- ஆனந்தி.ச
காலை பரபரப்புடன் தொடங்கியது . பள்ளிக்கு வந்தவுடன் காலை வருகைபதிவேட்டில் கையெழுத்திட்டவுடன் நேராக தன் வகுப்பிற்கு செல்வது ஹாசினியின் வழக்கம் . மாணவர்களுடனான கலந்துரையாடலே அன்றைய பள்ளியின் செயல்பாட்டில் முதலாவதாக இருக்கும்.
“ஏய் பிரியா நீ சாப்பிட்டியா”
“வருண் நீ நேற்று ஏன் வரல?”
மதன் உங்கம்மாக்கு உடம்பு சரியில்லேன்னு சொன்னியே? இப்ப எப்படி இருக்கு”
இந்த மாதிரி கேள்விகள் அவளிடமிருந்து வரும். வகுப்பில் உள்ள அனைவரையும் பற்றி ஆராய்ந்து அலசி வைத்திருப்பாள். பாடம் எடுப்பதை விட இது மிகவும் முக்கியமானது. பின்னர் தனது காலை உணவையும் அவர்களுடன் உரையாடியபடியே உண்பாள்.
கொண்டு வந்ததில் பாதி தன் மாணவர்களுக்கே கொடுப்பதும் , சிலருக்கு ஊட்டிவிடுவதும் அவள் பழக்கம். வகுப்பறை தூய்மைகளை மேற்பார்வையிடுவாள் , பின்னர் காலை வழிபாட்டுகூட்டத்திற்கு மாணவர்களுடனே செல்வதும் அவளின் வழக்கம் .. வழக்கம் பழக்கமாகிவிட்டபடியால் , அதுவே இன்றுவரை தொடர்கிறது.
இன்றும் அப்படிதான் ஆரம்பித்தாள்..
வழக்கமாக அவள் வந்து பத்து நிடங்களில் வருண் வகுப்பிற்கு வந்துவிடுவான் .ஆனால் இன்று வரவில்லை . சரி, வழிபாட்டுகூட்டத்திற்கு வந்துவிடுவான் என்று நினைத்து விட்டுவிட்டாள்.
வகுப்பறையில் பாடம் தொடங்கும் முன் வருகை பதிவு எடுக்கும் சமயம்தான் , வருண் இன்று பள்ளிக்கு வரவில்லை எனத்தெரியவந்தது .

செல்போனை எடுத்து வருண் அப்பாவின் தொலைபேசியை எடுத்து டயல் செய்ய , நீங்கள் தொடர்பு செய்த எண்ணிற்கான சேவை தற்பொழுது துண்டிக்கப்பட்டுள்ளது என வரவே போனை துண்டித்தாள். ஒரு வாரமும் ஆயிற்று வருண் வகுப்பறைக்கு வந்தபாடில்லை.
ஹாசினியின் மனது ஏதோ போலிருந்தது.வருண் மிக மிக நல்ல பையன் .. படிப்பு வராதே தவிர படிக்கும் எண்ணமும் , அக்கறையும் ஒழுக்கமும் அவனிடம் நிறைய உண்டு. “ எங்கம்மா குவாரியில வேல செஞ்சுதான் டீச்சர் எங்க குடும்பத்த காப்பாத்துறாங்க “ என அவன் சொன்னபொழுது, “ஏன் உங்க அப்பா வேலைக்கு போகலையா? “ என்றவளுக்கு “அவர் சம்பாதிக்கிறது அவர் குடிக்க மட்டுந்தான் டீச்சர் சரியா இருக்கு “ என்றான்.
அவனுக்கு என்னாச்சு? என்று தெரிந்துகொள்ள ஹாசினிக்கு ஆவல் மேலோங்க , வகுப்பில் உள்ள அனைவரிடமும் அவனை பற்றி விசாரித்தாள்.
அவன் வீடு குவாரிக்கு அங்கிட்டு இருக்கு .. அவன் எங்க வீட்டுக்கு வந்தா தான் தெரியும் என அனைத்து மாணவர்களும் கையை விரித்தனர்.
முதல் பிரீயட் முடிந்து. தனக்கு வரும் இரண்டு பிரீயட்ஸ் ப்ரீதான் என்பதை உறுதி செய்தவள் .. தலைமை ஆசிரியரிடம்
விவரம் கூறி அவன் வீடு தேடி சென்றாள்.
போகும் வழியில் டீச்சர்ர்ர்ர்…. என குரலைக் கேட்டு வண்டியை நிறுத்தினாள் .
அழைத்தது அவளிடம் ஆறு வருடத்திற்கு முன் படித்த மாணவன் ..
“ ஏய் ப்ரவீன் நீ எங்கடா இங்க ? “
“நான் தான் டீச்சர் உங்ககிட்ட கேட்கணும் . இங்குனகுள்ளதான் என் வீடு இருக்கு”என்றவன் “இங்க எங்க டீச்சர் போறீங்க? என்று நலம் விசாரித்தான். குவாரி பக்கத்துல வருண் வீடு இருக்காம் அவனைத்தேடி போறேன் என்றவளிடம்,
“குவாரி பக்கத்துல தனியா எல்லாம் போகாதீங்க நானும் வாரேன் “,என்றவன் அவள் ஓகே சொல்வதற்கு முன் வண்டியில் ஏறி அமர்ந்தான் .
செல்லும் வழியில் கதை பேசிக்கொண்டே போனார்கள் இருவரும்.. பிரவீன் காலேஜ் முடித்துவிட்டதாகவும் மேலும் படிப்பதற்காக பக்கத்திலுள்ள காலேஜில் விண்ணப்பம் வாங்கி வீட்டுக்கு திரும்பும் வழியில் அவளை பார்த்ததாகவும் கூறினான்.
பிரவீனை பார்த்ததில் அளவில்லா ஆனந்தம் அவளுக்கு , மேலும் தன்னிடம் படித்த மாணவன் மேற்படிப்பு படிக்க இருப்பதில் எந்த ஆசிரியரியருக்கு தான் மகிழ்ச்சி இருக்காது?
குவாரியை தாண்டும் பாதையோ மிகவும் கரடு முரடாக இருந்தது .
“பார்த்து டீச்சர் பார்த்து” என அக்கறையாக கூறிக்கொண்டே வந்தான் .
ஒரு வளைவில் திரும்பியவுடன் ஒரு சிறுவன் தலையில் சும்மாடு வைத்து சட்டியில் எதையோ தூக்கிகொண்டு சென்று கொண்டிருந்தான். அவனின் அசைவுகளை வைத்தே அவன் வருண் என்று அடையாளம் கண்டுகொண்டாள் ஹாசினி .
வண்டியை வேகமாக ஓட்டி அவன் முன் சென்று நிறுத்தி “ வருண் நில்லுடா “ என்றாள்.
கூடவே பிரவீனும் அவள் பின்நின்றான்.
அவளை பார்த்த வருண் சட்டியை கீழே போட்டு , டீச்சர் .. என்றவன் நா தழுதழுத்தது.. வார்த்தைகள் வரவில்லை .. அழுகை அடைத்துகொண்டு வர தேம்ப ஆரம்பித்தான்.
“ஏய் ,என்னாச்சு ?”,என்று அவனை அணைத்தவளின் அரவணைப்பில் அன்னையின் அன்பு கலந்திருந்தது..
அவளின் அணைப்பிற்காகவே காத்திருந்தது போல ஒப்பாரி வைத்தான் வருண்.
ஹாசினிக்கோ எதுவும் புரியவில்லை..
“என்னாச்சு நான் இருக்கேன் தைரியமா சொல்லுடா என் தங்கம் “என்றாள்.
“மூணு நாள் முன்னாடி காய்ச்சல்ல இருந்த எங்கம்மா செத்துபோயிடுச்சு.. அம்மா குடும்ப செலவுக்கு குவாரி மேனஜர் கிட்ட கடன் வாங்கிச்சாம் டீச்சர் ,அதனால அந்த காச என்ன வேலை செய்ய சொல்லி அடைக்க சொல்லியிருக்காரு “ என விம்மியபடியே கூறினான் .
ஆமாம் உங்க அப்ப எங்க என்றவளிடம், “அவரு குடிச்சிட்டு அந்த ஆலமரத்தடியில படித்துகிடக்காரு டீச்சர் “ என்று கையை காண்பித்தான்.
“ஆமாம் ,அந்த மேனஜர் எங்க?அவரையும் எனக்கு காட்டு வா “என்றவள் , வண்டியில் பிரவீனுடன் வருணையும் அமர வைத்து மேனஜரிடம் சென்றாள்.
அவரை பார்த்தவுடன் தனது கோபம் உச்சத்தில் எற .. “ஏன் சார் இந்த படிக்கிற வயசு புள்ளைய வேலை பார்க்க வைக்கிறீங்களே ? இது நியாயமா? “என்றாள்.
“அவன் அம்மா ஐயாயிரம் ரூபா கடன் வாங்கிருக்கு அத யாரு கொடுப்பா? நீயா ? “என முறைப்பாய் பேசிய மேனஜரிடம்..
ஐயாயிரம் நான் தரேன் எனப்படாலென கூறியவள் .. இந்த பையனை என்னோட இப்ப ஸ்கூலுக்கு அனுப்புங்க .. சாயந்திரமா அவன்கிட்ட கொடுத்தனுப்புறேன் .. என்றாள் .
சொன்னவள் மேனஜரை ஏறெடுத்தும் பார்க்காமல் வருண் கையை இழுத்துகொண்டே வந்தவள் , பிரவீன் வாடா போகலாம் எனக்கூறி இருவரையும் வண்டியில் ஏற்றி வந்தாள் .
பிரவீன் வீடு வந்தவுடன் இறங்கிய பிரவீன் வருணிடம்” தம்பி நல்லா படிக்கணுமடா படிப்பு தான் நமக்கு பெரிய சொத்து.. டீச்சர் சொல்றத கேட்டு நடந்துக்கோ.. அண்ணன் வீடு இங்குனகுள்ளதான் .. “ தோ தெரியுது பார் ஒரு பனைமரம் அதுக்கு பக்கத்து ஓலைவீடுதான் ..
நான் மேல படிச்சு வேலைக்கு போய் நல்லா சம்பாரிச்சு இந்த ஓல போட்ட போட்ட ஒட்டு வீடாக்குவேன் என்று பெருமிதமாக கூறியவன் .

உனக்கு பாடத்துல ஏதாவது சந்தேகம் ,இல்ல உன்னால வீட்டுல படிக்க முடியலன்னா ,இங்க அண்ணன் வீட்டுக்கு வா நான் பார்த்துக்குறேன் .. என அவன் சொல்லிக்கொண்டே போக .. பிரவீன் இத்தனை முதிர்ச்சியாக பேசுவதை கேட்ட ஹாசினிக்கும் பெருமையாக இருந்தது..
நம்மிடம் படித்தவர்கள் நம் கண் முன்னே வளர்ச்சியடைவதை பார்ப்பதை விட வேறென்னெ வேண்டும் ஆசிரியர்களுக்கு?
வருணுக்கும் ஏதாவது விடுதி தேடி போடவேண்டும் .. வருணிடம் இதைப்பற்றி பேசவேண்டும் இந்த வருடம் முடிந்தவுடன் அதற்கான மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் ,என எண்ணிய படியே வருணுடன் ஹாஸ்யமாக பள்ளிக்கு பறந்தாள் ஹாசினி.
(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)
Tamil Short Story: மௌனத்தின் மரணம்
Tuesday Thoughts: விசேஷங்களுக்கு செல்வது விருந்துக்காக அல்ல; உறவுக்காக!
வேறென்ன வேண்டும்?
ஒப்பற்ற ஆசிரியர்.. போதனையே பிரதானம்.. கேசிஆர் தமிழ்நாட்டு பாடநூல் உறுப்பினரான கதை!
பாலைவனத்தில் பூத்த நந்தவனம்!
அதிமுகவினரின் வேதனை போதும்.. இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.. ராஜ் சத்யன்
பிரேமலதா விஜயகாந்த் கேட்டிருந்தால், விஜய் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பாரா??
புதிய கட்சி துவங்குகிறாரா அண்ணாமலை?.. பாஜக தலைவரை சந்திக்க டெல்லி விரைந்தார்
ADMK to TVK: அதிமுக வினர் தவெகவில் இணைவது ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
{{comments.comment}}