மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

Oct 27, 2025,01:00 PM IST

பெருந்தலைவர் காமராசர் பல்கலைக்கழகத்தை மூடும் நிலைக்கு தள்ளிவிட்டு, கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று வீண்பெருமை பேச வெட்கி தலைகுனிய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை:




மதுரையில் பெருந்தலைவர் தாத்தா காமராசர் அவர்களின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகம் கடும் பொருளாதார நெருக்கடியால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகுந்த மனவலியைத் தருகின்றது. கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று  நடிகர்களைக் கொண்டு வெற்று விளம்பரம் செய்துவிட்டு, கல்விக்கண் திறந்த கடவுள் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தைச் செயற்பட முடியாதபடி முடக்குவது  வன்மையானக் கண்டனத்துக்குரியது.


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் அமைந்துள்ள காமராசர் பல்கலைக்கழகம் (Madurai Kamaraj University) 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பெருந்தலைவர் மறைவுக்குப் பிறகு அவருடைய நினைவாக  1978 ஆம் ஆண்டு காமராசர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது. 18 பாடசாலைகளுடன், 72 திணைக்களங்களை கொண்டுள்ள இப்பல்கலைக்கழகமானது 109 இணைக்கப்பட்ட கல்லூரிகளையும், 7 மாலைநேரக் கல்லூரிகளையும் உறுப்பு கல்லூரிகளாகக் கொண்டுள்ளது. பல்கலைக்கழக நிகர்நிலை குழுவினால் வழங்கப்படும் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான தகுதியையும் பெற்றுத் திகழ்வதோடு, 60 ஆண்டுகளாக  தமிழ்நாட்டு இளம்பிள்ளைகள் உயர்கல்வி பயில வாய்ப்பளித்து பல இலட்சம் பட்டதாரிகளையும் உருவாக்கிய பெருமைக்குரியது. 


அத்தகு சிறப்பு வாய்ந்த காமராசர் பல்கலைக்கழகம் அண்மைக்காலமாகக் கடும் நிதி நெருக்கடி காரணமாக முற்று முழுதாக முடங்கிப்போயுள்ளதுதான் பெருங்கொடுமையாகும். காமராசர் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு  பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை.


பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு ஆண்டுக்குமான தணிக்கை அறிக்கைகள், நிதி நெருக்கடிகள் ஏற்பட பல காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றில் முதன்மையானது 17.05.1999 நாளிட்ட தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி பல்கலைக்கழகப் பணியாளர்களுக்குத் தரப்படும் சம்பளம் மற்றும் படிகள் ஆகியன தமிழ்நாடு அரசால்   ஈடு செய்யப்பட வேண்டும். ஆனால், கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசால் மதுரை பல்கலைக்கழகத்திற்கான ஈட்டுநிதி வழங்கப்படவில்லை. கடந்த 2007 மற்றும் 2008 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசால் பல்கலைகழகத்திற்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை 7 கோடியே 74 லட்சம். அது கடந்த 17 ஆண்டுகளில் அதிகரித்து 2023-24 ஆம் நிதி ஆண்டுகளில் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவைத்தொகை தமிழ்நாடு அரசால் தரப்படவில்லை. ஒருவேளை நிலுவைத்தொகை உரிய நேரத்தில் வழங்கப்பட்டிருந்தால் இன்றைய நாளில் 500 கோடி அளவிற்கு உபரித்தொகை பல்கலைக்கழகத்தில் கையிருப்பாக இருந்திருக்கும் எனவும் தணிக்கை அறிக்கை கூறுகிறது. 




ஆனால், நிலுவைத்தொகையைத் தராமல் இருப்பதற்கு, பல்கலைக்கழகத்தில்  பணியாளர்கள் நியமனத்தில் விதிமீறல் நடைபெற்றதே காரணம் என அரசு கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றபோதே அதனை தமிழ்நாடு அரசு தடுக்கத்தவறியது ஏன்? பணி நியமனத்தில் முறைகேடு என்றால் அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, வழங்க வேண்டிய நிதியை நிறுத்துவது எவ்வகையில் நியாயமாகும்?


மேலும், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின்  தொலைதூரக் கல்விதுறை 2010 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 50,000 மாணவர்களைக் கொண்டிருந்தது, அதே துறை 2023 ஆம் ஆண்டில்  வெறும் 6000 மாணவர்களையேக் கொண்டுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் இந்திய ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு, தொலைதூரக் கல்வியானது அந்தந்த மாநில எல்லைக்குள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற புதிய விதியை நிர்ணயித்து, பல்கலைக்கழகத்தில் அதிகளவில் மாணவர் சேர்க்கையைத் தடுத்து நிறுத்தியதேயாகும். இதனால் பல்கலைக்கழகத்தின் வருமானம் பெருமளவு குறைந்தது.


பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் 1956 இன் படி, அவ்வாணையத்தின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று பல்கலைக்கழகங்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதாகும். ஆனால், இந்திய ஒன்றிய அரசின் புதிய விதிமுறை அதற்கு நேரெதிராக நிதியைக் குறைக்கச் செய்து, மாணவர்களின் கல்வியை முடக்கியுள்ளது. இதற்கு இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசே முழுக்காரணமாகும்.


பல்கலைக்கழக மானியக்குழு  பல்கலைக்கழகத்தின் சிறகுகளை வெட்டாவிட்டால், காமராஜர் பல்கலைக்கழகம் 

பத்து மடங்கு கூடுதல் நிதியைத் தொலைதூரக் கல்வித்துறையின் மூலம் ஈட்டியிருக்க முடியும். பல்கலைக்கழகமும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது.


அதுமட்டுமின்றி தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்த தவறியதோடு, பல்கலைகழகப் பணியாளர்களுக்கான ஒழுங்கு நடவடிக்கை விதிகளையும், பணிவிதிகளையும் ஏற்படுத்த தவறிய தமிழ்நாடு அரசின் அலட்சியமும் பல்கலைக்கழக நிர்வாகம் சீர்கெட மற்றுமொரு காரணமாகும். 


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவி கடந்த 15 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இது தவிர பட்டதாரிகளுக்கான 15 உறுப்பினர் பதவிகளும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ளன. உதவிப்பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல், தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஊதியம் முறையாக வழங்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது மாணவர்களின் உயர்கல்வியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  தமிழ்நாட்டின் தலைசிறந்த பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில்  துணைவேந்தர் பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை. 


பாஜக ஆளுநர் - திமுக அரசின் மோதல் போக்கு தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை முற்று முழுதாகச் சீரழித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களை இத்தகைய மோசமான நிலையில் வைத்துவிட்டு கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என வீண் தற்பெருமை பேசுவது வெட்கக்கேடானது. 


பல்கலைக்கழக வேந்தராக தமிழ்நாட்டு முதல்வரே செயல்படுவார் எனும் நிலையை எட்டிய பிறகும் திமுக அரசு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தைச்  சீர்படுத்தி, நிதிநிலைமையை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் திமுக அரசு உயர் கல்வியிற் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ள முறையா? என்ற கேள்வி எழுகிறது.


ஆகவே, தமிழ்நாடு அரசு மதுரை காமராசர்  பல்கலைகழத்திற்குத் தரவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கி மூடப்படும் நிலையிலிருந்து பல்கலைக்கழகத்தை மீட்க வேண்டும். மேலும்,  சீரழிந்துள்ள தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தையும் சீரமைத்து, நிதி நிலைமையை மேம்படுத்தி, காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

ஜீவனின் ஜீவிதம்!

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

மங்கலா.. சமூகத்தில் ஒரு ஒளி.. (மீண்டும் மங்கலம்.. மினி தொடர்கதை - 6)

news

ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்