மீரா... டைரியை முழுசா படிச்சியா?.. (நீ மழை - 8)

Mar 30, 2026,10:36 AM IST


அந்தச் சிறிய காகிதத்தை மீரா நடுங்கும் விரல்களால் மெல்லப் பிரித்தாள். அதில் அர்ஜுனின் கிறுக்கலான கையெழுத்தில் ஒரு வரி மட்டும் எழுதப்பட்டிருந்தது:


"மீரா... என் டைரி உன் பேக்கிற்குள் இருக்கிறது. அதில் கடைசிப் பக்கத்தைப் படி... பதில் உன்னிடம்தான் இருக்கிறது!"


மீரா திடுக்கிட்டுத் தன் பேக்கைத் துழாவினாள். அர்ஜுன் எப்போது அதை வைத்தான் என்று தெரியவில்லை; அவளது புத்தகங்களுக்கு இடையில் ஒரு சிறிய நீல நிற டைரி இருந்தது. படபடக்கும் இதயத்துடன் அதன் கடைசிப் பக்கத்தைத் திருப்பினாள்.


கைகள் நடுங்க.. முகமெல்லாம் வியர்வை பூக்க.. படபடப்புடன் அதைப் பார்த்தாள்.


அங்கே ஒரு காய்ந்த ரோஜா இதழ் ஒட்டப்பட்டிருந்தது. அதன் கீழே அர்ஜுன் எழுதியிருந்த வரிகள்..


"கேட்காமலே வரும் மழை நீ...

கேட்டாலும் கிடைக்காத வரம் நீ!

என் சுவாசப் பையில் உன் வாசம்...

என் மரணப் படுக்கையிலும் உன் நேசம்!"




அதற்குக் கீழே பெரிய எழுத்துக்களில், "மீரா, அடுத்த வாரம் என் அப்பாவோடு உன் வீட்டிற்கு வரப்போகிறேன். உன்னை என் வாழ்நாள் கவிதையாகக் கேட்க! சம்மதமா?" என்று எழுதப்பட்டிருந்தது.


படபடப்பின் உச்சத்தில் இருந்த மீராவுக்கு.. சந்தோஷத்தில் மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. பிரிந்து விடுவோமா என்ற சோகத்தில் இருந்தவளுக்கு, அர்ஜுனின் இந்தத் திடீர் 'சர்ப்ரைஸ்' ஒரு பெரும் மழையாய் நனைத்தது. கண்கள் ஆனந்தத்தில் கசிந்தன. பட்டென்று அழுகை வெடித்தது.. அது ஆனந்தத்தின் உச்ச அழுகை.


பேருந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். மழை ஓய்ந்திருந்தாலும், மரங்களில் இருந்து சொட்டும் நீர்த்துளிகள் ஒவ்வொன்றும் அர்ஜுனின் பெயரைச் சொல்வது போல் அவளுக்குத் தோன்றியது.


மனமெல்லாம் சந்தோஷத்தில் அழுத்த, அதுவே பெரும் பாரமாக தோன்றியது.. சந்தோஷ பாரம். மெல்லத் தன் போனை எடுத்து அர்ஜுனிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்:


"டைரி படித்துவிட்டேன் அர்ஜுன்... பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை. இதோ ஒரு கவிதை மட்டும்..."


"மழையாய் நீ பொழிய - நான்

மண்ணாய் உன்னை ஏந்துவேன்!

நிழலாய் நீ நடக்க - நான்

உன் காலடியில் வாழ்வேன்!

கேட்கும் முன்பே தந்துவிட்டாய் - உன்னை

இனி நீயே என் உலகம்!"


மெசேஜை அனுப்பிவிட்டு அவள் காத்திருந்தாள். சற்று நேரத்தில் அலைபேசி சிணுங்கியது. அர்ஜுன் தான்.


"மீரா... வீட்டுக்குப் போயிட்டியா? டைரியை முழுசா படிச்சியா?" அவன் குரலில் ஒரு மெல்லிய நடுக்கம் தெரிந்தது.


"ம்ம்... படிச்சேன் அர்ஜுன். ஆனா... ஆனா இது நிஜமா நடக்குமா? உன் அப்பா சம்மதிப்பாரா?" மீரா தயக்கத்துடன் கேட்டாள்.


அர்ஜுன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு தீர்க்கமான நம்பிக்கை இருந்தது. "மீரா, என் அப்பாகிட்ட ஏற்கனவே பேசிட்டேன். உன்னைப் பத்தி சொன்னதும் அவர் சொன்ன ஒரே வார்த்தை, 'அர்ஜுன், உன் கண்ணுல ஒரு பொண்ணுக்காக இவ்வளவு மரியாதை தெரியுதுன்னா, அவ கண்டிப்பா நம்ம வீட்டு மகளாவே வரத் தகுதியானவ தான்'னு சொன்னாரு. அதான் தைரியமா அடுத்த வாரம் வர்றேன்னு சொன்னேன்."


மீராவுக்குத் தொண்டை அடைத்தது. வார்த்தைகள் வராமல் மெல்ல விம்மினாள்.


வார்த்தைகள் தோற்கும் இடத்தில்,

கண்ணீர் பேசத் தொடங்கும்!

வலிக்காக அல்ல 

அன்பின் ஆழத்தை அளக்க!


"ஏய்... எதுக்கு இப்போ அழுகை? நான் தான் பக்கத்துல இல்லையே துடைக்க..." அர்ஜுன் குரல் கனிவோடு ஒலித்தது.


"இல்ல அர்ஜுன்... எனக்கு இப்போவே உன்னைப் பார்க்கணும் போல இருக்கு. இந்த மழை பெய்யும் போது நாம ஒண்ணா நனைஞ்ச அந்த நிமிஷம் தான் ஞாபகத்துக்கு வருது," என்றாள் மீரா.


"கவலைப்படாத மீரா. இனி வர்ற எல்லா மழையும் நமக்கானது தான். நாம ரெண்டு பேரும் சேர்ந்து நனையப் போற ஆயுள் கால மழையோட ஆரம்பம் தான் இது."


அன்று இரவு மீராவிற்குத் தூக்கமே வரவில்லை. ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிலவின் ஒளியில் அந்த நீல நிற டைரி ஜொலித்தது. அவள் ஒரு பேனாவை எடுத்து, அந்த டைரியின் அடுத்த காலியான பக்கத்தில் ஒரு கவிதையை எழுதினாள்:


"நீ மழையாய் வந்தாய்,

என் வறண்ட மனதில் ஈரம் தந்தாய்!

உன் கைக்கோர்த்து நடக்க - என்

பாதங்கள் ஏங்கிக் கிடக்கின்றன!

சீக்கிரம் வா அர்ஜுன்...

உன் நிழலில் நான் தஞ்சமடைய!"


மறுநாள் காலை விடிந்தது. அந்த விடியல் மீராவிற்குப் புதிய நம்பிக்கையைத் தந்தது. ஆனால், விதி வேறு ஏதோ ஒரு திருப்பத்தை அவர்களுக்கு வைத்திருந்தது. மீராவின் அப்பா அன்று காலை ஒரு முக்கியமான விஷயத்தைப் பேச வேண்டும் என்று அவளை அழைத்தார். அவர் கையில் ஒரு போட்டோ இருந்தது.


மீராவின் இதயம் வேகமாகத் துடித்தது. கையில் இருந்த அந்தப் புகைப்படத்தை அவளிடம் நீட்டினார். மீராவின் கைகள் நடுங்கின. அர்ஜுன் சொன்னது போல அவன் வீட்டிலிருந்து அவசரப்பட்டு யாராவது பேசிவிட்டார்களோ? அல்லது வேறு ஏதேனும் வரனா?


அவள் மெல்ல அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாள்.


புகைப்படத்தில் மீராவின் அப்பா ஒரு இளைஞனுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்தார். அந்த இளைஞன் அர்ஜுன் போலவே இருந்தான்... இல்லை, அவன் அர்ஜுன் தான்! ஆனால் அடியில் இருந்த குறிப்பு மீராவின் இதயத்தை ஒரு நிமிடம் நிறுத்தியது. காரணம் அந்தப் புகைப்படத்தில் வருடம் 2010 என போடப்பட்டிருந்தது. 


மீராவுக்குத் தலை சுற்றியது. 2010-ல் அர்ஜுன் தன் அப்பாவை எப்படிச் சந்தித்தான்? இது என்ன குழப்பமாக இருக்கிறது. கைகள் நடுங்க, தலை சுற்றுவது போல வரவே அப்படியே அருகில் இருந்த சேரைப் பிடித்தபடி தடுமாறி அமர்ந்தாள் மீரா.


வெளியில் மீண்டும் மழை பலத்த சத்தத்துடன் பெய்ய ஆரம்பித்தது. அப்போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.


(தொடரும்)


முந்தைய அத்தியாயங்கள்: 1 2 3 4 5 6

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!

news

எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!

news

ஐபிஎல் 2026 : சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

news

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்... 4 நாட்கள் மட்டுமே அவகாசம்.. 4 நாட்கள் லீவு வருகிறது!

news

Monday Motivation Short Story: பரிதவிப்பு!

news

மீரா... டைரியை முழுசா படிச்சியா?.. (நீ மழை - 8)

news

Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!

news

DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி

அதிகம் பார்க்கும் செய்திகள்