Tamil Short story: முற்பகல் செய்யின்!

Jun 05, 2026,02:47 PM IST

- ஆனந்தி.ச


அன்று வானம் மூடியே இருந்தது .. மிதமான காற்று மாலினியை தீண்டுவதும் போவதுமாய் இருக்க .. முன்னால் விழுந்த கூந்தல் கற்றைகளை வருடியபடியே கையில் டீ கோப்பையை எடுத்தவள் .. வெளியே வந்து ஊஞ்சலில் அமர்ந்தபடி  டீ ஐ ருசித்து பருக ஆரம்பித்தாள்..


“ ஏம்மா மாலினி ரேஷன் கடை இன்னைக்கு இருக்கா? ” பக்கத்து வீட்டு பகவதியம்மாவின் குரல் கேட்டு திரும்பியவள்.

“ இல்லம்மா இன்னைக்கு பக்ரீத் பண்டிகையில்ல அதனால லீவு” என்றாள்.

“ சக்கரையே கொஞ்சம் கூட இல்ல அதனால போய் வாங்கலாமுன்னுதான் “

“சரி ஒரு கப் நீ தா .. நாளைக்கு வாங்கின உடனே குடுத்துடுறேன் ..”

“ஓ தரேனே அதனால என்னம்மா ? 


சக்கரையை பகவதி அம்மாவிடம் தந்தவள்.” ஏம்மா? உங்க பையனும் மருமகளும் எப்போ அமெரிக்காலேர்ந்து வராங்க ? எனக்கேட்க ..


“இந்த ஜூன் மாசக்கடைசியில வராங்களாம் , பேரனுக்கும் அப்போதான் லீவாம் “ சக்கரையை ரேஷன்லேர்ந்து வாங்கினவுடனே திருப்பித்தரேன் எனக்கூறியபடியே வீட்டுக்குள் செல்ல முற்பட்ட பகவதியம்மாவிடம்,“ 

பரவாயில்லம்மா ஒரு கப் தானே “என்றாள் மாலினி.




திருப்பித்தரேன்னு சொன்னப்புறம் குடுக்காமல் இருந்தால் அது நல்லா இருக்காதும்மா. அப்புறம் நட்புல விரிசல் கூட வந்துடும் என்றபடியே வீட்டுக்குள் சென்றுவிட்டார்கள் பகவதியம்மா.


மாலினி இந்த வீட்டிற்கு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. மிகவும் அமைதியான பகவதியம்மாவை அவளுக்கு மிகவும் பிடிக்கும். தேவையில்லாத பேச்சுக்கள் பேசாத அவரின் குணமும்,பிறருக்கு உதவும் மனமும் எது செய்யாலும் அதை பகிர்ந்து உண்ணும் பாங்கும் அவளை மிகவும் கவர்ந்தவை.


இந்த ஆறு வருடத்தில் அவரின் மகனும் மருமகனும் ஒரே முறைதான்  அந்தம்மாவை பார்க்க வந்திருக்கிறார்கள். அதுவும் அவள் இந்த வீட்டிற்கு வந்த புதிதில் என்பதால், சரியாக பார்த்ததில்லை . கணவனை இழந்த அந்த அம்மாவின் தைரியம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.


ஒர் நாள் கணவன் வெளியூர் சென்றாலே , அவள் குழந்தைகளுடன் தனியாக இருக்க பயந்துகொண்டு அவள் சொந்தங்களை அழைப்பதுண்டு . ஆனால் பகவதியம்மாவோ? மிகவும் தைரியசாலிதான் . அவர்களை பார்த்து கற்று கொள்ளவேண்டும், பெருமூச்சு விட்டபடியே வீட்டிற்குள் சென்று வேலையை தொடர்ந்தாள்.


ஜூன் மூன்றாம் வாரம் முதல் அடுத்தவாரம் மகன் மருமகள் பேரன் வருவார்கள் என்று ஆசை  ஆசையாக அவர்களுக்கு பிடிக்கும் என்பதை பார்த்து பார்த்து செய்ததுமட்டுமல்லாமல் , மாலினிக்கும் அதில் பங்கு கொடுத்தார்கள் பகவதியம்மா.


உண்மையில் அவர் மகன் , மருமகள் பேரன் மிக மிக அதிர்ஷ்டகாரர்கள்தான் என எண்ணினாள் மாலினி. ஐந்து வயது பேரனுக்கு வண்ண வண்ண விளையாட்டு சாதனங்கள்,மகனுக்கு பிடித்த உணவு பண்டங்கள் என பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார்கள்.


மாலினியை அழைத்து கொண்டு மருமகளுக்கு பிடித்த கலரில் புடவைகள் ,டிரஸ்கள் வாங்கி வைத்தார்கள். பகவதியம்மாவின் கணவன் அரசு வேலையில் இருந்து இறந்த காரணத்தினால் அவர்களுக்கு பென்ஷன் வருகிறது .. அவரின் மகன் எதுவும் பணம் அனுப்புவது போல் தெரியவில்லை அதை அவர் எதிர்பார்ப்பதுவும் போலவும் தெரியவில்லை.


பகவதியம்மாவின் மகன் குடும்பம் வரும் நாளன்று, வாசலில் பெரிய கோலன் போட்டு கலர் கொடுத்து கூடவே “வெல்கம்” என்ற வாசகம் எழுதிவைத்ததை பார்த்த மாலினிக்கு பூரிப்பால் கண்களில் நீர் கோர்த்துகொண்டது. ஒரு பதினோர் மணியிருக்கும் அவர்கள் வீட்டிற்கு கார் வந்த சத்தம் கேட்டு எட்டி பார்த்தாள் மாலினி .. காரிலிருந்து இறங்கிய மகனை கட்டி தழுவி பேரனை தூக்கி உச்சி முகர்த்து , மருமகளிடம்,” இங்கயே நில்லுங்கள் “எனக்கூறி, ஆரத்தியை எடுத்து வந்து மாலினியையும் அவள் மாமியாரையும் கூப்பிட்டு ஆரத்தி  எடுக்க சொன்னார்கள். அதன் பிறகு அவர்கள் குடும்பம் உள்ளே செல்ல , மாலினியும் சமைப்பதற்காக உள்ளே வந்துவிட்டாள் . பதினைந்து நிமிடங்களில் கார் செல்லும் ஓசை மட்டும் கேட்டது..


சமையல் முடித்து சாப்பிட்டு மாலினி அசதியில் தூங்கியும் விட்டாள் . மாலை நாலு மணியிருக்கும் “ மாலினி ,மாலினி எனக்குரல் கேட்டு பட்டெனெ எழுந்து பார்க்க பக்கத்து வீட்டு பகவதியம்மா கையில் சில பார்சல்களுடன்  நின்றிருந்தார்கள்.


“என்னம்மா பையன் வந்ததிலேர்ந்து உங்கள கையிலேயே பிடிக்க முடியலையே?  என நமுட்டு சிரிப்புடன் கேட்டவள் , 

கையில உள்ளது என்ன?  உங்க பையன் வாங்கிட்டு வந்ததில என் பங்கா? என பிரகாசமான முகத்தை வைத்து கேட்டாள் .


பதிலேதும் கூறாமல் அவளிடம் ஆரேழு பைகளை மட்டும் எடுத்து நீட்ட, அதை பார்த்த மாலினிக்கோ மிக அதிர்ச்சி.  மகன் மருமகளுக்காக வாங்கிய உடைகள் . பேரனுக்கு வாங்கிய விளையாட்டு பொருட்கள், செய்த பலகாரங்கள் என அனைத்தும் இருக்க.. "என்னம்மா இது? “ என அதிர்ச்சியுடன் கேட்டாள் .


என் பையனுக்கும் மருமகளுக்கும் இந்த வீட்ல வசதி பத்தாதாம் . பக்கத்து ஊரில் உள்ள  மருமகளின் வீட்ல தான் தங்க போறாங்களாம். போகட்டும் மா .. பொறந்து வளர்ந்த வீட்ல வசதி இல்லங்கிறவனுக்கு எதுக்கு மா நான் உபசாரம் பண்ணனும் ?. இது என் புருஷன் காசுல நான் வாங்கினது. நீ எடுத்துக்கோ அந்த விளையாடு பொருட்கள உனக்கு தெரிந்த குட்டி குழந்தைகளுக்கு கொடுத்துடு. 


என்னமோ பாரின் மோகம் இந்த கால பசங்களை மிகவும் ஆட்டி படைக்குது. இந்த ஊருல இல்லாத வேலையா சம்பளமா? இந்த கால புள்ளைங்களுக்கும் மனுசங்க வேணாம் மா காசு மட்டும் போதும் என கூறியவர் கொண்டுவந்த பைகளை வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்..


மாலினிக்கோ மனது மிகவும் வலித்தது .. மனதில் ஓரத்தில் ஒரு கேள்வி மட்டும் ஒலித்துகொண்டேயிருந்தது.பகவதி அம்மாவின் மகனுக்கும் மகன் தானே? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமன்றோ?  கண்டிப்பாக விளையும் . விளைந்தே தீரும்.


(ஆனந்தி ச , பட்டதாரி ஆசிரியர்( ஆங்கிலம்), அ மே நி பள்ளி கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்