ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

Oct 14, 2026,02:03 PM IST

- மு.ரம்யா ஆனந்த்


விடியாத இரவிலும் விடியலைத் தேடுபவள்,

விழியோரம் வலியிருந்தும் புன்னகை சூடுபவள்!


குடும்பத்தின் மகிழ்ச்சியில் தன்னையே மறப்பவள்,

குமுறும் தன் ஆசைகளை மனதுக்குள் புதைப்பவள்!


ஆயிரம் பொறுப்புகள் தோள்களில் சுமந்தாலும்,

ஆசையின் சிறகுகளை அகத்தினில் வளர்ப்பவள்!


தடைகள் பல வந்தாலும் தளராமல் நடப்பவள்,

தோல்விகள் முன் நின்றாலும் துணிவோடு ஜெயிப்பவள்!




கண்ணீரை மறைத்துக்கொண்டு காலத்தை நகர்த்துவாள்,

கனவுகளின் வாசலுக்கு நம்பிக்கையால் வழிவகுப்பாள்!


உலகத்தின் பார்வைக்குச் சாதாரணப் பெண்ணவள்,

உள்ளத்தின் உறுதியால் சாதனைகள் படைப்பவள்!


அவளின் மௌனத்திற்குள் ஆயிரம் கதைகள்,

அவளின் முயற்சிக்குள் புதைந்திருக்கும் வெற்றிகள்!


பெண்ணே! உன் கனவுகளைப் புதைத்திடாதே,

பிறர் சொல்லும் வார்த்தைக்காக உன்னை இழந்திடாதே!


உன் பாதை கடினமெனப் பயந்து நின்றிடாதே,

உன் திறமை உன்னுள்ளே உறங்க விட்டிடாதே!


நீயும் ஒரு வெளிச்சம்; உன்னாலும் விடியும்,

நீ விதைத்த நம்பிக்கை ஒருநாள் வெற்றியாய் மலரும்!


கனவுகள் காண்பது உன் உரிமை,

அதை நனவாக்குவது உன் பெருமை!


கனவுகளைத் தொலைக்காத பெண்களே,

காலத்தின் வரலாற்றில் உங்கள் பெயரை எழுதுங்கள்!


(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்