ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் சமீபத்தில் அடுத்தடுத்து மரணமடைந்தது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்.
அதில் 2 புலிகள் மட்டும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகவும், பிற புலிகள் பசி பட்டினி மற்றும் அவர்களுக்குள் நடந்த சண்டையில் உயிரிழந்ததாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக முதுமலை, சத்தியமங்கலம் வனப் பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேசமயம், இப்பகுதியில் அதிக அளவிலான மனித இடையூறுகளும் இருப்பதால் புலிகளின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 19ம் தேதி வரையிலான காலகட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிக்குட்பட்ட 2 இடங்களிலும், நீலகிரி வனக் கோட்டத்துக்குட்பட்ட 3 இடங்களிலும் 6 குட்டிகள் உள்பட 10 புலிகள் அடுத்தடுத்து இறந்து கிடந்தன.
இதுகுறித்து கே.ரமேஷ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இந்தக் குழு நடத்திய விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 30 சதவீத புலிகள் நாகர்ஹோலே, பந்திப்பூர், வயநாடு, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய வனப் பகுதியில் வசிக்கின்றன. இங்கு 2010ம் ஆண்டு மொத்தம் 382 புலிகளே இருந்தன. இது 2022ம் ஆண்டு 828 ஆக அதிகரித்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் அதிக அளவிலான புலிகள் வசிக்கின்றன. இங்கு கடந்த பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. முதுமலையில் முன்பு 51 புலிகளே இருந்தன. தற்போது 114 புலிகள் உள்ளன. இங்கு புலிகள் அதிக அளவில் பெருகி விட்டதால் புலிகள் புழக்கம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு இங்கிருந்து புலிகள் செல்வதும் அதிகரித்தது. அதாவது நீலகிரி வனக் கோட்டப் பகுதியில் புலிகள் குறைவாக இருக்கும். அந்தப் பகுதிகளுக்கு புலிகள் இடம் பெயர்வது நடந்தது.
புலிகள் நடமாடும் பகுதிகளில் தற்போது மனித இடையூறுகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக அந்தப் பகுதியை விட்டு புலிகள் அகலும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அப்படித்தான் சேகூர் பகுதியில் 2 குட்டிகளை விட்டு விட்டு ஒரு தாய்ப்புலி வேறு பகுதிக்குப் போய் விட்டதால், அந்த 2 குட்டிகளும் சாப்பாடு கிடைக்காமல் பட்டினியில் உயிர் விட்டுள்ளன.
சின்ன குன்னூர் பகுதியில், இதே காரணத்தால்தான் தாய் அருகில் இல்லாததால் 4 குட்டிகள் உடல் நலிவடைந்து, பட்டினியால் உயிரிழந்துள்ளன. இந்த ஆறு குட்டிகளின் தாய் குறித்த தகவல் இல்லை. அந்த தாய் புலிகளை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். டிஎன்ஏ சோதனை மற்றும் சிசிடிவி கேமரா மூலம் இதைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம்.
நடுவட்டம் மற்றும் கார்குடி பகுதிகளில் இரண்டு பெரிய புலிகள் இறந்து கிடந்ததற்குக் காரணம், புலிகளுக்குள் நடந்த சண்டையே. எமரால்டு பகுதியில் இரண்டு புலிகள் கொல்லப்பட்டுள்ளன. அதாவது விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளன. இங்கு வேட்டைக்காரர்கள் அதிக அளவில் ஊடுறுவுவதாக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன. குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த வேட்டைக்காரர்கள் இங்கு ஊடுறுவித் தங்கி புலிகளை வேட்டையாடி வருவதாக ஒரு தகவல் உள்ளது. அதுகுறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?
டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!
{{comments.comment}}