குச்சு வீடு!

Oct 02, 2026,04:47 PM IST
- சசிகலா விஸ்வநாதன்

மொத்தமே அறுநூறு சதுர அடியில்  ஒரு சிறிய வீடு. அந்த காலத்தில் கையிலிருந்த இருபதாயிரம் ரூபாயை கான்ட்ராக்டர் பத்மநாபனிடம் கொடுத்து, "ஐயரே! இந்த வருஷம் வெள்ளாமை நல்லா இருந்துச்சு. பணம் கையில் நிக்கிற நேரத்தில இருக்க ஒரு குச்சு வீடாவது கட்டணும்னு தோணிடுச்சு.  இனிமேல் குடக்கூலி கொடுத்து  கட்டுப்படி ஆகாது. இந்த பணத்துக்குள்  ஒரு வீடு கட்டி கொடுத்துடுங்க. 

நல்ல தண்ணி குழாய், புழங்க முற்றம், குளியலறை கக்கூஸ் , சமையலறை, ஹால், ரெண்டு  ரூம்புக வேணும். அல்லா ரூம்புகளிலும் பரண் போட்டுடுங்க கட்டிடம் காத்திரமாக இருக்கட்டும். வீடு வெளிச்சமாக இருக்கணும்.  வேறு பெரிய அந்தஸ்து வசதி எல்லாம் வேண்டாம். 

மெட்ராஸ் சீலிங் போட்டு, கொல்லை பக்கமா மொட்ட மாடிக்கு படிக்கட்டு வெச்சுருங்க. இந்த இடத்தில் நட்டநடு நாயகமாக கட்டிடுங்க. செலவு மீறும் போயிருந்தா, ஒரு ரூம்பை கொறச்சுக்கங்க. பணம் அம்புட்டுதான் இருக்கு. கடன் எதுவும் வாங்க தோது இல்லை. நாங்களும், ரெண்டு பசங்களும் தானே கணக்கு வழக்கெல்லாம் எனக்கு வேண்டாம்.  பாத்துக்கிடலாம்." என்று, அப்பா,அவரிடம் சொன்னது இப்பவும் காதில் ஒலித்தது. 





கான்ட்ராக்டர் பத்மநாபன் தயவால் ஒரே வருஷத்தில் புது வீடு கட்டி குடி போனது, எல்லாம் நான் எட்டாவதோ, ஒன்பதாவதோ படிக்கும் போது நடந்தது. அப்பா அம்மா காலத்துக்குப் பிறகு  வீடு பூட்டியேதான் இருந்தது. இந்த வீட்டை கொடுத்துடலாமா;  என்ற யோசனையில், நானும் தம்பியும் அவரவர் மனைவிகளோடு வந்திருக்கிறோம்.

மெயின் ரோட்டின் கார்னரில் அந்த வீட்டைப்  பார்த்ததுமே, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. வாசல் பிறையில் அம்மா அந்தியும், சந்தியும் விளக்கு வைப்பது, நினைவில் வந்தது.  வீட்டுக்கு முன்னாடியே பள்ளிக்குப் போகும் பேருந்து நிற்கும், என்று நினைத்த நேரத்தில், எங்கள்  கண் முன்னாலேயே இன்றும்  பேருந்து வந்து நின்றது‌. இப்போது  மதுரையில் பைபாஸ் ரோட்டில் அந்த சின்னஞ் சிறிய வீடு, இப்போது பெரிதாகத் தோன்றியது. 

விசாரித்ததில் அந்த சிறிய இடத்திற்கு ஐம்பது லட்சம் தருவதற்கு தயாராக இருந்தார்கள். கொடுத்துடலாமா; என்ற யோசனையில் இருந்து, இப்படியே நம்மிடமே இருந்துட்டு போகட்டும். இப்ப நமக்கு என்ன பணமுடை? வீட்டை  மராமத்து செய்து பெயின்ட் பண்ணி வைச்சுக்கலாம்; என்று தம்பி சொன்னான். தம்பியின்  மனைவி இந்த ஐம்பது வருஷ பழைய வீட்டை இடித்து, புதிதாக ஒரு ட்வின் வீடு கட்டலாம்; என்ற மாற்று யோசனை சொன்னது, நல்ல யோசனையாகப்பட்டது.

அந்தக் கால கணக்கின்படியே பார்த்தாலும், சொல்ப தொகையில் கட்டின வீடு ஐம்பது வருஷங்களுக்குப் பின் பெரிய சொத்தாக பரிமளித்தது.  சிவில் இன்ஜினீயர்களை கூட்டி வந்து. காண்பித்து கருத்து கேட்டதில்," சார் கட்டுமானம் வலுவாக இருக்கிறது. எதற்கு வீட்டை இடிக்கணும். இடிக்கவே செலவு அதிகமாக ஆகும். பிற்பாடு, புதிதாக அஸ்திவாரம் போடணும்.  

அஸ்திவாரம் நல்லா இருக்கே. இன்னும் ரெண்டு தளம் கட்டலாம். பேசாம, நீங்க மேலே இதே மாதிரி ஒரு போர்ஷன் கட்டிக்கிடுங்க. செலவும் மிச்சமாகும். சொத்து மதிப்பும் கூடும். இரண்டு போர்ஷனுக்கும் நவீன வசதிகள் மட்டும் செய்ஞ்சுக்கங்க." " என்று சொல்லிவிட்டார்கள். 

அந்தக் காலத்தில் கையில் இருந்த பணத்திற்கு கட்டின வீடு, ஐம்பது வருடங்களுக்கு அப்புறமும், கல்லுக்கோட்டை மாதிரி உறுதியாக நிற்கும் அற்புதம். இந்த வீடு பணத்தால் மட்டும் கட்டவில்லை. பரஸ்பர நம்பிக்கையாலும், நல்ல  எண்ணங்களாலும் கூட; என்று நினைத்துக் கொண்டேன்.

(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்