பாமகவின் என்எல்சி போராட்டத்தில் பெரும் வன்முறை.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது

Jul 28, 2023,03:12 PM IST

நெய்வேலி: நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக பாமக சார்பில் இன்று நடத்தப்பட்ட  போராட்டம் வன்முறையாக மாறியது.. போலீஸ் வாகனங்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன, சில போலீஸாருக்குக் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸை போலீஸார் கைது செய்தனர்.


விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை  கண்டித்தும்,என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்திற்காக  வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள்விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.


தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தி வரும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுத்து வரும், கடலூர் மாவட்ட மக்களால் வழங்கப்பட்ட நிலங்களில் நிலக்கரி எடுத்து ஈட்டிய  இலாபம் முழுவதையும் வட மாநிலங்களில் முதலீடு செய்து வரும் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த கடலூர் மக்களின் விருப்பமும், வலியுறுத்தலும் ஆகும். மக்களின் இந்த உணர்வுகளை மதித்து அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு, அதன் ஏவலாளியாய் செயல்பட்டு கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களைப் பறித்து என்.எல்.சிக்கு தாரை வார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தியது. பாதிக்கப்பட்ட மக்களும் இதற்கு எதிராக போராடுகின்றனர். ஆனால், கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சியும் இதுகுறித்தெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவோம் என்று கூறி, இரண்டாவது நாளாக பயிர்களை அழித்து நிலங்களைக் கைப்பற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  இது அவர்களின் அதிகாரத் திமிரையும், என்.எல்.சிக்கு ஏவல் செய்யும் மனநிலையையுமே காட்டுகிறது.


எத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து களமிறங்கிப் போராடும். அதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.


இதையடுத்து அவரது தலைமையில் போராட்டம் நடத்த பாமகவினர் குவிந்தனர், பல்வேறு விவசாயிகளும் போராட்டத்திற்கு வந்திருந்தனர்.  அவர்கள் போலீஸ் தடையை என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.முதலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அது தாக்குதலாக மாறியது. போலீஸார் மீது பாமகவினர் தாக்க முயன்றனர். இதில் சில போலீஸாருக்குத் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. போலீஸ் வாகனமும் தாக்குதலுக்குள்ளானது.


இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்தப் போராட்டம், அன்புமணி கைது, பாமகவினர் தாக்குதலால் கடலூர் முழுவதும் போலீஸார் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளை அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்