"இது அறிவுலகமா? அல்லது ஊழல் உலகமா?": கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் காரசாரப் பேச்சு

Nov 26, 2026,04:16 PM IST

சென்னை: சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் விஜய், நூலகப் புத்தகங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் கல்வித்துறை முறைகேடுகள் குறித்துக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.


முதல்வர் விஜய் பேசிய முக்கியக் கருத்துகள்:


முதல்வர் விஜய் பேசுகையில், ஊழல் என்பது பழைய விஷயம் தான்; அதை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும் கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும். ஊழலை ஒழிக்க அரசு எடுத்த நடவடிக்கையால் தான் இன்று பலரும் ஆடிப்போயுள்ளனர். ஒவ்வொருவருக்கும் அடிப்படை, கல்விதான்; அப்படிப்பட்ட கல்வித்துறையில் ஊழல் என்பதை எப்படி ஏற்க முடியும்? எந்தத் துறையில் தவறு நடந்தாலும் தவறுதான், அதிலும் கல்வித்துறையில் நடந்தால் அதைப் பார்த்துக் கொண்டு எப்படிச் சும்மா இருக்க முடியும்?




செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி ஆரம்பக் காலத்திலேயே நூலகங்களில் ஊழல் செய்துள்ளனர். AI தொழில்நுட்பம் வளர்ச்சியைக் கொண்டு வரும் என்று பார்த்தால், அதைப் பயன்படுத்தி முறைகேடு புரிந்துள்ளனர். அறிவுலகமா? ஊழல் உலகமா? கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்த முறைகேடுகள் இப்போது ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வருகின்றன. இன்னும் மற்ற நூலகங்களில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளனவோ தெரியவில்லை. இவையெல்லாம் அறிவுலகமா அல்லது ஊழல் உலகமா எனத் தெரியவில்லை.


என்னுடைய டேபிளில் 3 ஃபைல்கள் இருப்பதாகத்தான் கூறினேன்; ஆனால் எதிர்க்கட்சியில் இருந்து உடனே "திறந்துதான் பாருங்களேன்" என்று கூறுகிறார்கள். அதை யார் சொல்கிறார்கள் எனத் தெரியுமா? நகைச்சுவை நடிகர் ராமர் பாணியில், "அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே.." என ஒருவர் இருக்கிறார். ஒவ்வொரு குடும்பத்திற்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும்தான் அரசியலுக்கு வந்தேன். மாணவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் செயல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது; உங்களுடைய அண்ணன் எப்போதும் உங்களை நல்ல வழியில்தான் நடத்திச் செல்வான், தைரியமாக இருங்கள் என்றார்.


மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனை முன்வைத்து முதல்வர் விஜய் முன்வைத்த இந்தக் கருத்துகள், அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்