கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிரான வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி

Sep 03, 2026,06:30 PM IST

சென்னை : கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்கு உறுதிப்படுத்தும் இயந்திரங்களை (VVPAT) சரிபார்க்கக் கோரி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


வழக்கின் பின்னணி:

கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தொடர்ந்து மூன்று முறை கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த மு.க.ஸ்டாலினின் இந்தத் தோல்வி, தேர்தல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


இதனைத் தொடர்ந்து, தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களின் செயல்பாட்டில் முறைகேடுகளும் குளறுபடிகளும் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, கொளத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து 286 வாக்குப்பதிவு இயந்திரங்களையும் VVPAT சீட்டுகளையும் 100% மீண்டும் சரிபார்க்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மேலும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவித்து, தம்மை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் அதில் கோரியிருந்தார்.


நீதிமன்றத்தில் நடைபெற்ற காரசார வாதங்கள்:




இவ்வழக்கு தலைமை நீதிபதி சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர அடங்கிய முதன்மை அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மு.க.ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். "தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 5% வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்க உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் 45 நாட்கள் தாமதத்திற்குப் பிறகே அந்த ஆய்வைத் தொடங்கியது. 14 இயந்திரங்களை ஆய்வு செய்ததில், பல இயந்திரங்கள் முறையாக இயங்கவில்லை. வாக்குச்சாவடி எண் 208-ல் வேட்பாளர் பெயர் கண்டறியப்படாத சூழல் நிலவியது. எனவே, கொளத்தூர் தொகுதியின் அனைத்து இயந்திரங்களையும் முழுமையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தினார்.


தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்மனுதாரர் தரப்பு வாதம்:

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 329(b) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 80-ன் படி, தேர்தல் முடிவை எதிர்த்து 'தேர்தல் வழக்கு' மட்டுமே தாக்கல் செய்ய முடியுமே தவிர, இதுபோன்று பேராணை மனு தாக்கல் செய்ய முடியாது எனக் சுட்டிக்காட்டினர். மேலும், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் வாதிட்டனர். தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு தரப்பிலும் இதே கருத்து முன்வைக்கப்பட்டது.


நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு:

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் விதிகளின்படி இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி, மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முன்னதாக, தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ்.பாபு, "கொளத்தூர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார். உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்