சுகந்தி மனசில் மாற்றம்... புது வசந்தம் (3)

Oct 13, 2025,01:43 PM IST

- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி


பெரியம்மா யாரு வந்திருக்காங்கனு கேட்குறேன்ல பெரியம்மா....... ஆஆ சத்தம் போட்டவாறு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த சுகந்தி புதிய நபர்களின் முகம் பார்த்து நாவைக் கடித்துக் கொண்டாள். பின் இயல்புக்கு வந்தவளாக சாரி வாங்க நீங்க யாருனு தெரியாம கத்திட்டேன் என்றவளை யோசனையோடு பார்த்த மூர்த்திக்கு மதுரையில் புகைப்படத்தில் பார்த்த பெண்ணின் முகம் நினைவுக்கு வரவே ஆமாம் கரெக்ட். இது அந்தப் பெண் சுகந்தி தான் என்று முடிவுக்கு வந்தவராக அவளை ஆர்வத்துடன் ஏறிட்டார்.

அதற்குள் அங்கே வந்த பார்வதி அனைவருக்கும் தேனீர் தந்தபடியே இவளைக்காட்டி அண்ணே நீங்க பார்க்க வந்த சுகந்தி இவ தான்.

எங்கள் வீட்டு மகாராணி என்று மூர்த்திக்கு அறிமுகப்படுத்தினார்.


பெரியம்மா யாரு இவங்க கிசுகிசுப்பான குரலில் சுகந்தி. அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பார்வதியுடன் அங்கு வந்த ராஜமும், முருகேசனும் அமைதிகாக்க அம்மா சுகந்தி வா இப்படி உட்காரு என்றதும் கட்டுப்பட்ட சுகந்தி அவருக்கு சற்று தள்ளி அமர்ந்தாள்.


அம்மா ஐம் மூர்த்தி ஃபிரம் சிதம்பரம். யுவர் பாதர்ஸ் க்ளோஸ் பிரெண்டு. ஐம் ஒன் ஆஃப் ஏ ஃபாரெஸ்ட் ரேன்ஜ் ஆஃபீசர் இன் கேரளா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.


ஓ ரியலி. ஐ நோ தட் மை  பாதர்ஸ் பிரெண்ட்ஸ் அன்டு எ ஃபேமிலி. பட் இதுவரை உங்களைப் பார்த்ததா நினைவில்லையே என்றவள் ராஜம் பக்கம் திரும்பி அம்மா இவர் சொல்வது உண்மையா என்பது போலப் பார்த்தாள்.




அதற்குள் மூர்த்தி தன்னை சுதாரித்துக் கொண்டவராக சுகந்தி வெய்ட். என் நண்பர் பண்டரிநாதன் மூலம் உங்க அப்பா எனக்கும் நெருங்கிய நண்பராகிவிட்டார்.


நான் இதுவரை உங்க அப்பாவை நேரில் பார்த்ததில்லை. பட் தொலைபேசியில் நாங்கள் அடிக்கடி பேசிப்போம் என்ற மூர்த்தியை வியப்புடன் பார்த்தது சுகந்தியின் குடும்பம்.


மூர்த்தி தொடர்ந்தார். உங்க அப்பா உன்னோட ஃபியூசர் பத்தி என்கிட்ட ரொம்ப ஃபீல் பண்ணிப் பேசினாருமா. அதான் உன்னைப்பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன் என்று நிறுத்தினார் மூர்த்தி.


எங்க அப்பா எதுக்கு தேவையில்லாம என்னைப்பத்திக் கவலைப்படணும்?  நான் நல்லா தானே இருக்கேன். 


சுகந்தி நீ என்ன படிச்சிருக்க? 

நான் பி. ஏ. படிச்சிருக்கேன். 

இப்போ என்ன பண்ணிட்டு இருக்கே?

நௌ ஐம் ஒர்க்கிங் இன் எ பிரைவேட் ஸ்கூல் அஸ் டீச்சர்.

குட். உன் கூடப்பிறந்த அக்கா, தங்கச்சி திருமணம் முடிந்துவிட்டது. உங்க பார்வதி பெரியம்மா பெண்களுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. நீ மட்டும் ஏம்ப்பா கல்யாணம் வேண்டாம்னு பிடிவாதம் பிடிக்கிற? என்றவரை முறைத்தாள் சுகந்தி.


அவளைப் புரிந்து கொண்ட மூர்த்தியும் அவளை விடுவதாகயில்லை. தொடர்ந்தார்.


சுகந்தி நீ பார்க்க அழகா லட்சணமா இருக்க. நல்லாப் படிச்சிருக்க. வேலைக்கும் போற. எல்லாத்துக்கும் மேல நல்ல அன்பான, வசதியான கூட்டுக்குடும்பத்தில் இருக்க. எல்லாம் சரி. ஆனால் மூத்த பெண் நீ இருக்க உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வெச்ச விஷயமா ஊர் உலகம் எப்படி எல்லாம் பேசுதுனு தெரியுமா உனக்கு? அந்த வருத்தம் தான் உங்க அப்பா கவலைக்குக் காரணம். என் செல்லப் பொண்ணு சுகந்தி கல்யாணம் பண்ணிட்டா நான் சொந்த ஊர்ல சந்தோசமா செட்டிலாகி விடுவேன் என்று பலமுறை உங்க அப்பா என்கிட்டப் பேசினார் மா. இத்தனை காலம் குடும்பத்துக்காக எல்லா சந்தோசத்தையும் துறந்து ஒரு சன்யாசி போல வாழும் உங்க அப்பாவுக்கு நீ மேலும் மேலும் கஷ்டத்தைத் தரப்போறியா சொல்லு எனக்கேட்டார் மூர்த்தி இயல்பாக.


சுகந்தி அவள் அப்பாவின் செல்லப் பெண். மூன்று வருடத்திற்கு ஒரு முறை இரண்டு மாத விடுமுறையில் அப்பா வீட்டுக்கு வந்து போகும் போதெல்லாம் சந்தோஷத்தில் திளைத்து மகிழ்ந்த தருணங்கள் அவள் கண்முன் நிழலாட அவள் கண்களில் அன்புத் தந்தையின் ஏக்கம் கண்ணீராக வெளிப்பட்டது. 


சுகந்தி நல்லா யோசிச்சு பாரு. உங்க குடும்பத்தில் பெண் பிள்ளைகள் யாரும் பெருசா படிக்கல நீ விரும்பிய ஒரே காரணத்துக்காக வீட்டார் எல்லாரையும் எதிர்த்து உங்க அப்பா உன்னைப் படிக்கவச்சார். நீ கேட்டதை எல்லாம் என்னைப்போல் இங்கு வரும் நண்பர்களிடம் கொடுத்து அனுப்புவார்.


அப்படிப்பட்ட அப்பாவை நீ அழவைக்கிறது சரியா? நீயே சொல்லுமா. நான் நேரடியாக விஷயத்துக்கு வரேன். நீ ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற?  எதுவாக இருந்தாலும் நீ என்கிட்ட தைரியமா மனசு விட்டுப் பேசலாம் சொல்லு மா.


அப்பா எனக்கு ஒரு அக்கா இருக்கா. எட்டாம் வகுப்புக்கு மேல் அவளுக்குப் படிப்பு வரல. இருபது வயசுல எங்க மாமாவை அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க. அக்காவுக்கு ரெண்டு பெண் குழந்தைங்க இருக்கு.போனவருஷம் எங்க மாமா இறந்துட்டார். வாழ வேண்டிய வயதில் எங்க அக்காவை விதவைக்கோலத்தில் இருக்கா., அவள் சொல்ல தனக்கு எதுவுமே தெரியாதது போல் முகத்தை வைத்துக்கொண்ட மூர்த்தி அடக் கடவுளே என்றார் பரிதாபமான குரலில்.


ஆமாம் அப்பா அக்கா, பிள்ளைங்க முகம் பார்த்தாலே எனக்கு கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு தோணுது. அப்புறம் எனக்கு நிறைய ஸ்கூல், காலேஜ் பிரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்க எல்லோரும் இங்க எங்க வீட்டுக்கு வந்து போவாங்க. அஃப்கோர்ஸ் எனக்கு ஆண் நண்பர்களும் உண்டு. நான் அவர்களிடம் ஜஸ்ட் லைக் தட் பிரெண்டா தான் பழகறேன். என் மனதில் எந்தத் தவறான எண்ணமும் இல்லை. பட் இங்க சுற்றியிருக்கும் எங்க சொந்தக்காரங்க எல்லாம் நான் ஆண் நண்பர்களோட கெட்ட சகவாசம் வைத்து ஊர் சுத்துவதாகவும் நான் கெட்ட பெண் என்றும் என் காதுபடவே பேசியதைக் கேட்டுக்கேட்டு எனக்கு கல்யாணம்னாலே வெறுப்பாக இருக்கு அப்பா. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க. எங்க அம்மா எனக்கு எல்லா விதத்திலும் பிரெண்ட்லியா, சப்போர்ட்டிவா இருக்கும் போது என்னால எதையும் தவறாக நினைத்தும் பார்க்க முடியாதுப்பா. என்னை, என் கேரக்டர் பத்தி எங்க அப்பா, அம்மாவுக்கு நல்லாவே தெரியும் பட்சத்தில் நான் ஏன் என்னை நிரூபிக்க மத்தவங்களுக்குப் பயந்து வாழனும்னு நினைத்தேன். இருக்கும் காலம் வரை கஷ்டப்படறவங்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்து சந்தோசமா அம்மா அப்பா கூடவே இருந்திடலாம்னு நினைத்தேன். இப்போதும் அப்படித்தான் இருக்கேன். இது தவறா அப்பா? படபடவெனப் பொரிந்தாள் சுகந்தி.


அம்மா நீ, உன் செயல், உன் எண்ணம் எல்லாம் கரெக்ட் தான். ஆனால் அதை மேற்கொள்ளும் விதம் தான் தவறு.  அம்மா ஊருனு இருந்தா நாலு பேரு நாலு விதமாகப் பேசத்தான் செய்வாங்க. அதுக்கு பயந்து நீ உன் வாழ்க்கைய வீணாக்கலாமா?  உன் அப்பாவுக்காக நீ உன் மனதைக் கொஞ்சம் மாத்திக்கமா. நீ மட்டும் கல்யாணம் பண்ணிப்பாரு. உன்னைக் குறை சொன்ன இதே சொந்தக்காரங்க உன்னைப் போல உண்டானு சொல்லுவாங்க. நீயே அதைக் கேட்கத்தான் போற என்று மூர்த்தி சொன்னதும் சிரித்தாள் சுகந்தி.


சரி பாஸ்ட் இஸ் பாஸ்ட். உன் அப்பா அம்மாவுக்காக நீ நல்ல முடிவெடுப்பேனு நான் நிச்சயமா நம்புகிறேன். உங்க அப்பாகிட்ட நான் என்ன பதில் சொல்லனும்? நீயே சொல்லு. பட் நல்ல பதிலாகச் சொல்லு மா.


என்னைப் பத்திக் கவலைப்படாம எங்க அப்பாவை நிம்மதியா இருக்கச் சொல்லுங்க அப்பா என்றாள் சுகந்தி நிதானமாக.


ஏம்மா என்னை வாய் நிறைய அப்பா அப்பானு கூப்பிடற. ரொம்ப சந்தோசமா இருக்குமா. உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளையா நாங்க பார்க்கணும்?  தயங்காமல் சொல்லுமா., இல்ல உன் மனதில் யாராவது இருந்தாலும் பரவாயில்ல தைரியமாச் சொல்லு. நீ விரும்பும் பையனையே உனக்கு உன் பெத்தவங்க சம்மதத்துடன் கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்றேன் என்ற மூர்த்தியை சுகந்தியின் ஒட்டு மொத்தக் குடும்பமும் வியப்போடு பார்த்தது.


அப்பா எனக்கு கல்யாணம் பிடிக்கல தான். அதுக்காக நான் காதல் கல்யாணம் பண்ணப்போறதா அர்த்தம் இல்ல. எனக்கு எங்க அப்பா அம்மா குடும்பத்தார் சந்தோசம் தான் முக்கியம். என் அப்பா அம்மா சந்தோஷத்திற்காக உங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு நான் என் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்.


எனக்கு மாப்பிள்ளையா வர்றவன் படிச்சவனோ படிக்காதவனோ., ஏழையோ பணக்காரனோ., கருப்போ, சிவப்போ., அழகா இருக்கான்., இல்ல. அதைப் பத்தி எல்லாம் எனக்குக் கவலையே இல்ல. பட் ஒரே ஒரு கண்டிஷன்., இல்லை வேண்டுகோள் என்று நிறுத்தினாள் சுகந்தி.


பரவாயில்லமா. எதுவாக இருந்தாலும் பிராங்க்காச் சொல்லு  மூர்த்தி வினவ தொடர்ந்தாள் அவள்.


அப்பா என்னைக் கட்டிக்கப் போறவனுக்கு  ஸ்மோக்கிங், டிரிங்க்ஸ்னு எந்த பேடு ஹேபிட்ஸ்சும் இருக்கக்கூடாது. அப்படி எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத பையன் யாரும் இருந்தாச் சொல்லுங்க. என் அப்பா அம்மாவுக்காக நான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றாள் சுகந்தி அழுத்தம் திருத்தமாக.


அவள் சொன்னது கேட்டு மூர்த்தி உட்பட அத்தனை பேரும் ஆடிப்போனார்கள்.


அப்பா ஒருவழியா நல்ல பதில் சொல்லிட்டே. இனி உன் எதிர்காலம் எங்க பொறுப்பு. நிச்சயமா நீ  விரும்பியபடி எந்தக் கெட்ட சகவாசமும் இல்லாத பையனாகப் பார்த்து உனக்கு கல்யாணம் பண்றோம்.


உங்க அப்பாவிடம் சொல்ல சேதி ஏதும் இருக்கா?


உங்க நண்பரை அதான் எங்க அப்பாவை எப்போதும் நிம்மதியா சந்தோசமா இருக்கச் சொல்லி நான் சொன்னதாச் சொல்லிடுங்க அப்பா. மன்னிக்கனும் எனக்காக என் பிரெண்ட்ஸ் வெய்ட்டிங். நான் கிளம்பறேன் அப்பா என்றவள் அவரிடம் கைகாட்டிவிட்டுச் சிட்டாகப் பறந்தாள்.


அழகு, கள்ளம் கபடமற்ற பேச்சு, மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் சுபாவம், எப்போதும் சிரித்த முகம் என்று மூர்த்தி எதிர் பார்த்த அத்தனை குணங்களோடும் சுகந்தி அவரின் மனதில் ஆசனமிட்டு அமர்ந்து கொண்டதை உணர்ந்தார் அவர்.

சுகந்தி வெளியேறியதும் ஆளாளுக்கு மூர்த்தியைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.


அம்மா இதுக்கு மேல தாமதிக்க வேண்டாம். உங்க பொண்ணு சுகந்தி தான் எனக்கு மருமகள். நான் முடிவு பண்ணிட்டேன். இப்பவே எங்க வீட்ல பேசி எல்லோரையும் இங்க கிளம்பிவரச் சொல்றேன். நாளைக்கு நல்ல நேரம் பார்த்து எங்க வீட்டாருடன் மீண்டும் பெண் பார்க்க வர்றேன்.


இப்ப நான் மனநிறைவோடு விடைபெறுகிறேன் என்றவர் புறப்பட நடப்பது எல்லாம் கனவா, நனவா என்ற ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தில் மூர்த்திக்கு விடைகொடுத்து அனுப்பியது சுகந்தியின் குடும்பம்!


(தொடரும்)


(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர்.  பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

சுகந்தி மனசில் மாற்றம்... புது வசந்தம் (3)

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

ஜெயிலர் 2.. பிரமாண்ட ஆக்ஷன் திருவிழா.. ரஜினியுடன் இன்னொரு விருந்தும் ரெடியாகப் போகுதாம்!

news

என்னை விட்ருங்க... நான் விலகிக்கிறேன்.. சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்குங்க.. சுரேஷ் கோபி

news

என்னய்யா இது... நகை வாங்குறதா வேணாமா?... நகை விலை உயர்வு குறித்து புலம்பி வரும் வாடிக்கையாளர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்