Book Review: நில் கவனி நேசி.. படிச்சுப் பாருங்க.. மாற்றத்தை உணர்வீங்க!

Jul 21, 2026,04:24 PM IST

- சு. யாமினிப்பிரியா


புத்தகத்தின் பெயர்- நில் கவனி நேசி.

சிறார் நாவல் 

ஆசிரியர் பெயர்- பூங்கொடி பாலமுருகன்

காக்கை கூடு பதிப்பகம்

விலை 80

பக்கங்கள் 69


நில் கவனி நேசி என்ற தலைப்பும், பார்வைக்கும் மனதிற்கும் இதமான அட்டை படமும், அந்தப் புத்தகத்தின் மேல் ஒரு ஈர்ப்பை உண்டாக்கியது.


சுழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம் ஐயா அவர்களின் வாழ்த்துரை என்பது இந்த புத்தகத்திற்கான முன்னோட்டமாக புரிந்து கொள்ள முடிந்தது.


அதனைத் தொடர்ந்து வரும் ஆசிரியரின் என்னுரை என்பது அவரது மனதின் பிரதிபலிப்பாகவும் அதில் வரும் தாத்தா  கதாபாத்திரத்திற்கு சதாசிவம் என்று பெயரிட்டு இருப்பது, அவர் மனிதர்களின் மேல் வைத்திருக்கும் மரியாதையையும் அதனை அங்கீகரிப்பதையும் உணர்த்துகிறது.




சுழலியல் சார்ந்த கருத்துக்களை அப்படியே சொல்லும்போது, அனைத்து தரப்பினருக்கும் ஒரே மாதிரி சென்று சேரும் என்பது உறுதியல்ல. ஆகையால் ஆசிரியர் இங்கு எடுத்துக்கொண்ட களம் என்பது தாத்தா பேரன் இடையேயான உரையாடல். இதன் மூலம் அதை அழகாக எடுத்துச் செல்கிறார்.


கதையில் வரும் முக்கிய இரண்டு கதாபாத்திரங்கள் தாத்தா மற்றும் மாறன். மாறன் தனது அரையாண்டு விடுமுறைக்கு சூலூரில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வருகிறான். கிராமத்தில் தங்களைச் சுற்றி இருக்கும் இயற்கை சூழ்நிலைகளைக் கொண்டு தாத்தா எவ்வாறு எளிமையான உரையாடல்கள் மூலம் உயிரினங்களின் முக்கியத்துவம் பற்றியும், உணவு சங்கிலி பற்றியும் மாறனுக்கு புரிய வைக்கிறார் என்பதாக இக்குறு நாவல் பயணிக்கிறது.


தற்காலத்தில் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய சவால் என்பது எப்படி குழந்தைகளை அலைபேசியிலிருந்து மீட்டெடுத்து மடை மாற்றுவது என்பது.


இப்புத்தகத்தில் வரும் மாறன் மற்றும் தாத்தா ஆகிய கதாபாத்திரங்கள் மூலம் குழந்தைகள் பறவை காணுதல் செயல்பாட்டில் கட்டாயமாக  தங்களை ஈடுபடுத்திக் கொள்வர்.


நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் சுவாரஸ்யத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் குழந்தைகளுக்கு உணர வைத்து விட்டாலே, குழந்தைகளுக்கான தேடல் அதனை தொடர்ந்து அவர்களது லட்சியங்களையும் வகுத்துக் கொள்கின்றனர்.


இந்த சிறார் நாவல் பத்து அத்தியாயங்களாகவும் ஒவ்வொரு அத்தியாயத்தின் கீழ் ஒவ்வொரு ஆளுமைகளின் பறவைகள் பற்றிய கூற்றினை வாசிப்பது என்பது ஒரு புது அனுபவமாக இருக்கிறது. இப்புத்தகத்தில் வரும் பறவைகள் ஏராளம். முதலாவதாக  இரட்டைவால் குருவி, எதனால் இந்த பறவைக்கு இந்த பெயர் வந்தது என்பது சுவாரசியம்.


அடுத்ததாக வரும் தையல் சிட்டு என்ற பறவையை பற்றி அறிதல் என்பது வியப்பின் உச்சம்.


இதுவரை மண்புழுதான் விவசாய நண்பன் என்று அறிந்திருந்த எனக்கு ஆந்தை ஒரு விவசாயின் நண்பன் என அறிந்து கொண்டது ஒரு சிறப்பான அனுபவம்.


நாவலில் உரையாடல்கள் மட்டுமே இருந்தால் குழந்தைகளுக்கு சுவாரஸ்யம் குறைவாக இருக்குமோ என எண்ணி ஆசிரியர் அடுத்ததாக புதிய உத்தியை கையாளுகிறார். நாலாவது அத்தியாயத்தில் ஒரு பாடல் மூலம் அடுத்ததாக ஆள்காட்டி என்னும் பறவையை அறிமுகம் செய்கிறார்.


இந்த ஆள்காட்டி பறவையைப் பற்றிய நிறைய பாடல்கள் சங்க கால இலக்கியங்களில் இருக்கிறது என்பது கூடுதல் தகவலாக பிரமிப்பை ஏற்படுத்தியது.


யாருக்கு தான் கொக்கு என்றால் பிடிக்காது. இது நாள் வரையில் எனக்கு தெரிந்தது என்னவோ, ஒற்றைக்காலில் நிற்கும் வெள்ளை கொக்கு. தாத்தா மூலம், மாறன் மட்டும் ஐந்து வகையான கொக்குகளை அறிந்து கொள்ளவில்லை, இந்த புத்தகம் படிக்கும் வாசகர்களும் ஐந்து வகையான உண்ணிக் கொக்கு, குருட்டு கொக்கு, சின்ன கொக்கு ,நடுத்தர கொக்கு மற்றும் பெரிய கொக்கு என அறிவது புது அனுபவம்.


அடுத்ததாக ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் வீடு என்ற தலைப்பில் மனிதர்கள் மட்டும்தான் கூட்டு குடும்பமாக வாழ முடியும் என்ற கருத்து நிலவிக் கொண்டிருக்கும்போது பறவைகளில் கூட்டுக் குடும்பமாக வாழும் பறவை உள்ளது என்பது குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய ஒரு அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் என உணர்த்தும் வகையாக சிலம்பன். ஏழு முதல் 10 பறவைகள் ஒன்றாக வாழும் தன்மை கொண்ட பறவைகளாக இருப்பதால் இதனை ஏழு சகோதரிகள் என்ற பெயரும் இருப்பதாக அறிகிறோம்.


புத்தகத்தை வாசிக்கும் குழந்தைகளுக்கு சற்றும் சுவாரசியம் குறையாமல் இந்த கதையை எடுத்துச் சென்ற ஆசிரியருக்கு பாராட்டுக்கள். ஏனெனில் உரையாடல், பாடல் அதனைத் தொடர்ந்து விடுகதைகள் மூலமாகவும் கதை அழகாக பயணிக்கிறது.


அடுத்ததாக நுண்ணிய பொறியாளர் ஆன தூக்கணாங்குருவி பற்றி சதாசிவம் தாத்தா குழந்தைகளுக்கு எடுத்துரைக்கிறார். இந்தப் பகுதி என்பது வாசிப்பவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஒரு பேராச்சரியமாக உணர்வார்கள். இவ்வளவு நுட்பமான தூக்கணாங்குருவி கூடு என்பது குழந்தைகளின் மனதில் எவ்வாறான உணர்வினை ஏற்படுத்தும்.


தூக்கணாங்குருவியின் வாயில் வடக்கு புறமாக இருந்தால் அந்த வருடம் தென்மேற்கு பருவமழை அதிகமாக இருக்கும் என்றும் அதாவது மழைக்காலங்களில் காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் தான் இதனுடைய வாயில் பகுதி இருக்கும் என்று அறிவது பிரம்மிப்பின் உச்சம்.


குழந்தைகள் எவ்வாறு பறவை காணுதல் நிகழ்வை மேற்கொள்ள வேண்டும் எவ்வாறு குறிப்பெடுக்க வேண்டும். குறிப்பு எடுத்த பின் எவ்வாறு அந்தப் பறவைகளை ஒரு பறவைகள் சார்ந்த புத்தகத்தின் மூலம் அடையாளம் காணுதல் என்று குழந்தைகள் உணரும் வண்ணம் சதாசிவம் ஐயா விளக்கிக் கூறுகிறார்.


இறுதியாக பறவைகளைப் பற்றியும் அதன் வாழ்விடங்கள் பற்றியும் அதன் வாழ்க்கை முறையும் பற்றி அறிந்த குழந்தைகள் மற்றும் தாத்தா முதுமலைக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றனர். அங்கும் ஒரு சில பறவைகள் எப்படி அழிவின் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதை அறிந்து கொள்கின்றனர். எப்படி கால்நடைகளுக்கான வலி நிவாரணம் மாத்திரைகள் பாறுக் கழுகுகள் அழிவிற்கு காரணமாகின்றன என்பதை குழந்தைகளும் வாசகர்களும் சதாசிவம் ஐயா மூலம் அறிந்து கொள்கின்றோம்.


இறுதியாக இந்த புத்தகம் என்பது சிறார் நாவலாக இருந்தாலும் கூட அனைத்து தரப்பினரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவலாக இருக்கிறது.


ஆசிரியர் கையாண்டுள்ள மொழி நடையும் அதனைக் கொண்டு சென்ற விதமும் கட்டாயம் வாசிப்பவர்களுக்கு தொய்வில்லாமல் இறுதி வரை ஒரு நல்ல வாசிப்பு அனுபவமாக இருக்கிறது.


இந்த இந்த நாவலை படித்து முடித்த பின் கட்டாயம் மனதளவில் ஒரு மாற்றத்தை உணர முடிகிறது. இந்த வாசிப்பு அனுபவத்தை தொடர்ந்து கட்டாயம் நம் கண்கள் நம்மைச் சுற்றியுள்ள  பறவைகளை கூர்ந்து கவனிக்கும் என்பது திண்மம்.


(சு.யாமினி பிரியா, கோயம்புத்தூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்