ஆறு அடி நிலம் போதும்... ஆனால் பேராசை மட்டும் அடங்கவில்லை!

Mar 16, 2026,05:00 PM IST

- ஆனந்தி சத்யராஜ்


ஒரே உலகத்தில் வாழும் இந்த மானுடப் பிறப்பில் எவ்வளவு வேற்றுமை! எண்ணிப் பார்த்தால் வியக்க வைக்கிறது. தெரியாமல் செய்த சின்னஞ்சிறு தவறுகளுக்குக் கூட நம்முள் எழும் பயம், அடிமனம் வரை சென்று இறைவனிடம் எதையாவது பிதற்றிக் கொண்டே இருக்கும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் ஒருபுறம் வாழ்கிறோம். மறுபுறம், தலைமை, அதிகாரம், அறிவு, விஞ்ஞானம் என்னும் வகை வகையான முகமூடிகளை அணிந்தவர்கள், யாருக்குமே சொந்தம் இல்லாத எல்லாவற்றிற்கும் உரிமை கொண்டாடி, எல்லைகளை மீறி போரிலும், குருதியிலும், கோடிகளிலும் உருண்டு புரண்டு வாழ்கிறார்கள்.


அன்று துவாபர யுகத்தில் குருஷேத்திரப் போர் மண்ணுக்கும், பெண்ணுக்கும் நடத்தப்பட்டது; அதில் இழப்புகள் அதிகம் என்றாலும், இறுதியில் தர்மம் வென்றது. ஆனால், இன்று நிலவும் இந்தக் கலியுகத்தில் எது வெல்லப் போகிறது என்று தான் தெரியவில்லை? எது எப்படியோ, அன்று முதல் இன்று வரை, ஒன்று மட்டும் மாறவில்லை. போரின் சுமையையும் இழப்பையும் சுமப்பது எப்போதும் இயல்பு வாழ்க்கை வாழும் மக்களாக மட்டும்தான் இருக்கிறார்கள்.




அதிகார வர்க்கத்தினர் தங்களின் தவறுகளை மூடி மறைக்க, போரையும், குழப்பங்களையும் மட்டுமே ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்களிடம் உரக்க கேட்க தோன்றுகிறது... நிலம், நீர், காற்று, உயிரினங்கள் என அனைத்தும் இயற்கைக்கு சொந்தமானவை; அடையாளத்தின் பெயரால் அவற்றை அழிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியது யார்?


தலைமை, மதம், எல்லைகள் என்ற பெயர்களுடன் நீங்கள் யாரும் எங்களுக்குள் நுழைத்து களைகள் எடுக்கவும் வேண்டாம், நாற்று நடுவது போல் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு உங்கள் எண்ணத்திற்கு ஏற்றார்போல் எங்களை பிடுங்கி போடவும் வேண்டாம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று யாருக்கும் யாரும் நிரூபிக்கவும் வேண்டாம். அப்படியே விட்டால் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்போம்.


 இப்புவியில் வாழும் மானுடர்கள் யாராக இருந்தாலும் சரி, இறுதியில் கிடைப்பது ஆறு அடி நிலம் அல்லது ஒரு மின்சார தகன இயந்திரத்தில் மிஞ்சும் கைப்பிடி சாம்பல் மட்டுமே. இந்தத் தெளிவு உங்களுக்கு மட்டுமல்ல, எல்லா மனிதனுக்குள்ளும் ஆழமாகப் பதிய வேண்டும்.


எந்த நாடாக இருந்தாலும், அங்குள்ள சாமான்ய மக்களாகிய நாங்கள் ஒருபோதும் போரை விரும்புவதில்லை; அமைதியை மட்டுமே எதிர்பார்க்கிறோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் போதுமானது குடும்பம், உணவு, இருப்பிடம், 

ஆரோக்கியம் மற்றும் உலக அமைதி மட்டுமே...




தற்போது வளைகுடா நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் மூண்டுள்ள போர்கள், அமைதியை முற்றிலுமாகச் சிதைத்து வருகின்றன. பெரிய நாடுகளின் அதிகாரப் போட்டிகளுக்கும், அரசியல் சூழ்ச்சிகளுக்கும் இடையில் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பலியாகிறது.  இந்த மோதல்கள், வீடுகளை இடித்து, குடும்பங்களைச் சிதறடித்து, இலட்சக்கணக்கானோரை அகதிகளாக மாற்றுகிறது. இது எப்போது முடியுமென்றுதான் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்!


இதற்குத் தீர்வு : இயற்கையே! உன்னிடம் தான் உள்ளது. "பேராசை என்னும் இழிவான ஒன்றை எப்படியாவது மனிதனிடமிருந்து எடுத்துவிடு." இந்த உலகம் நீ படைத்தபடியே அழகாய் மாறிவிடும். நீ கொடுத்த இந்த பிறவியை, இருப்பதை வைத்து இன்பமாக வாழ்ந்துவிட்டு, உன்னிடம் முழுமையாகச் சரணடைந்து விடுகிறோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் அனலை கிளப்ப போகும் டாப் 10 பிரச்சனைகள்

news

அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

news

விடியா ஆட்சியில் விலகாத இருள்: பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பற்ற சூழல்: தவெக

news

ரஜினிகாந்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

news

ஜனநாயகன் விவகாரம் முடிவுக்கு வருகிறதா? நாளை தணிக்கை குழு மறுஆய்வு

news

விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? செங்கோட்டையன் சொன்ன காட்டமான பதில்

news

தமிழகத்தில் மார்ச் 18 மற்றும் 19ம் தேதிகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி...பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

news

தேர்தல் 2026 ஓட்டு போட சொந்த ஊருக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

அதிகம் பார்க்கும் செய்திகள்