கொள்ளை (சிறுகதை)

Oct 13, 2025,04:44 PM IST

- எம்.கே.திருப்பதி, திருப்பூர்


இருட்டு. இருட்டுக்கு கருப்பு சாயம் பூசிய மாதிரி இருட்டு!


ஊர் முழுவதும், இருளை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிப் போய் இருந்தது!


அந்த நீண்ட தெருவின், மங்கலான தெரு விளக்கு வெளிச்சத்தில் அவன் தெரிந்தான்.


ஆறடிக்கும் சற்று குறைவான உயரம். தூரத்தில் இருந்தாலும் பக்கப்பார்வையில் மங்கல் ஒளியில் அவன் மூக்கின் புடைப்பு புலப்பட்டது.


ஜெர்கின்,ஷூ,கிளவுஸ் தொப்பி என்று' ராபின் கூட்' ஸ்டைலில் காணப்பட்டான்!


எங்கோ ஒரு தெரு நாய் காரணமில்லாமல் கத்திக் கொண்டு அமைதியை அறுத்துக் கொண்டிருக்க...


சின்ன சின்ன உயிர்களின் சின்ன சின்ன ராகங்கள் டி. ராஜேந்தர் பாடலாய் இசைத்தது.


அவனுக்கு அந்தத் தெரு நன்கு பரிச்சயமானது போலும்... பதட்டம் படபடப்பு எதுவும் இல்லாமல் அசாதாரணமாக நடை போட்டான்.




தெருவின் அத்தனை வீடுகளும் ஒரே அளவில் ஜெராக்ஸ் காபி போல் இருந்தது.


யாரோ ஒரு ரியல் எஸ்டேட் விஸ்வகர்மாவின் படைப்பாக இருக்கலாம். அது நமக்கு தேவையில்லாத ஒன்று.


இப்போது அவன் ஒரு போஸ்ட் கம்பத்தில் சாய்ந்து, சிகரெட் ஒன்றை பற்ற வைத்து, ஒரு  பஃப் ஆழமாக இழுத்து, வெளியிட்ட புகையில் வட்டம் காட்டினான்!


எண்ணங்கள் வண்டிச்சக்கரமாய் உருளத் தொடங்கியது.


 20 ஆண்டு பழக்கம். குறையில்லா குடும்பப் பிணைப்பு. இரு குடும்பத்துக்கும் நல்ல பான்டிங்.


என்ன இருந்தும் இவனால் அவர்களைப்போல் சம்பாதிக்க முடியவில்லை!


எத்தனை குட்டிக்கரணம்,பிரம்ம பிரயத்தனம் பண்ணினாலும் விளிம்பு நிலை வாழ்க்கை தான்! வாழ்க்கை அவனை வைத்து வாலிபால் ஆடியது!


விரைவாக முன்னேற வேண்டும்.  சத்தியம், தருமம், நீதி, நேர்மை, உண்மை எல்லாம் தூக்கி, இரும்பு உலையில் தான் எறிய வேண்டும்!


எல்லாம் ஏட்டுக்கு தான் உதவும். எனக்கு உதவுமா?


நல்ல ஒரு ஆப்பர் சூனிட்டுக்காக அலைந்து கொண்டிருந்தவனுக்கு, கை கூடியது கனவு (?)! களவாடத் துணிந்தது மனது!


இந்த நொடி காம்பவுண்ட் கேட் அருகே வந்திருந்தான்.


சுற்றும் முற்றும் பார்வையை ஓட விட, யாரும் தட்டுப்பட்ட மாதிரி தெரியவில்லை!


மெதுவாக, மிக மெதுவாக, கேட் ஏறி குதித்து போர்டிகோவை எட்டினான்!!


எங்கே அந்த பாமரேனியன்?


இந்நேரம் சத்தம் போட்டு ஊரைக் கூட்டி இருப்பானே?


இருட்டில் பார்வையை கூர்மையாக்கி சல்லடை போட்டான்.


அந்தப் பாமரேனியன் சண்டித்தனம் பண்ணாமல், நல்ல பிள்ளையாக கூண்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தது!


அது தூங்காமல் குரைத்து இருந்தாலும் பரவாயில்லை.


இவனின் ஒரு அதட்டலுக்கு,அது சர்வநாடியும் ஒடுங்கி குழைந்து கொஞ்சும். அப்படி ஒரு வாஞ்சை.


எல்லாமே திட்டத்தின் ஒரு பகுதி தான்.


'நோ... இனி பொறுமை காக்க கூடாது. நேரா காரியத்தில் இறங்கிடலாம்..'


நினைத்துக் கொண்டே கதவில் கை வைக்க, அது எனக்கு என்ன என்று தானாகவே விலகிக் கொண்டது.


அவனுக்கு கரண்ட் ஷாக் வாங்கிய மாதிரி இருந்தது.


கழுத்தில் கத்தி சொருகிய மாதிரி இருந்தது!


'வீட்டில் கார் இல்லை... வாசலில் செருப்பு இல்லை... ஒருவேளை வீட்டை பூட்ட மறந்து இருக்கலாமோ?'


'எப்படி இருந்தால் நமக்கென்ன?வந்த வேலை சுலபமாக முடிந்து விட்டது!'


முனகிக் கொண்டு தரைக்கு வலிக்காமல் அடிவைத்து, ஹாலுக்குள்  நுழைந்தான்!


உள்ளே... உள்ளே ஏதோ சலசலப்பு!


கமுக்கமான மனிதக் குரல்கள்! ஏதேதோ புரட்டிப் போடும் சத்தம்!


நம்மவனுக்கு இதயம் ஒருமுறை நின்று விட்டு துடித்தது.


முதுகுத்தண்டு சில்லிட, அனிச்சை செயல் அவனை, 'ஓடு ஓடு'  என்றது!


பதட்டத்தில் டீப்பாயில் இருந்த ஏதோ ஒன்றை தட்டி விட.. 'டங்..!' என்ற ஒலி சூழ்நிலையை சூடாக்கியது!


"ஏய் யாருடா அது"


உள்ளிருந்து குரல் கடுமையாய் வந்து விழ...


" அண்ணா யாரோ ஹால்ல...!"


இன்னொருவன் கூவினான்!


நம்மவன் சுதாரிப்பதற்குள்,' நங்...!' என்று ஒரு இரும்பு ராடு அவன் தலையை பதம் பார்த்தது!


எதிர்பாராத அந்த கணத்தாக்கு விசையால், தலையில் ரத்தம் சொட்ட, நம்மவன் சுருண்டு விழுந்தான்!


"டேய்..இருக்கிற சீக்கிரம் சுருட்டு உடனே கிளம்பணும்.. "


"உதவாக்கரை! எல்லாரும் வெளியூர் போய்ட்டாங்கன்னு சத்தியம் பண்ண? அப்ப இவன் யாருடா? "


"ஒழுங்கா மோப்பம் பிடிக்க கூட தெரியல... தண்டங்க... "


தலைவன் இருட்டில் இரைந்தான்!


"அண்ணே சத்தியமா நான் பார்த்தேன்... அந்த அஞ்சு பேரும் கார்ல கிளம்பி போனாங்க... அது மட்டும் இல்லண்ணே...


நாங்க திரும்பி வர்றதுக்கு மூணு நாள் ஆயிடும்... நாய்க்கு தவறாமல் இரண்டு வேளை சாப்பாடு வச்சிருன்னு யார்கிட்டயோ பேசிட்டு இருந்தாங்கண்ணே.. "


"புடலங்காய் கிளம்புங்கடா"


"அண்ணே...அந்த நாய் பிஸ்கட் நல்லா வேலை செய்யு துண்ணே"


"ச்சீ... கம்முனு வா.."


சொல்லிக்கொண்டே இருவரும் வீட்டை விட்டு வெளியேற... அவர்களின் உருவமும் ஒலியும்...இருட்டிலும் காற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்