சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

Oct 09, 2026,02:36 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


கொங்கு நாட்டு பாரம்பரியமான உணவு ஒன்றை இன்று பார்க்கப் போகிறோம். கொங்கு நாட்டின் பாரம்பரியமான சந்தகைதான் அது. சந்தவம் என்று மற்றொரு பெயரும் இதற்கு உண்டு.

  

அதுக்கு முன்னாடி ஒரு குட்டிக் கதை..


திலகா பாட்டிக்கு மிகவும் சந்தோஷம். ஏனெனில், மகள் ஸ்வேதாவும், பேரன் சரத்  (8 ஆம் வகுப்பு ) ஹைதராபாத்தில் இருந்து விடுமுறைக்கு  தன் வீட்டிற்கு  வருகிறார்கள். அதிகாலை எழுந்து தடபுடலாக  ஸ்பெஷலாக, பாரம்பரியமான  உணவுகள் சமைத்து தரவேண்டும். 


மனம் முழுவதும் சந்தோஷம், குதூகலத்துடன் அவர்கள்  தன்னுடன்  தங்கும் ஐந்து  நாட்களுக்கும்  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு சமைத்து தர வேண்டும் என்று பட்டியலிடுகிறாள். இன்னும் சற்று நேரத்தில் மகளும்,பேரனும் வந்துவிடுவார்கள் என்று மிக ஆர்வத்துடன் ஆசை ஆசையாக சந்தகை முதல் நாள்  செய்யலாம்   என்று மனதில் பூரிப்புடன், சிரித்த முகத்துடன்  கிச்சனுக்குள் செல்கிறாள். 


வாங்க நாமளும் கிச்சனுக்குள் புகுந்து வேடிக்கை பார்ப்போம்.


திலகா பாட்டி செய்த கொங்கு நாட்டு ஸ்பெஷல் சந்தகை ரெசிபி இதோ..


சந்தகை செய்ய தேவையான பொருட்கள் & செய்முறை பார்ப்போமா :




1.இட்லி அரிசி 4 கப் நன்றாக கழுவி சுமார் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

2. இட்லி அரிசியை (ஊறிய) கிரைண்டரில் அரைத்துக் கொள்ள வேண்டும். (குறிப்பு: மிக்ஸியில் போடுவதாக இருந்தால் மிகவும் நைசாக போட்டுக் கொள்ளவும். )

3. சிறிது உப்பு போட்டு கலக்கி கொள்ள வேண்டும்.( மிகவும் கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தண்ணீர் பதமாக  இருக்க வேண்டும் )

4. பின்னர் இட்லி பானையில் ஒவ்வொரு தட்டிலும் மாவை ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

5. இட்லிகள் சூடாக இருக்கும் போதே சந்தகை பிழியும் மிஷினில் குழலில் சிறிது எண்ணெய் தடவி  ஒவ்வொன்றாக போட்டு பிழிய வேண்டும்.பூ போல சந்தகை வெள்ளை வெளேர் என்று  அருமையாக வரும்.

6. சந்தகை பிழிந்து ஒரு ஹாட் பாக்ஸில் வைக்க வேண்டும்.


இனிப்பு சந்தகை செய்முறை:


1. ஒரு மூடி தேங்காய் துருவலை  சிறிது வெதுவெதுப்பான நீர்  சேர்த்து மிக்ஸியில் அரைத்து (நெட் கிளாத் ) வடிகட்டிக் கொள்ள வேண்டும்.


( வெதுவெதுப்பான நீர் சேர்க்க தேங்காய்ப்பால் கெட்டியாக வரும்.)


2. நாட்டுச் சர்க்கரை அல்லது சர்க்கரை அல்லது பனைவெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும். 


3.பொட்டுக்கடலை (வறுகடலை) பொடி செய்யவும்.


சரி கதையை கன்டினியூ பண்ணுவோம்..


ஸ்வேதாவும் பேரன் சரத்தும் திலகாப்பாட்டி வீட்டிற்கு வந்து விட்டனர். அவர்களைக் கட்டித் தழுவி  கொஞ்சுகிறாள். பின்னர் சிறிது நேரம் கழித்து ஃப்ரெஷ்ஷப்  ஆயிட்டு வாங்க சாப்பிடலாம் என்று கூறுகிறாள்.


சூடான சந்தகை போட்டு அதன் மேல் பொட்டு கடலை பொடி  இரண்டு ஸ்பூன் போட்டு,பிறகு கமகமக்கும் ஏலக்காய் வாசனை உடைய  தேங்காய் பால் ஊற்றி, பேரனுக்கு ஆசையாக ஊட்டுவதற்காக  எடுத்து வருகிறாள்.


அதனைப் பார்த்ததும் சரத், பாட்டி! என்ன இது? எனக்கு இதெல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்லை. இது நூடுல்ஸ் இல்லையே! என்று கூறுகிறான். எனக்கு நூடுல்ஸ் தான் பிடிக்கும் இதெல்லாம் பிடிக்காது என்று கூறுகிறான்.




உடனே திலகா பாட்டி அதிர்ச்சி ஆகிறாள். பேரனுக்கு எப்படியாவது இதனை ஊட்ட வேண்டும் என்று சரத் கண்ணா... இதுதான் நூடுல்ஸோட மம்மி என்று கூறுகிறாள். தெலுங்கில் இதற்கு பெயர் ஜந்தக்கல். இதை சாப்பிட்டு பார் ஒருவாய் எடுத்துக்கொள் பிறகு சொல் என்று சரத்தை தலையில் கோதியபடி முத்தமிட்டு அன்புடன்ஊட்டி விடுகிறாள்.


சரத் சாப்பிட்டுவிட்டு பாட்டி வெரி டேஸ்டி. ஸ்வீட் நூடுல்ஸ் செய்து இருக்கிறாயா? என்று  பாட்டியை கட்டி அணைத்து முத்தமிடுகிறான். பிறகு அந்த தட்டில் இருந்த சந்தகை முழுவதையும் சாப்பிட்டு முடித்து விட்டான். இன்னும் கொஞ்சம் வேண்டும் பாட்டி மிகவும் டேஸ்டாக இருக்கிறது. "My ThilagaAvva is always very sweet" என்று கூறி இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு.. கேட்டு.. சாப்பிடுகிறான்.


திலகா பாட்டிக்கு அவ்வளவு சந்தோஷம். தன் கணவரும், தன்மகளும், பேரனும் ரசித்து உண்பதை பார்த்து அவ்வளவு மகிழ்ச்சி.

 

இவ்வாறு சமைக்கும் பொழுது அன்பும், பாசமும் சேர்த்து சமைக்க பிறர் ரசித்து உண்பதை பார்த்தாலே சந்தோஷம் தானே  ஃப்ரெண்ட்ஸ்.


நீங்களும் திலகா பாட்டி செய்த இந்த பாரம்பரியமான கொங்கு நாட்டு ஸ்பெஷல் சாஃப்ட்டான சந்தகை செய்து சாப்பிடுங்கள். 


மேலும் இது போன்ற சுவையான சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்