- ஆனந்தி சத்தியராஜ்
நாள்: 28/6/2026
நேரம்: இரவு 10:30
"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"
வாழ்க்கையில் நாம் துல்லியமாகத் திட்டம் போட்டுச் செய்யும் காரியங்களை விட, "சரி, போய்தான் பார்ப்போமே!" என்று தற்செயலாக எடுக்கும் திடீர் முடிவுகளே வாழ்நாள் முழுமைக்கும் மறக்க முடியாத நினைவுகளாக மாறுகின்றன! இப்பயணம் அப்படியான ஒரு அனுபவம்தான்.
அன்று விடியற்காலை சுவாமிமலையை தரிசிப்பது மட்டும்தான் எங்களின் முதன்மைத் திட்டமாக இருந்தது. அதற்காக முந்தைய நாள் இரவே சென்னையில் இருந்து புறப்பட்டோம்.

முருகப்பெருமானின் நான்காவது படைவீடான அந்தப் புண்ணியத் தலத்தில், எங்கள் குட்டிச் செல்லம் மேடையில் ஏறித் 'திருப்புகழ்' பாடி, மாலை மரியாதையோடு கௌரவிக்கப்பட்டதைப் பார்த்தது மிகவும் நெகிழ்வான ஒரு தருணமாக இருந்தது!
அந்நிகழ்ச்சி முடிந்ததும், முருகனை தரிசிக்க 60 படிகள் ஏறிச் சென்றோம். ஒவ்வொரு படியிலும் தமிழ் வருடங்களின் 60 பெயர்கள் ஒவ்வொன்றாகப் பொறிக்கப்பட்டிருந்தன. அதைப் படித்தபடியே உற்சாகமாக ஏறி, கருவறை வரை சென்று அந்த சுவாமிநாத சுவாமியை மனதார தரிசித்தோம்.
மதிய உணவை முடித்துவிட்டு, "சரி, சென்னைக்குத் திரும்பலாமா?" என்று யோசித்தபோதுதான், மனதுக்குள் அந்த ஆசை உதித்தது— "ஏன், அப்படியே பக்கத்தில் இருக்கும் தஞ்சாவூர் பக்கம் போய்விட்டுப் போகக் கூடாது?" எந்த முன்யோசனையும் இல்லாமல் உடனே எடுத்த அந்த முடிவால், தஞ்சையை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது!
சாலையின் இருபுறமும் சோழ நாட்டின் பசுமையான கிராமங்கள்! வழியில் ஒரு அழகான கிராமத்து அதிசயம் எங்கள் கண்ணில் பட்டது. பசுமை போர்த்திய வயல்வெளியின் ஓரம் ஒரு பம்ப் செட்டிலிருந்து குளிர்ந்த நீர் சீறிப்பாய்ந்து கொண்டிருக்க, பயணத்தை இடைநிறுத்திவிட்டு நாங்களும் குழந்தைகளும் ஓடோடிச் சென்று அந்தத் தண்ணீரில் இறங்கினோம்!

வெயிலுக்கு இதமாக சலசலவெனச் சில்லென்று கொட்டிய அந்த நீரில் சற்று நேரம் குதூகலமாக மகிழ்ந்திருந்த நொடிகளை இப்போது நினைத்தாலும் குளிர்ச்சியாக இருக்கிறது! ஒரு நெடும் பாலத்தைக் கடந்து ஒருவழியாக மாலை 3:00 மணி போல் தஞ்சையை சென்று அடைந்தோம்.
ஆயிரத்து பதினாறு ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் பெரிய கோயிலினுள் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ராஜகோபுரத்தைக் கண்ட நொடி மெய்சிலிர்த்தது! அங்கு காலடி எடுத்து வைத்ததுமே, 'பொன்னியின் செல்வன்' கதையின் கதாபாத்திரங்கள் எல்லாம் அவ்வளாகத்தில் என்னுடன் உலா வருவது போன்ற உணர்வு! பிரகாரத்தைச் சுற்றி வரும்போதே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொற்காலம் கண்முன்னே நிழலாடியது.

மாமன்னர் ராஜராஜ சோழன் தன் கனவுக் கோயிலைக் கட்ட நினைத்தபோது, அவருக்குப் பின்னால் பெரும் பலமாக நின்றவர் அவரின் மூத்த சகோதரி குந்தவை பிராட்டியார். மாமன்னனின் ஆட்சித் திறனுக்குப் பின்னால் அவரின் அறிவுக்கூர்மையும் வழிகாட்டுதலும் பெரும் பங்கு வகித்தன என்று அனைவரும் அறிந்ததே!
குந்தவையின் சிறப்பைச் சிந்தித்துக்கொண்டே கோயிலின் பிரம்மாண்ட வளாகத்தைச் சுற்றி வரும்பொழுது, என்னை அறியாமல் ஒரு கம்பீர நடை எனக்கும் தொற்றிக்கொண்டது போல, என் சேலையின் நுனியை கையில் ஏந்தியபடி நடக்கத் தொடங்கினேன். "பலர் சூழ்ந்துள்ள இடத்தில் என்ன செய்கிறாய்?" என்று நானே என்னைக் கேட்டுக்கொண்டு, சட்டென்று இயல்பு நிலைக்குத் திரும்பினேன்! சில நொடிகள் அந்தக் கதாபாத்திரத்திற்குள் என்னை மீறி நுழைந்துவிட்டேன் என்பதுதான் உண்மை.

விண்ணைத் தொடும் ஒற்றைக்கல் விமானத்தைப் பார்த்தபோது, அதை உருவாக்கிய சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜ பெருந்தச்சனும், கல்லுக்குக் கல் உயிரைச் செதுக்கிய ஆயிரக்கணக்கான சிற்பிகளும்தான் நினைவுக்கு வந்தார்கள். அரச குடும்பத்தின் அர்ப்பணிப்பும், மக்களின் உழைப்பும் கலந்ததால்தானே இந்த அற்புதக் கலைக்கோயில் இன்றும் நமக்கான பெருமையாக விளங்குகிறது! அந்த வரலாற்று நாயகர்களின் மூச்சுக்காற்று இன்னமும் அந்தக் கற்களுக்குள் உறைந்திருப்பதைப் போன்ற ஒரு சிலிர்ப்பு எங்களுக்குள் பரவியது.
சிறுவயதிலிருந்து புத்தகத்திலும் படங்களிலும் மட்டுமே படித்துப் பார்த்து வியந்த பிரம்மாண்டங்களை நேரில்
பார்க்கும்போது வரும் அந்த இன்பத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது!

ஒற்றைக்கல் நந்தியெம்பெருமானையும், சோழர் காலச் சிற்பங்களையும் ஆச்சரியத்துடன் பார்த்தபடியே கருவறை தரிசனத்திற்காக நகர்ந்தோம். நீண்ட வரிசையில் நின்று ஈசனின் திவ்ய தரிசனம் முடிந்து வெளியேற முயன்ற அந்த விநாடியில்... வானம் பிளந்து பெருமழை கொட்டித் தீர்க்கத் தொடங்கியது!
ஆலயத்தின் மாபெரும் மரக்கதவுகள் மூடப்பட, பக்தர்களுடன் நாங்களும் உள்மண்டபத்திலேயே தங்கும் சூழல் ஏற்பட்டது. வழக்கமாக தரிசனம் முடிந்து அடுத்த நொடியே நகர்த்தப்படும் இடத்தில், "அவன் அருளாலே அவன் தாள் பற்றி" நிற்பதைப் போல, அந்த மழையின் புண்ணியத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஈசனின் திருவடியிலேயே அமர்ந்து அமைதியாகத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது!
அந்த பிரம்மாண்ட மரக்கதவுகளின் இடுக்கின் வழியே தெறித்த மழைச்சாரல் சில்லென்று முகத்தைத் தழுவியது... ஒரு தெய்விக அனுபவம்!

மழை தணிந்து இல்லம் நோக்கி மகிழுந்தில் சென்றபோது ஒலித்த 80s & 90s தமிழ் மெல்லிசைப் பாடல்கள் பயணத்தை இன்னும் அழகாக்கின. வழியில் பண்ருட்டி அருகே ஒரு பெரிய சுவையான பலாப்பழத்தையும் வாங்கிப் பத்திரப்படுத்தி வீட்டைச் சென்று அடைந்தோம்!
குழந்தையின் திருப்புகழ் பாராட்டு, பம்ப் செட்டில் குளித்த குதூகலம், தஞ்சைப் பெரிய கோவில் தரிசனம், சோழ வரலாற்றின் நினைவலைகள், கொட்டிய மழையில் ஈசனின் பாதத்தில் கழித்த தெய்விக நேரம், ரெட்ரோ பாடல்கள், கூடவே பண்ருட்டி பலாப்பழத்தின் மணமும் சுவையும் என ஒரே நாளில் எல்லாமே அற்புதமாக அமைந்தது!

நாள் முழுவதும் இவ்வளவு சிறப்பாக அமைந்தும், கும்பகோணம் டிகிரி காஃபி மட்டும் குடிக்க முடியாமல் போனதுதான் எனக்கு ஒரே சின்ன ஏக்கம்! மற்றபடி இந்தத் திடீர் பயணம் ஆயுள் முழுமைக்கும் அழியாத நெகிழ்வான நினைவுகளாக எங்களுக்குள் நிலைத்திருக்கும்!
இனிமையான நினைவுகளுடன்...!
விரைவில் புதிய தலைமை செயலகம் : 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
Teacher's day 2026.. ஆசிரியர் தினம்.. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்!
என் நாட்குறிப்பிலிருந்து.. நிழலாடிய குந்தவை நாச்சியார்.. மறக்க முடியாத தஞ்சை பயணம்!
உனக்கென வசந்தம் உன்மனமே.. எல்லாம் உன்வசமே....!
கோர வெள்ளம்.. "உதவி தேவையில்லை.. இந்தியா, சீனா, அமெரிக்கா இழப்பீடு தர வேண்டும்".. நேபாளம்
ஒரே நாளில் ஓட்டுநர் உரிமம், வழக்குகள் வாபஸ்...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகள்
வேளாங்கண்ணி கோயிலில் சாதியம்.. அமைச்சர் மரிய வில்சன் அதை மாற்றுவாரா? .. ரவிக்குமார்
ரஜினியின் 'ஜெயிலர் 2'ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ விளக்கம்!
நேபாளம் வெள்ளம்.. வாழத்தான் பிறந்தோம் என்று நேபாளம் வந்தோம்!
{{comments.comment}}