சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் திருட்டு: அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!

Sep 24, 2026,11:30 AM IST

பத்தினம்திட்டா : பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமிக்குச் சாத்தப்படும் 55.72 சவரன் மதிப்புள்ள தங்கக் கிரீடம் திருடப்பட்டு, அதற்குப் பதிலாகப் போலி கிரீடம் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   


திருவாபரணக் கணக்கீட்டில் அம்பலமான உண்மை :

சபரிமலை கோயிலில் உள்ள திருவாபரணங்கள், நகைகள் மற்றும் காணிக்கைப் பொருட்களின் கணக்கீடு மற்றும் சரிபார்ப்புப் பணிகள் வழக்கமாக நடைபெறுவது உண்டு. அவ்வாறு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்கக் கிரீடத்தின் எடையிலும், அதன் தரத்திலும் சந்தேகம் எழுந்தது.இதனைத் தொடர்ந்து நிபுணர்களைக் கொண்டு தீவிர பரிசோதனை செய்த போது, மூலவர் திருவாபரணப் பட்டியலில் இருந்த அசல் தங்கக் கிரீடம் மாயமாகி, அதற்குப் பதிலாகப் போலியான கிரீடம் மாற்றி வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.   


தமிழ்க்கொடையாளரின் காணிக்கை:




காணாமல் போன இந்த தங்கக் கிரீடம், கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவரால் சபரிமலை ஐயப்பனுக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டது ஆகும். இதன் எடை சுமார் 55.72 சவரன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இறைவனுக்குப் பக்தியுடன் வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க திருவாபரணம் திருடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.   


பாதுகாப்புச் சொதப்பல் :

கோயில் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு கேமராக்களும் (CCTV) பொருத்தப்பட்டிருந்த போதிலும், இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன. சந்தேகத்திற்குரிய நபர்கள் கோயில் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி இத்திருட்டை அரங்கேற்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தக் கிரீடம் வைக்கப்பட்டிருந்த பகுதி சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத பகுதி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நகையை மாற்றியுள்ளனர். ஏற்கனவே சபரிமலை கோவிலில் பதிக்கப்பட்டுள்ள தங்க தகடுகள் திருடப்பட்டு, அதற்கு பதில் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பி, விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது திருவாபரணமும் திருடப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  


தீவிர விசாரணை :

இச்சம்பவம் குறித்துத் தேவஸ்வம்போர்டு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கோயில் ஊழியர்கள், திருவாபரணப் பாதுகாப்பாளர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோயில் திருவாபரண அறையில் உள்ள மற்ற நகைகளின் பாதுகாப்பும் தற்போது தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு வருகிறது.கோயில் பாதுகாப்பில் நிகழ்ந்துள்ள இந்த மிகப்பெரிய வீழ்ச்சி குறித்து பக்தர்கள் தங்கள் கவலையையும், வேதனையையும் தெரிவித்து வருகின்றனர். குற்றவாளிகளைக் கண்டறிந்து, அசல் தங்கக் கிரீடத்தை மீட்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்