திமுக - அதிமுக.. பிரிந்து வந்து பிறந்த புதுக் கட்சிகள்.. லேட்டஸ்ட்டாக இணைந்த சசிகலா!

Feb 25, 2026,10:35 AM IST

சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் ஒரு காலத்தில் கோலோச்சி வந்தது காங்கிரஸ். ஆனால் அதன் பிறகு எழுந்த திராவிட அலை, காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளி விட்டது. தி.க.விலிருந்து புறப்பட்டு வந்த அரசியல் இயக்கமான திமுக பின்னாளில் பல பிளவுகளைக் கண்டது. அதில் முதன்மையானது அதிமுக. பின்னர் இந்த இரு கட்சிகளிலிருந்தும் இப்போது வரை ஏதாவது ஒரு புதுக் கட்சி பிறந்து கொண்டேதான் இருக்கிறது.


திராவிட கழகம் என்பது ஒரு சமுதாய இயக்கமாக இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிலிருந்து பிரிந்து வந்த பேரறிஞர் அண்ணா உருவாக்கிய அரசியல் கட்சிதான் திமுக. திமுகவிலிருந்து பின்னாளில் எம்.ஜி.ஆர் பிரிந்து சென்று அதிமுகவை உருவாக்கினார். அதன் பின்னர் இந்த இரு கட்சிகளும் தமிழ்நாட்டின் இரு பெரும் அரசியல் துருவங்களாக மாறின. இன்று வரை இந்த நிலை நீடித்து வருகிறது.


திமுக - அதிமுகவிலிருந்து புதுப் புதுக் குழந்தைகள்




திமுகவிலிருந்தும், அதிமுகவிலிருந்தும் பல கட்சிகள் பிறந்து வந்துள்ளன. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதாவது ஒரு தலைவர் அதிலிருந்து வெளியே வந்தபடிதான் உள்ளார். 


திமுகவைப் பொறுத்தவரை அதிலிருந்து பிரிந்து உருவெடுத்த மிகப் பெரிய இயக்கம் என்றால் அது அதிமுக மட்டும்தான். 1972ல் அதிமுக பிறந்தது. திமுகவுக்கே சவால் விட்டு பல முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்த இயக்கம் அதிமுக. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதற்கேற்ப திமுகவுக்கு சவாலாக விளங்கிய இயக்கம் அதிமுக.


திமுகவிலிருந்து பின்னர் பிரிந்து வந்த இன்னொரு முக்கிய இயக்கம் மதிமுக.  அக்கட்சி பிறந்தபோது, வைகோ திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய பரபரப்பும், சலசலப்பும் நிலவியது. திமுக மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கப் போவதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது, எழுதப்பட்டது. அதிலும் வைகோ நடத்திய பாத யாத்திரையின்போது தமிழ்நாடே சேர்ந்து அவருடன் நடப்பது போல பிம்பமும் உருவாக்கப்பட்டது. ஆனால் மதிமுகவின் இன்றைய நிலை அனைவரும் அறிந்ததே. அதே திமுகவுடன்தான் கூட்டணியில் உள்ளது மதிமுக.


வைகோ - டி ராஜேந்தர்




வைகோவுக்கு முன்பே திமுகவிலிருந்து பிரிந்து வந்து தனிக் கட்சி கண்டவர் அப்போது மிகப் பெரிய திரைப் பிரபலமாக விளங்கிய டி.ராஜேந்தர். முதலில் அவர் தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். குட்டி பரபரப்பையும் ஏற்படுத்தினார். பின்னர் அந்தப் பரபரப்பு அடங்கிப் போனது. அதே ராஜேந்தர் பின்னர் மேலும் ஒரு புதிய கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சிக்கு லட்சிய திமுக என்று பெயரிட்டார். அதுவும் பெரிதாக சோடை போகவில்லை.


திமுகவிலிருந்து உருவான கட்சிகள் இவ்வளவுதான்.. இவை மட்டுமே பெரிதாக தெரிந்த பரபரப்புகள்.. ஆனால் அதிமுகதான் மிகப் பெரிய அளவிலான பிளவுகளை, பிரிவுகளைச் சந்தித்துள்ளது. ஆனால் அவை எதுவுமே பெரிதாக சோபிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஜானகி - ஜெயலலிதா




அதிமுகவில் ஏற்பட்ட முதல் பெரிய பிளவு என்றால் அது எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் உருவான ஜானகி அணி, ஜெயலலிதா அணிதான். அந்த இரு அணிகளும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு மிகப் பெரிய தோல்வியை ஜானகி அணி சந்தித்தது. ஜெயலலிதா அணி சற்றே சோபித்தது. இதனால் ஜானகி அரசியலை விட்டு விலகினார். ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒன்றாக இணைந்து விட்டது. இன்று வரை அந்த அதிமுக அதே வலிமையுடன் திகழ்கிறது.


ஜா - ஜெ அணிகளுக்குப் பிறகு அதிமுகவில் சிறு சிறு பிரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. நாவலர் நெடுஞ்செழியன் தனி அணியாகப் போனார், பின்னர் திரும்பி வந்தார். எஸ்.டி. சோமசுந்தரம் தனித்துப் போனார். பின்னர் திரும்பினார். ஆர்.எம். வீரப்பன் தனித்துப் போனார். பிறகு திமுகவுடன் இணக்கமானார். இயக்குநர் கே.பாக்யராஜ் தனிக் கட்சி கண்டார். 


எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பன்னீர்செல்வம்




ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மிகப் பெரிய வலிமையுடன் திமுகவுக்கு கடும் சவாலாக விளங்கி வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மீண்டும் அதிமுக பல சோதனைகளை சந்திக்க ஆரம்பித்தது. அது இன்று வரை தொடர்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பல அணிகள் உருவாகின. அதில் முதலில் உருவான பிரதான அணிகள் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு.


சசிகலா சிறைக்குப் போன பின்னர் டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணி உருவானது. ஓ.பி.எஸ். தனியாக பிரிந்து போனார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். அவரது தலைமையிலான அணி தினகரன், சசிகலாவை கட்சியை விட்டு நீக்கி அதிரடி காட்டியது. அங்குதான் எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி ஆரம்பமானது. அதன் பிறகு சசிகலா அணி, தினகரன் அணி, ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என பல அணிகள் உருவாகின. இடையில் தீபா தலைமையில் ஒரு புது அணியும் செயல்பட்டு வந்தது.


சசிகலா - தினகரன்




காலப் போக்கில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்து அமைதியாகி விட்டார். தினகரன் அமமுக என்ற புதுக்கட்சியைத் தொடங்கி விட்டார். ஓபிஎஸ் அதிமுக உரிமை மீட்புக் குழு என்ற குழுவை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி கம்பீரமாக வலம் வருகிறார்.


இடையில் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களோடு தவெக கட்சியில் இணைந்து விட்டார். அவரது பிரிவும், நீக்கமும் அதிமுகவுக்கு பாதகத்தை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. அதிகபட்சம் ஈரோடு பகுதியில் ஏதாவது தாக்கம் இருக்கலாம்.


இந்த நிலையில் தற்போது சசிகலா மீண்டும் அரசியல் பக்கம் வந்துள்ளார். புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அவரது குறி எடப்பாடி பழனிச்சாமி என்பதை தனது முதல் கூட்டத்திலேயே தெளிவாக குறிப்பிட்டு விட்டார். அவர் கூறிய பல தகவல்கள் பரபரப்பை கிளப்புவதாக உள்ளன. அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் அளிக்கப் போகும் விளக்கத்தை தமிழ்நாடே எதிர்பார்த்துள்ளது. 


சட்டசபைத் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை கட்சிகள் பிறக்கப் போகின்றனவோ தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது - முதலமைச்சர் முக ஸ்டாலின்!

news

வாடிக்கையாளர்களை கலங்கடித்து வரும் தங்கம் விலை... இன்றும் உயர்வு தான்!

news

திமுக - அதிமுக.. பிரிந்து வந்து பிறந்த புதுக் கட்சிகள்.. லேட்டஸ்ட்டாக இணைந்த சசிகலா!

news

ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ10,000 வழங்கப்படும்:எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

news

இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்

news

வேலூர் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில் தாமதமா?.. போலீஸ் தந்த விளக்கம்

news

ரயில் சேவை ரத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது: கனிமொழி

news

இனி எண்ட ஸ்டேட் கேரளா இல்ல .. கேரளம்.. பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

news

தென் தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்