திருப்புவனம்: திருப்புவனம் இளைஞர் அஜித் மீது நகை திருட்டு புகார் அளித்த டாக்டர் நிகிதா மீது 2011ம் ஆண்டு பண மோசடி புகாரில் வழக்கு பதிவாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில், போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார்.
அஜித்குமார் மீது எந்த வித வழக்கும் பதியாமல்
போலீசார் கடுமையாக தாக்கி கொலை செய்தனர்.
விசாரணையின் போது வாயில் 5 முறை மிளகாய் பொடியைத் தூவி அடித்துள்ளனர்; அந்தரங்க உறுப்புகளிலும் மிளகாய் பொடியைக் கொட்டி கொடுமைப்படுத்தப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் பல்வேறு உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டங்களை தெரிவித்தும்,
திமுக அரசை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணையின் போது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பல கேள்விகளை கேட்டிருந்தார். காவல்துறை தரப்பில் செய்யப்பட்ட அநீதிகளை அவர் பட்டியலிட்டு கடுமையாக சாடியிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ வசம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் வரை மோசடி செய்ததாக 2011ல் நிகிதா மீதும் அவரது தாயார் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010இல் துணை முதல்வரின் உதவியாளரை எனக்கு தெரியும் என்று கூறி நிகிதா மோசடி செய்துள்ளார். அதுமட்டும் இன்றி பணத்தைக் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டபோது நிகிதாவின் குடும்பத்தினர் மிரட்டியதும் தற்போது தெரியவந்துள்ளது.
{{comments.comment}}