- ஸ்வர்ணலட்சுமி
மகாலட்சுமியின் வடிவமாகவும், பூமிதேவியின் அம்சமாகவும் திகழும் அம்மன்,மன சஞ்சலங்கள் நீங்கவும்,செல்வ வளத்தை பெறவும், எதிரிகளை வெல்லவும் வராகி அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.
வரலாற்று சிறப்பு :
சங்கத்தமிழ் காலத்தில் இருந்து வாராகி அம்மன் வழிபாடு வழக்கத்தில் இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டுவதற்கு காரணமாக இருந்ததே வராகி அம்மன் என்றும் வரலாறு கூறுகிறது. ராஜராஜ சோழன் பெருவுடையார் கோவில் கட்டுவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தார். அப்பொழுது வராகி அம்மன் காட்டுப்பன்றி உருவம் எடுத்து ராஜாவுக்கு வழிகாட்டியதாகவும், ஆதலால் தான் தஞ்சை பெருவுடையார் கோவிலில் வராகி அம்மன் சன்னதி அமைத்ததாகவும் வரலாற்று சிறப்பு கூறுகிறது.
வராகி அம்மன் துர்க்கை அம்மனின் ஒரு அவதாரம் என்று புராணங்கள் கூறுகின்றன. வராகி அம்மன் வரலாறு சக்தி வழிபாட்டின் முக்கிய பகுதியாகும். வராகி அம்மன் -ஞானம், பாதுகாப்பு, எதிரிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவர் என்று போற்றப்படுகிறார்.
வராகி அம்மனின் தோற்றத்திற்கு பின் அமைந்திருக்கும் கதைகள் சிலவற்றை பார்ப்போமா...
வராக அவதாரம் :
விஷ்ணுவின் வராக வடிவத்தின் சக்தி இவர். திருமால் வராக அவதாரம் எடுத்தபோது லட்சுமி அம்மன் வராகி வடிவில் தோன்றினார் என்று கூறப்படுகிறது. பன்றி முகம் கொண்டு எட்டு கரங்களைக் கொண்டிருப்பார் இவர். சில சமயங்களில் கலப்பை, தண்டம், சக்கரம், சங்கு, வாள் போன்றவற்றை ஏந்தி இருப்பார்.
பாண்டாசுரவதம்: ஆண் வடிவம் கொண்டவனைப் பெண்ணால் மட்டுமே வெல்ல முடியும் என்று வரம் பெற்ற பாண்டாசுரனை அழிக்க பெண் வடிவில் உருவெடுத்து வாராகி அவதரித்தார் என்று கூறப்படுகிறது.
சப்த கன்னியர் வடிவம் வராகி. மகாசக்தி ரத்த பீஜனை அழிக்க தன் சக்தியை பிரித்து ஏழு கன்னியர்களை உருவாக்கினார். அவர்களில் ஒருவர் வாராஹி என்று கூறப்படுகிறது.
வராகி அம்மனின் சிறப்புகள் :
தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஆன்மீக வளர்ச்சிக்கும் ஞானத்திற்கும் உதவுபவர் வராகி. சோழ மன்னர்களின் வெற்றி தெய்வமாக இருந்தவர் வராகி.
அதர்மம் செய்பவர்கள், அநியாயங்கள்,பொறாமை கொண்டவர்கள், உட்பகையாளர்கள் என தீய குணம் படைத்தவர்களை எதிர்த்து நிற்பவர் வராகி. சர்வ வல்லமை படைத்த தெய்வம் வராகி. இவர் அசுரர்களை அழித்து, ஞானம் வழங்கி, பக்தர்களை காப்பவர்.
வராகி அம்மனை வழிபடும் முறைகள் மற்றும் பலன்கள் :
பஞ்சமி திதி, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் வராகி அம்மன் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, தினமும் அல்லது வார நாட்களில் வழிபடுவது நற்பலன்களை தரும்.
சொத்து பிரச்சனைகள், தீராத வழக்குகள், மனப்போராட்டங்கள், எதிர்ப்புகள் நீங்கி,செல்வம் பெருக,நினைத்த காரியம் நிறைவேற வராகி அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.
வராகி அம்மன் கோவில்கள் :
உலகிலேயே பெரிய வராகி சிலை- விழுப்புரம் அருகே சாலா மேட்டில் அஷ்ட வராகி அம்மன் கோவில் எட்டு வராக வடிவங்களையும் உள்ளடக்கிய உலகின் முதல் அஷ்ட வராகி அம்மன் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளூர் வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. கோயம்புத்தூருக்கு அருகில் கவுண்டம்பாளையம் எனும் இடத்தில் வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
உத்தரகோசமங்கை வராகி அம்மன் ராமநாதபுரம் மாவட்டத்தில் மங்கை மாகாளியம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படும், பழமையான சுயம்பு அம்மன் அமைந்துள்ளார். கடலூரில் கீழாம்பூர் வராகி அம்மன் கோவில் நெல்லிக்குப்பம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. மேலும் வராகி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்துள்ளது.
பக்தர்களின் துன்பங்களை நீக்கி அனைவருக்கும் நல்வாழ்வு அருள்வார் வராகி அம்மன். மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
{{comments.comment}}