- சுதா திருநாராயணன்
"இன்று தேங்காய் பால் அன்னமும், தயிர் அன்னமும் செய்து விடலாம்." பணிப்பெண்ணிடம் உரையாடிக் கொண்டே மேல்முற்றத்திற்கு வந்தாள் யவனமாலினி. பலகணியில் பீரங்கியின் அருகில் நின்று கொண்டு தமக்கை மேகரஞ்சனி பாய்மரக் கப்பல்களில் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்கும் வணிகர்களின் மீதும் வணிகப் பொருட்களின் மீதும் கூரிய பார்வையால் துழாவிக் கொண்டிருந்தாள்.
"அக்காள் இங்கே தான் இருக்கிறார்கள். தேடிக் கொண்டிருந்தீர்களே அம்மா. " என்றாள் பணிப்பெண்.
"ஒவ்வொரு முறையும் வணிகக் கப்பல்கள் வரும் பொழுது யாரையோ தீவிரமாக தேடுகிறாயே அக்கா. என்னிடம் சொல்ல மாட்டாயா? இன்று மாமன் மாமி வருகிறார்கள். சிற்றன்னை கூறினாள். மேயன் செம்பியன் குடும்பத்தார் உன்னை இன்று பெண் கேட்டு வருகிறார்கள். சிற்றன்னை உன்னை அணிகலன்களும் புதிய ஆடையும் அணிந்து கொள்ளச் சொன்னாள் "
மேகரஞ்சனி பதில் சொல்வதற்குள், "மேகரஞ்சனி மேகரஞ்சனி " என்று அழைத்தவாறு ஓடி வந்தாள் மீனலோசனி.
"எத்தனை முறை சொல்லி இருக்கிறேன்? தமக்கையார் என்று அழைக்க வேண்டும். நான் உன்னை விட பத்து வருடம் பெரியவள் அல்லவா? " அன்போடு தன் சிறிய தங்கையை கடிந்து கொண்டாள் மேகரஞ்ஜனி.

"அம்மானும் அம்மாமியும் இன்று வருகிறார்கள் அல்லவா? "
"யார் சொன்னது? "
"யவன, இல்லை இல்லை சின்னத்தமக்கையார் சொன்னார்கள். அவர்கள் வருவதால் நெய்பணியாரம் , திணை கொழுக்கட்டை செய்வீர்கள் அல்லவா? அதற்காகத்தான் கேட்டேன். "
"விருந்தாளிகள் யாரும் வரவில்லை என்றாலும் நான் உனக்காக செய்து தருகிறேன் "
சிற்றாடை குலுங்க குதித்து ஓடினாள் சிறுமி. கவலைகள் இல்லாத கள்ளமற்ற வாழ்க்கை குழந்தைகளுக்கே உரியது.
"அக்கா, நான் சொன்னதை காதில் வாங்கிக் கொண்டாயா?" என்றாள் யவனமாலினி. பதில் ஏதும் சொல்லாமல் ஒரு பெருமூச்சுடன் தலை அசைத்தாள் மேகரஞ்சனி.
மேகரஞ்சனியின் நினைவு பத்து வருடங்கள் பின்னோக்கிச் சென்றது. மழை பொய்த்ததால் விவசாயம் இன்றி வறுமையில் வாடிய தந்தை மாடனும் தாய் யாழினியும் வணிகச் சந்தையில் வேலை கிடைக்கும் என்று துறைமுகத்திற்கு வந்து அருகில் இருந்த ஒரு கட்டடத்தில் பெண் குழந்தைகள் இருவரையும் பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு வேலை தேடிச் சென்றனர். மூன்று நாட்கள் சென்றும் திரும்பி வரவில்லை.
ஒன்பது வயது மேகரஞ்சனி தங்கை யவனமாலியின் கையைப் பிடித்துக் கொண்டு துறைமுகத்தில் சென்று அந்நியர்கள் புழங்கும் இடத்தில் தைரியமாக சென்று தன் பெற்றோரை தேடினாள். பசியினால் வாடிய அவர்களுக்கு சில வணிகர்கள் மூலம் உணவு கிடைத்ததே தவிர அவர்களுடைய பெற்றோரைப் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை. வணிகன் ஒருவன் அவர்கள் அருகில் வந்து தன்னுடைய ஒரு வயது குழந்தையை அவர்கள் கையில் கொடுத்து "பாப்பாவை பார்த்துக் கொள்ளுங்கள் இருவரும். நான் உணவு வாங்கி வருகிறேன்" என்று சொல்லி சென்றவன் தான். அவனும் வரவில்லை.
உறவினர்களால் அரவணைக்கப்பட்டனர் மூவரும். மேகரஞ்சனியின் காத்திருப்பு இன்றும் தொடர்கிறது.
"என் தங்கைகள் இருவருமே என்னுடன் தான் இருப்பார்கள்" செம்பியன் குடும்பத்தாரிடம் தைரியமாக கூறினாள் மேக ரஞ்சனி.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)
காத்திருப்பு
வாழ்க ஆசிரியர் வையகம் போற்றவே!
வானத்திலே சிறகடிப்போம் வாங்க மச்சானே
Light House.. சிங்காரச் சென்னையின் மின்னும் கண்கள்..!
ஐகோர்டில் வழக்காடு மொழியாக தமிழ்...முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு
தீபாவளி 2026: சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்!
கொள்ளை கொள்ளையாய் நல்ல பயன்கள் நல்கும் தாயே!
கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிரான வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி
Poem by Santhi Sinnathambi: மனசு!
{{comments.comment}}