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்
மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!
இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
{{comments.comment}}