வாழ்க ஆசிரியர் வையகம் போற்றவே!

Sep 03, 2026,04:28 PM IST

- டாக்டர் கோ.லதா


செப்டம்பர் ஐந்தாம் நாள் சிறப்புடன் போற்றும்

அற்புத திருநாள் அதுவே குருநாள்!


திருவள்ளூரில் பிறந்த திருமகன் ராதாகிருஷ்ணன்

ஆயிரத்து எண்ணூற்று எண்பத்தெட்டில் அவதரித்தார்

தத்துவ மேதையாய் தரணியில் ஜொலித்தார்


ஜனாதிபதியாய் உயர்ந்து ஜகத்தை ஆண்டார்

பிறந்தநாள் கொண்டாட பிள்ளைகள் கேட்டனர்

நண்பர்கள் மாணவர்கள் அன்புடன் வேண்டினர்

என்பிறந்த நாளை எனக்கென கொண்டாடாமல்

ஆசிரியர் தினமாய் அகிலம் போற்றுங்கள் என்றார்


தன்னலம் மறுத்த தயாள குணத்தால்

குருப்பெருமை உலகறியச் செய்தார்

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்திரெண்டில்

முதன்முதலாய் கொண்டாடப்பட்டது குருதினம்

ஏன் கொண்டாடுகிறோம் எதற்காக என்றால்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்!




தாய் தந்தை கடந்து தெய்வமாய் நிற்பவர்

ஆசிரியர் என்றும் அறிவுரை தருபவர்

கல்விக்கண் திறந்து கருணை காட்டுபவர்

அறியாமை இருளை அகற்றி ஒளிதருபவர்

எப்படி கொண்டாட வேண்டும் இந்நாளை

பூமாலை சூட்டி புகழ்ந்து பாடுங்கள்


கேக் வெட்டி மகிழ்ந்து கீர்த்தி சேருங்கள்

நன்றி சொல்லி நலமுடன் வாழ்த்துங்கள்

உண்மையான ஆசிரியர் உள்ளம் திறப்பவர் என்றார்

நம்மை நாமே சிந்திக்க வைப்பவர் என்றார்

நாட்டின் சிறந்த மூளைகள் ஆசிரியரே என்றார்

அவர் வாக்கே வேதமாய் ஆனதே!


கரும்பலகை முன்னே காலமெலாம் நின்று

அரும்புகள் எமக்கு அறிவை ஊட்டினீர்

பசித்த போதும் பாடம் நடத்தினீர்

வலித்த போதும் வகுப்பில் சிரித்தீர்

சுண்ணாம்பு தூசியில் சுவாசம் கலந்து

எண்ணங்கள் எமக்கு ஏற்றம் தந்தீர்

பிரம்படி தந்தும் பாசம் குறையாமல்

திருத்தி வளர்த்த தெய்வமும் நீரே!


பூக்கோலம் இட்டு போற்றும் பிள்ளைகள்

கேக் வெட்டி உம்மை கொண்டாடும் அன்பில்

ஆலயம் போன்ற பள்ளி சிறக்கும்

ஆசிரியை நீரே அன்னையாய் திகழ்வீர்

மண்ணில் உம்போல் மாண்புமிகு உள்ளம்

எண்ணிலும் இல்லை என்பதே உண்மை

பொன்னும் பொருளும் போற்றாது உம்மை

கல்வியே உமக்கு கவசம் ஆகும்


வாழ்க நீவிர் வளமுடன் பல்லாண்டு

வாழ்க உம் புகழ் வானம் தொடும்வரை

வாழ்க உம் குடும்பம் வையம் உள்ளவரை

வாழ்க ஆசிரியர் வையகம் போற்றவே!


குரு பிரம்மா குரு விஷ்ணு குருதேவோ மகேஸ்வரஹா

குருவே பரப்பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ

எழுத்தறிவித்து எம்மை உயர்த்திய குருவே

பாதம் பணிந்து வணங்குகிறோம் ஆசிரியர் தினத்தில்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்