பங்குனி தேய்பிறை அஷ்டமி.. ஈரோடு ராட்டைசுற்றி பாளையம் காலபைரவர் கோவிலில் விசேஷம்!

Apr 09, 2026,06:20 PM IST

- ஸ்வர்ணலட்சுமி 


தேய்பிறை அஷ்டமி:  (தி ரியம் பகாஷ்டமி )  -பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி:


விசுவாவசு வருடம் 20 26 ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி  வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி திதி (உதய திதியாக ) அமைந்துள்ளது. இந்த தேய்பிறை  அஷ்டமியானது தமிழ் ஆண்டின் கடைசி பங்குனி மாதம் வரும் அஷ்டமி திதியாகும்.


இந்த நாள் சிவபெருமானின் உக்கிர வடிவமான மற்றும் காலத்தை நிர்ணயம் செய்யும் வடிவமான கால பைரவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் ஆகும்.இந்த நாளில் கால பைரவரை வழிபடுவது எதிர்மறை ஆற்றலை நீக்கி,பயம் தடைகள் நீங்கி, பித்ருக்கள் சாபம் நீங்கி,செல்வ செழிப்பு ஏற்படும்.


ஒவ்வொரு மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி நாளை காலாஷ்டமி என்று அழைக்கிறோம்.இந்த நாளில்  கால பைரவரை வழிபடுவது ஒவ்வொருவர் வாழ்விலும் பல பிரச்சனைகள் தீர்ந்து, மகிழ்ச்சியையும், செழிப்பையும், கொண்டுவரும். ஏழரைச் சனிக்காலம், அஷ்டம சனி, ராகு கேதுவின் கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த காலாஷ்டமி வழிபாடு செய்ய பலவித இன்னல்களில் இருந்து விடுபடலாம். கடன் பிரச்சினைகள், பண பிரச்சினைகள், தொழிலில் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கும்.


நேரம்:




பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி ஏப்ரல் ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை இரவு 09: 19 மணிக்கு துவங்கி ஏப்ரல் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11: 15 மணிக்கு முடிவடைகிறது. எனவே உதய திதியின் அடிப்படையில் இந்த அஷ்டமி ஏப்ரல் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாள் பங்குனி மாதம் விசுவாவசு வருடத்தின் கடைசி தேய்பிறை அஷ்டமி ஆகும்.


அஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் பங்குனி தேய்பிறை அஷ்டமி:


இம்மாதம் கடைசி பங்குனி தேய்பிறை  அன்று வரும் காலாஷ்டமி இன்னல்களை தீர்ப்பதோடு, சகல ஐஸ்வர்யங்களையும் பெற வெள்ளிக்கிழமை ராகு காலம் முடிந்த பிறகு மாலையில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி பிரார்த்தனை செய்வது சிறப்பு. பங்குனி மாத காலாஷ்டமியை "திரியம் பகாஷ்டமி " என்றும் அழைப்பர்.


வழிபாடு:


காலாஷ்டமி அன்று மாலையில் அரச மரத்தின் அடியில் நல்லெண்ணெய் அகல் தீபம் ஏற்றி வழிபடவும் அல்லது பைரவர் கோவிலில் விளக்கேற்றி கருப்பு எள், உளுந்து,ஆடைகள் தானம் செய்வது மங்களகரமாக  கருதப்படுகிறது.

கோவிலுக்கு செல்பவர்கள் அபிஷேகப் பொருட்களை வாங்கி செல்வதும், பைரவருக்கு சிவப்பு நிற பூக்கள் குறிப்பாக செவ்வரளி மலர்கள், வில்வம்,வடைமாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.


வழிபாட்டின் போது கூற வேண்டிய மந்திரம் :


"ஓம் காலகாலாய வித் மஹே காலா தீதாய தீமஹி தன்னோ காலபைரவ பிரசோதயாத்".


ஈரோடு ராட்டை சுற்றி பாளையம் காலபைரவர் கோவில் :


ஈரோடு மாவட்டத்தின் அவல்பூந்துறை பகுதிக்கு அருகில் ராட்டை சுற்றி பாளையத்தில் அமைந்துள்ள பைரவர் பீடம் உலகிலேயே மிக உயரமான சுமார் 39 அடி உயர காலபைரவர் சிலை கொண்ட சிறப்புமிக்க தலமாகும். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு பால் அபிஷேகம் யாகங்கள் மற்றும் 64 பைரவர் வழிபாடு விமர்சியாக நடைபெறுகிறது.   


இக்கோவில் "தென்னக காசி  "என்றும் அழைக்கப்படுகிறது. இப்பொழுது விடுமுறை நாட்களாக இருப்பதனால் இயன்றவர்கள் ஒரு முறை இக்கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. இக்கோவிலை பற்றிய சிறப்புகள் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்