- ஜோசப் சாம்ராஜ்
தென்மேற்கு பருவக்காற்று வீசும் போதெல்லாம் மேற்குத்தொடர்ச்சி மலை அருவிகளில் வெள்ளி நீர் அருவியாக மலைகளில் விழும்.
அந்த நேரத்தில் நாங்களும் மாணவர்களை அழைத்துக்கொண்டு இன்பச் சுற்றுலா செல்வதுண்டு.
அப்படி ஒரு நாள் மாணவர்களை அழைத்துக் கொண்டு வாசுதேவநல்லூர் அருகில் உள்ள தலையணை கிளம்பினோம்.
தலையணை அருவி மலையின் உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் நாங்கள் அங்கே இருந்து கீழே வரும் தடுப்பணை மிகப்பெரிய ஏரி போல இருக்கும். அங்கு சென்று அங்குள்ள விறகுகளைப் பொறுக்கி சமையல் செய்து முக்கியமாக வரும் வழியில் கோழி இறைச்சி வாங்கிக்கொண்டு வந்து சுவையான மணக்க மணக்க பிரியாணி ஆசிரியர்+மாணவர்கள் இணைந்து செய்து தம் கட்டி வைத்து விட்டு காட்டிற்குள் சென்று கொஞ்ச தூரம் டிரெக்கிங் போவோம்.
வண்டுகளின் ரீங்காரம் ஙொய் என்று கேட்கும். சின்னச்சின்ன பட்டாம்பூச்சிகள் நம்மை வா! வென்று வரவேற்று பறந்து செல்லும். இருமங்கிலும் பச்சை கம்பளம் போர்த்தியது போல மரங்கள். அதிலிருந்து ஒரு வாசனை நம்மை வேறு உலகத்தில் ரசிக்க வைக்கும். ஏதேதோ ஜாலியாக பேசிக்கொண்டு பாடிக்கொண்டே திரும்பி குளிக்க வந்து சேர்ந்தோம்.

தலையணை பகுதியில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக இங்கு யானைகள் மட்டும் நடமாட்டம் உண்டு. அதனால் நான் போகும் போது எச்சரிக்கைக்காக யானை பற்றிய செய்திகளை யானை வந்தால் எப்படி தப்பிக்க வேண்டும் என்று பல கதைகள் கூறிக்கொண்டு ஆற்றில் குளிக்க ஆண்கள், பெண்கள் வெவ்வேறு திசைகளில் இறங்கி நீந்தி ஆசை தீர குளித்தோம். ஆற்றின் அருகில் அழகான கூழாங்கற்களையும் நினைவுக்காக எடுத்து வைத்து கொண்டோம். ஒரு சிலர் மரத்தில் தங்கள் பெயர்களை வடித்தனர்.
அந்த நேரத்தில் தான் ஒரு கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு ட்ரம்பட் இசை அல்லது கும்கி படத்தில் யானை வரும் போது இமான் இசைப்பாரே அது மாதிரி ஒரு சப்தம். யானை பிளிறுகிற மாதிரி கேட்டதாக ஒரு மாணவர் கூறினான். அவ்வளவு தான் மாணவர்கள் என் அருகிலும் மாணவிகள் அல்போன்ஸ் சார் அருகிலும் அண்டிக் கொண்டனர்.
நாங்கள் ஏற்கெனவே பேசிக்கொண்டபடி வேனிற்கு எப்படி செல்ல வேண்டும் என்று சொல்லி முயல் போல மெல்ல நடந்து சென்றோம். அப்போது ராஜபாண்டி சார் சார் என்று கூப்பிட்டான். அவன் எப்போதும் மலைகளில் திரியும் நல்ல மாணவன். சார் யானை மாதிரி அந்த மரத்துக்கு அருகில் தெரியுது சார் என்றான். அவ்வளவு தான் இருங்கடா….. டேய் பசங்களா பார்க்கலாம் என்று சொல்வதற்குள் பாதிபேர் பறந்து சென்று விட்டனர்.
விடுதி மாணவர்கள் மட்டுமே என் கூட இருந்தனர். யானை இருந்ததாக தெரியவில்லை. ஏதோ தூரத்தில் ஒரு கரும் பாறை மரங்களுக்கு நடுவில்.பெரிய இலை அசைந்தது யானை காது போல. அரண்டவன். கண்ணுக்கு கண்டெதெல்லாம் யானையாக தெரியும் போல என்று சொல்லி கொண்டே வேனிற்கு வந்து சேர்ந்தோம்.
பறந்து சென்றவர்களை ஒரு வழியாக ஒன்று சேர்ந்து அழைத்து வந்து வேனில் எமது பள்ளிக்கு நிம்மதியாக வந்து சேர்ந்தோம். யானை பிளிறும் சப்தம் கேட்கும் போதெல்லாம் ராஜபாண்டியும் தலையணை ஞாபகமும் ஊஞ்சல் போல் வந்து செல்லும். அதன்பிறகு இந்த நிமிடம் வரை தலையணை பக்கம் தலைவைத்து கூட படுப்பதில்லை. எம் பள்ளியில் இருந்து பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலை கம்பீரமாகத் தெரியும். கூடவே தாலாட்டும் ஞாபகங்களும்!
(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)
செல்ல இடியுடன் வா!
கண்ணன் சிரிக்கிறான்!
Nothing destroys you faster than your own mind
படிக்கப்படாத என் கடிதம்!
The Secret Stranger
மேற்குத் தொடர்ச்சி மலையின் கம்பீரமும் - தாலாட்டும் ஞாபகங்களும்!
Felt that the rainbow hand
செழிப்பான சிந்தனை வளர்க்கும் வள்ளுவர் கோட்டம்!
Don’t search for yourself, create yourself
{{comments.comment}}