திருப்பரங்குன்றம் கல்தூணில் நாளை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு: அறங்காவலர் குழு கலைப்பு

Nov 27, 2026,03:31 PM IST
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்தூணில் நாளையே கார்த்திகை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவை தற்காலிகமாக கலைக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத காரணத்தால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இன்று (நவம்பர் 27) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் பல்வேறு காட்டமான கருத்துகளை முன்வைத்தனர்.

முன்னதாக, திருப்பரங்குன்றம் கல்தூணில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும், நவம்பர் 24ஆம் தேதி வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டதாகவும், கல்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மீதான விசாரணையின்போது, உச்ச நீதிமன்றம் முக்கிய விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாகத் தெளிவுபடுத்தியது.

உச்ச நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள் மற்றும் வாதங்கள்:

செயல்படுத்தினீர்களா? ஒற்றை வார்த்தையில் பதில்: 





"எங்கள் உத்தரவைச் செயல்படுத்தினீர்களா என்பதை ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்; செயல்படுத்தியிருந்தால் எதற்காக இந்த அவமதிப்பு வழக்கு?" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு, "ஆம், செயல்படுத்தினோம்" எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தீபம் ஏற்றுவதற்கான குழுவைத் தேவஸ்தானம் பரிந்துரைக்காததே தாமதத்திற்குக் காரணம் என்றும், தீபம் ஏற்றுவது தனது பணி அல்ல என்றும் ஆட்சியர் தரப்பில் வாதிடப்பட்டது.

இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை: 

நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே பின்பற்றாமல் இருப்பது அரசியல் அமைப்புச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்றும், இதுபோன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் நீதிபதிகள் எச்சரித்தனர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் மெத்தம் காட்டியதும், அரசியல் அமைப்பு சாசனத்தை குழப்பும் முயற்சியிலும் ஈடுபடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. நீதிமன்ற உத்தரவை மீறி அளிக்கப்பட்ட அறிக்கை மனசாட்சியை உலுக்குவதாகவும், எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் நீதித்துறையின் நீரோட்டத்தை மாசுபடுத்துவதை ஒருபோதும் சகிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையாகக் குறிப்பிட்டது.

தொல்லியல் துறை மற்றும் பாதுகாப்பு விவகாரம்: 

மலைத் தூணைப் பார்வையிடக் காவல்துறை அனுமதிக்கவில்லை எனத் தொல்லியல் துறை தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்ட நிலையில், தொல்லியல் துறையினர் மலை உச்சிக்கு வந்ததற்கான புகைப்பட ஆதாரம் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் வாதிடப்பட்டது. மறுபுறம், மலைப் பகுதியில் அனைத்து பக்தர்களும் தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், மலைப் பகுதி முழுவதும் சிஆர்பிஎஃப் (CRPF) பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பக்தர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நீதிபதிகள் அதிரடி உத்தரவு :

- திருப்பரங்குன்றம் கல்தூணில் நாளையே தீபம் ஏற்ற வேண்டும்.
- திருப்பரங்குன்றம் மலை மற்றும் தர்ஹாவிற்கும் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
- திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவை தற்காலிகமாக கலைக்க வேண்டும்.
- தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி, தீபம் ஏற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
- சுப்ரீம் கோர்ட் உத்தரவை உத்தரவை நிறைவேற்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்