தமிழர் திருநாளை  ஏழைகள் கொண்டாட வேண்டாமா?.. டாக்டர் ராமதாஸ் கேள்வி!

Jan 03, 2024,10:36 AM IST

 சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும். கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்துங்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:




தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  மொத்தம் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைகளுக்கு  ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் என்று  தமிழக அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,  ரூ.1000 ரொக்கத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது  ஏழை மக்களிடையே  பெரும் ஏமாற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது. 2022-ஆம் ஆண்டு  தவிர கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்த பொங்கல் ரொக்கத் தொகையை தமிழக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது!


பொங்கல் ரொக்கப் பரிசை நிறுத்துவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை.  கடந்த பல ஆண்டுகளாகவே  பொங்கல் பரிசாக சராசரியாக ஆண்டுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டில் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின்  வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகையை  வழக்கத்தை விட உயர்த்தி தான் வழங்க வேண்டுமே தவிர நிறுத்தக் கூடாது. 


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு  ரூ.1000 வழங்கப்படவில்லை. ஆனாலும் அந்த ஆண்டில் வெல்லம், நெய், முந்திரிப் பருப்பு உள்ளிட்டவை  வழங்கப்பட்டன. அவற்றை வழங்குவதில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அவற்றைத் தவிர்ப்பதற்காகவே  கடந்த ஆண்டில்  வெல்லம்,நெய் உள்ளிட்ட பொருட்களை வழங்காமல் அவற்றை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ள வசதியாக ரூ.1000 வழங்கப்பட்டது. அதை இப்போது நிறுத்துவது எந்த வகையில் நியாயம்?


தமிழ்நாட்டில் ஏழை, பணக்காரர்  வேறுபாடு இல்லாமல் அனைவரும்  பொங்கல் திருநாளை  மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பது தான் பொங்கல் பரிசு வழங்கப்படுவதன் நோக்கம்.  எந்தக் காரணமும் இல்லாமல்  நடப்பாண்டில் பொங்கல் ரொக்கப்பரிசு  நிறுத்தப்பட்டால்,  ஏழை மற்றும் நடுத்தர மக்கள்  தமிழர் திருநாளை எவ்வாறு கொண்டாட முடியும்?  பொங்கல் திருநாளை  ஏழைகள் கொண்டாட வேண்டாமா?


தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, சென்னை புறநகர் மாவட்டங்கள் மற்றும்  தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6000 உதவித் தொகையை வழங்குவதில் ஏராளமான குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.  குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1000 மாத உரிமைத் தொகையும்  தகுதியான பலருக்கு வழங்கப்படவில்லை. அதனால், பொதுமக்கள் மத்தியில் கடுமையாக மனக்குறை நிலவி வரும் சூழலில்,  பொங்கல் ரொக்கப்பரிசு வழங்கப்படாதது  மக்களின் மனக்குறையை கோபமாக மாற்றி விடும் என்பதை அரசு  உணர வேண்டும்.


எனவே, பொங்கல் திருநாளையொட்டி அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குறைந்தபட்சமாக ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்க வேண்டும்.  அத்துடன், முழுக் கரும்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள  கொள்முதல் விலை ரூ.33 போதுமானதல்ல.  அது அவர்களின் உற்பத்திச் செலவைக் கூட  ஈடு செய்யாது. எனவே, செங்கரும்புக்கான கொள்முதல் விலையை  ரூ.50 ஆக உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்