புவனேஸ்வர்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாவிட்டாலும் கூட பாஜகவுக்கு முழுமையான ஆதரவு அளித்து வந்த பிஜூ ஜனதாதளம் கட்சியின் நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் பாஜகவை ஆதரிக்கப் போவதில்லை, வலுவான எதிர்க்கட்சியாக பிஜூ ஜனதாதளம் செயல்படும் என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஒடிஷா முதல்வருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
லோக்சபாவில் பிஜூ ஜனதாதளத்திற்கு ஒரு உறுப்பினரும் கிடையாது என்றாலும் கூட, ராஜ்யசபாவில் நவீன் பட்நாயக் கட்சிக்கு 9 எம்.பிக்கள் உள்ளனர். அவரது இந்த திடீர் அறிவிப்பால் பாஜக வட்டாரத்தில் ஆச்சரிய அலைகள் எழுந்துள்ளன. பிஜூ ஜனதாதளத்தின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
பிஜூ ஜனதாதளம் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து போட்டியிட்டு லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்ருஹரி மஹதாப்தான் தற்போது லோக்சபா இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பிஜூ ஜனதாளம் கட்சியினருக்கு பாஜக குறி வைத்துள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. பாஜகவுக்கு வந்தால், மஹதாப் போல உங்களுக்கும் உயர்வு கிடைக்கும் என்று பிஜூ ஜனதாதளம் கட்சி தலைவர்களுக்கு குறிப்பாக எம்.பிக்களுக்கு பாஜக மறைமுகமாக செய்தி விடுப்பது போல இது இருப்பதாக கூறுகிறார்கள். இதனால்தான் நவீன் பட்நாயக் இப்படி ஒரு முடிவை எடுத்தாரா என்று தெரியவில்லை.
புவனேஸ்வரில் இன்று பிஜூ ஜனதாதளம் கட்சியினரின் ராஜ்யசபா எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நவீன் பட்நாயக் கலந்து கொண்டார். அப்போதுதான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். கூட்டத்திற்குப் பின்னர் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஸ்மித் பத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், வலிமையான, உறுதியான எதிர்க்கட்சியாக ராஜ்யசபாவில் நமது எம்.பிக்கள் செயல்பட வேண்டும் என்று நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டார். மாநிலம் சார்ந்த பிரச்சினைகளை சரியான முறையில் ராஜ்யசபாவில் எழுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஒடிஷா மாநில பிரச்சினைகள் குறித்து வெறுமனே குரல் கொடுப்பதோடு நின்று விடாமல், மாநிலப் பிரச்சினைகளை பாஜக அரசு கண்டு கொள்ளாவிட்டால் போராட்டத்திலும் குதிக்குமாறு நவீன் பட்நாயக் எங்களை அறிவுறுத்தியுள்ளார். ஒடிஷா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ராஜ்யசபாவில் எழுப்புமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் நவீன் பட்நாயக்.
முக்கியமாக இதுவரை கொள்கை அடிப்படையில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவு இனி இல்லை என்றும் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இனிமேல் பாஜகவுக்கு ஆதரவு கிடையாது. நாம் இனி வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும் நவீன் பட்நாயக் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் என்றார் பத்ரா.
பாஜகவில் அதிர்ச்சி
பிஜூ ஜனதாதளம் கட்சியின் இந்த முடிவு பாஜக வட்டாரத்தில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடையாது. பாஜகவின் கடந்த 10 வருட கால ஆட்சிக்கு பிஜூ ஜனதாததளம் பல வழியிலும் உதவியாக இருந்தது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவர், 2019 மற்றும் 2024 ஆகிய இரு ஆண்டுகளிலும் ஒடிஷாவிலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட பிஜூஜனதாதளம்தான் காரணம்.
பல்வேறு முக்கியப் பிரச்சினைகளிலும் பிஜூ ஜனதாதளம், பாஜகவை கண்மூடித்தனமாக ஆதரித்து வந்தது. பிஜூ ஜனதாதளம் இருக்கிறது என்ற தைரியத்தில்தான் பாஜகவினரும் தெம்பாக இருந்து வந்தனர். தற்போது அந்த ஆதரவு துண்டிக்கப்பட்டிருப்பது பாஜகவினரை அதிர வைத்துள்ளது. இது அவர்களுக்கு சற்று பின்னடைவுதான்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}