மதுரை: மதுரை வைகை ஆற்றில் பச்சைப் பட்டுடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கினார் அருள்மிகு கள்ளழகர். பச்சைப் பட்டு உடுத்தியிருப்பதால் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு கிடைத்து, விவசாயம் செழித்தோங்கும், வறட்சி நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுகள் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் வைபவம்தான். இரு வேறு கோவில்களின் விழாக்களை ஒருங்கிணைத்து மதுரையில் நடைபெறும் இந்த சித்திரைத் திருவிழா மிகப் பெரிய சமய ஒற்றுமைக்கான அடையாள விழாவாகும். சைவமும், வைணவமும் இங்கு கைகோர்த்து மக்களுக்கு அருள் பாலிக்கும் அதிசயமும், ஆச்சரியமும் உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத ஒரு அற்புதமாகும்.
சைவ விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்து விட்ட நிலையில் இன்று வைணவத்தின் உச்சமான மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மிகக் கோலாகலமாக, மிக விமரிசையாக நடந்தேறியது.
தங்கை மீனாட்சியின் திருமணத்திற்காக மதுரைக்குப் புறப்படுகிறார் கள்ளழகர். திருமாலிருஞ்சோலையிலிருந்து புறப்படும் அழகர் பெருமான், ஒவ்வொரு மண்டகப்படியாக சென்று சென்று அவர்களின் வரவேற்பைப் பெற்று மதுரை வருவதற்குள் மீனாட்சியின் திருமணம் நடந்து முடிந்து விடுகிறது. தங்கையின் கல்யாணத்தை நாம் வருவதற்கு முன்பே நடத்தி விட்டார்களே என்ற ஆதங்கத்தில் மதுரைக்குள்ளையே வராமல் அப்படியே ஆற்றோராமாகவே அவர் திரும்பச் சென்று விடுவதாக ஐதீகம்.
12 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரைத் திருவிழா மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களுக்கே முத்திரைத் திருவிழாவாகும். மதுரையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்து மாவட்டத்துக்காரர்களும் திரண்டு வந்து இதை கண்டு களித்து மகிழ்ந்து அருள் பெற்றுச் செல்வார்கள். கள்ளழகர் பெருமான் நேற்று மதுரைக்கு வந்து சேர்ந்தபோது தல்லாகுளம் பகுதியில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. எதிர்சேவை என்று அழைக்கப்படுகிறது இந்த வரவேற்பு நிகழ்ச்சி.
பச்சைப் பட்டுடுத்தி: லட்சக்கணக்கில் கூடிய பக்தர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு தண்ணீர் பீய்ச்சி அழகரை மதுரைக்குள் வரவேற்றனர். அதன் பின்னர் இன்று காலை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடந்தேறியது. ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் காலை 6 மணியளவில் ஆற்றில் இறங்கி அருள் பாலித்தார் கள்ளழகர். கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த பிரவேசத்தை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி மகிழ்ந்தனர். பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்தும், கோவிந்தா கோவிந்தா என்று கோஷங்களை முழங்கியும் அழகரை வணங்கி மகிழ்ந்தனர்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி சிறப்பானன பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விக்டர் மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அங்கு முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் அனுமதிக்கப்பட்டு அழகரை வசதியாக தரிசிக்க காவல்துறை ஏற்பாடு செய்திருந்ததை பலரது பாராட்டுக்களைப் பெற்றது. மத சார்பின்றி, ஜாதி பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடும் மதுரை சித்திரைத் திருவிழா இன்றுடன் நிறைவுக்கு வந்தது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}