மும்பை: பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை. அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. அதற்குள் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாட பிசிசிஐ முடிவெடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
செப்டம்பர் 14 பெரும் சலசலப்பைுயம், பரபரப்பையும், ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இன்றுதான் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பதற்றம் மற்றும்
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு இந்தப் போட்டி நடைபெறுவதால் சர்ச்சையும் கிளம்பியுள்ளது. ஆசிய கோப்பை 2025 அட்டவணையின்படி, கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய போட்டியாகக் கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் செப்டம்பர் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இந்த இரு அணிகளும் மோதினாலே அது போர் போலத்தான் பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு இரு நாட்டு ரசிகர்களும் இந்தப் போட்டி எப்போது நடந்தாலும் பரபரப்பாகி விடுகிறார்கள், வெறியாகி விடுகிறார்கள். அந்த வகையில் இந்த ஆசிய கோப்பைப் போட்டியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், ஒரு சர்ச்சையும் கிளம்பியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்தப் போட்டி நடப்பதால்,
இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடுவதை பலரும் எதிர்க்க ஆரம்பித்துள்லனர். பாகிஸ்தானை விளையாட்டுத் துறையிலும் புறக்கணிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் குரல் வலுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் (POK) உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற அந்த நடவடிக்கை உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கையின்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தரப்பில் பலர் கொல்லப்பட்டனர். என்றாலும் கூட பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் யாரும் இன்னும் பிடிபடவில்லை. இந்த நிலையில் அதற்குள் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட
பிசிசிஐ முடிவெடுத்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், இங்கிலாந்தில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் போட்டியில் நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. பஹல்காம் தாக்குதலைக் காரணம் காட்டி ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், ஷிகர் தவான் போன்ற பல இந்திய முன்னாள் வீரர்கள் விலகியதே இதற்குக் காரணம். இந்த பின்னணியில்தான் தற்போது
ஆசியக் கோப்பை அட்டவணை வெளியாகியுள்ளது.
அதை விட முக்கியமாக கார்கில் போர் வெற்றி தினத்தன்று இந்த அட்டவணை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்த அட்டவணை குறித்து இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த அட்டவணையின்படி பார்த்தால் இந்தத் தொடரில் அதிகபட்சமாக 3 முறை இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் என்று தெரிகிறது.
இந்த அட்டவணைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், படை வீரர்களின் ரத்தத்தை விட பண லாபம் பெரிதல்ல. எந்த நாட்டில் நடந்தாலும் பாகிஸ்தானுடன் எந்த கிரிக்கெட் போட்டியையும்
இந்தியர்கள் எதிர்ப்பார்கள். அன்புள்ள பிசிசிஐ, நீங்கள் எந்த நாட்டிற்கு போட்டியை மாற்றினாலும், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மைதானத்தில் எந்தத் தொடர்பையும் நாங்கள் இந்தியர்கள் அனைவரும் எதிர்ப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியர்களின் மற்றும் ஆயுதப் படைகளின் ரத்தத்தைக் கொண்டு லாபம் சம்பாதிப்பதை நிறுத்துங்கள். ஒருபுறம் ஆபரேஷன் சிந்துர் தொடர்ந்து கொண்டுள்ளது என்று ராணுவத் தளபதி கூறுகிறார், மறுபுறம் நீங்கள் உங்கள் ரத்தப் பணத்தை சம்பாதிக்க அவசரப்படுகிறீர்கள் என்றார் அவர்.
ஜார்க்கண்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுக்தேவ் பகத், ஆசிய கோப்பை அட்டவணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விளையாட்டை அரசியல் அல்லது மற்ற அனைத்திலிருந்தும் தனிமைப்படுத்த வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள், ஆனால் பாகிஸ்தானின் செயல்களால் தேசபக்தி மற்றும் தேசத்தின் உணர்வுகள் புண்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுத்த பின்னரே நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
முன்னாள் கேப்டன் அசாருதீனும் கூட பாகிஸ்தானுடன் விளையாடுவதை ஆட்சேபித்துள்ளார். அவர் கூறுகையில் இரு தரப்பு தொடர்களில் நாம் விளையாடுவதில்லை. அப்படி இருக்கும்போது, சர்வதேச போட்டிகளிலும் நாம் விளையாடக் கூடாது. இதுதான் எனது நிலைப்பாடு. அதேசமயம், இதில் அரசும், பிசிசிஐயும்தான் முடிவெடுக்க முடியும் என்றார்.
பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புகள், அதிருப்திகள், குழப்பங்களுக்கு மத்தியில்தான் தற்போது ஆசியக் கோப்பை அட்டவணை வெளியாகியுள்ளது. இந்தப் போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான் வசதிக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றியுள்ளனர். செப்டம்பர் 9 முதல் போட்டி தொடங்குகிறது. மொத்தம் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இரண்டும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இவர்களின் முதல் மோதல் செப்டம்பர் 14 அன்று நடைபெற உள்ளது. சூப்பர் ஃபோர் சுற்றுக்கு இரு அணிகளும் தகுதி பெற வாய்ப்புள்ளது, மேலும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் மீண்டும் சந்திக்கலாம். அந்த அடிப்படையில் பார்த்தால் மொத்தம் 3 போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் மோத வாய்ப்புள்ளது.
{{comments.comment}}