அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

May 30, 2025,05:57 PM IST

சென்னை :  பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எடுக்கப் போகும் முடிவுக்காக அவரது ஆதரவாளர்கள் காத்துள்ளனர். மறுபக்கம், அன்புமணிக்கு பக்க பலமாக முழு அளவில் அரசியலில் ஈடுபட அவரது மனைவி செளமியா அன்புமணி மற்றும்  3 மகள்களும் தயாராக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.


பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் பற்றி அடுக்கடுக்கான பல பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ஜி.கே.மணி, தைலாபுரம் விரைந்து ராமதாசை சந்தித்து பேசி உள்ளார். இதைத் தொடர்ந்து இன்று 6 மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி அவசரமாக முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்துகிறார்.


அதேசமயம், கட்சியின் நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாஸ் கூறி குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை அன்புமணி தரப்பில் இருந்து மறுப்போ, விளக்கமோ தெரிவிக்கப்படவில்லை. ராமதாஸ் குற்றச்சாட்டுக்களை கூறி 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் அன்புமணி இதுவரை இதுவரை மெளனம் காப்பதால் அவரது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? அடுத்து அவர் என்ன செய்ய போகிறார்?  சட்டசபை தேர்தல் நெங்கி வரும் நிலையில் கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்குமோ? என பாமக தொண்டர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 




பாமக இரண்டாக பிளவுபடும் நிலை ஏற்பட்டிருந்தாலும் கூட, அன்புமணி தனிக்கட்சி துவங்க வாய்ப்பில்லை. காரணம், பாமகவின்  முழு நிர்வாக  கட்டமைப்பும் அன்புமணிக்கே சாதகமாக, ஆதரவாக உள்ளது. மேலும் இன்று சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக பேசிய டாக்டர் அன்புமணி, எதையும் எதிர்பார்த்து ஏமாந்து போகாதீர்கள், மருத்துவர் அய்யாவின் வழிகாட்டுதலில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று கூறி விட்டார். 


பாமகவுக்குள்தான் அன்புமணி இருப்பார், பாமகவின் அடையாளமாக தன்னை மாற்றிக் கொள்ளவே அவர் முயற்சிப்பார். ஏற்கனவே அப்பா ராமதாசுடன் மோதல் வெடித்த போது கட்சியின் தலைவர் நான் தான், முடிவு எடுக்கும் அதிகாரம் எனக்கு தான் உண்டு என உறுதிபட தெரிவித்தவர் அன்புமணி. அதனால் இப்போது தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, அதிகமான நிர்வாகிகள், தொண்டர்கள் தனக்கு தான் ஆதரவாக இருப்பதாக கூறி கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கலாம். 


இந்த இடத்தில்தான் தெலுங்கு தேசம் கட்சியின் கதையை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சியை நிறுவியவர் என்.டி.ஆர். ஆவார். அவருடன் நெருக்கமாக இருந்து கட்சியை வளர்க்க உதவியவர் அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு. ஒரு கட்டத்தில் கட்சி என்.டி.ஆர். கட்டுப்பாட்டை மீறிப் போய் விடுமோ என்ற சூழல் வந்தபோது கட்சியை முழுமையாக தன் பக்கம் கொண்டு வந்து விட்டார் சந்திரபாபு நாயுடு. அன்று அவர் அப்படிச் செய்ததால்தான் இன்று வரை தெலுங்கு தேசம் உயிர்ப்போடு இருக்கிறது. கிட்டத்தட்ட அதே பாணியில்தான் அன்புமணியும் நடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




அப்படி கட்சி அவர் பக்கம் முழுமையாக வரும் சூழலில் அவரது மனைவி செளமியா, 3 மகள்கள் ஆகியோரும் அன்புமணிக்கு பக்கபலமாக முழுமையான அளவில் அரசியலில் ஈடுபடும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதியில் தனது மனைவி செளமியாவை வேட்பாளராக போட்டியிட வைத்தார் அன்புமணி. அந்த சமயத்திலேயே அவரது மூன்று மகள்களும் கிராம் கிராமமாக சென்று தீவிர பிரச்சாரம் செய்தனர்.


அதே போல் சமீபத்தில் நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டில் அன்புமணியின் மூன்று மகள்களும் மேடையில் பம்பரமாக சுழன்று வேலை செய்து, ஒரு மாநாட்டையே அனைவரும் திரும்பி பார்க்கும் அளவிற்கு நடத்தி முடித்தனர். அந்த மாநாட்டில் கையாளப்பட்ட பல லேட்டஸ்ட் தொழில்நுட்ப யுக்திகளும் அன்புமணியின் மகள்கள் கொடுத்த ஐடியா என சொல்லப்பட்டது. அவை அந்த சமயத்தில் பெரிய அளவிலும் மீடியாக்களில் கவனத்தை ஈர்த்தன. 


அதனால் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை தன் பக்கம் இழுத்து தனது பலத்தையும், செல்வாக்கையும் நிரூபிக்க கண்டிப்பாக அன்புமணி முயற்சி செய்வார். அவர்களின் ஆதரவு கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்து கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றும் முயற்சியிலும் இறங்கலாம். அப்படி கட்சியை தன் வசப்படுத்தி அன்புமணி தேர்தல் களம் இறங்கும் போது அவரது மனைவி மற்றும் மகள்களும் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி, தொடர்ந்து மக்களிடமும் தங்களின் செல்வாக்கை அதிகரிக்க, மக்களின் ஆதரவை பெறவும் முயற்சிப்பார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக

news

விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்

news

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

news

திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!

news

கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!

news

மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி

news

பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

news

மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்