- சுதா திருநாராயணன், திருச்சி
“மெட்ராஸ் வெல்ல மெட்ராஸ்” மடிப்பாக்கம் மஞ்சுளா (ஓடி) பாடிக்கொண்டே அலமாரியை குடைந்தாள்.
“வெல்ல மெட்ராஸா, வெள்ள மெட்ராஸா?” மகன் மதன் வினவிக்கொண்டே வந்தான்.
“டிசம்பர் வந்தா வெள்ள மெட்ராஸ். இப்போ ஆடியில வெல்ல மெட்ராஸ். வரலட்சுமி விரதம் ஆவணி அவிட்டம் எல்லா பண்டிகையும் வருது இல்ல.”
"அம்மா நீ கொழுக்கட்டை அப்பம் எதுவும் செய்ய வேண்டாம். சாம்பசிவம் மாமா கிட்ட வாங்கிக்கலாம்.” சாதாரண உப்புமாவையே சகிக்க முடியாமல் சப்பு சவுக்கென்று சமைக்கும் அம்மாவின் சமையல் திறனை அறிந்த மதன் படபடப்புடன் பதில் உரைத்தான்.
“பயப்படாதடா. மயிலாப்பூர் வக்கீலாத்து மாட்டு பெண்ணாவேன்னு பாடிண்டு இருந்த என்னை சமையல் அசிஸ்டன்ட்க்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டா. இன்னி வரைக்கும் உங்க அப்பா சமையல் மாஸ்டர் ஆகலை. எடுபிடியாவே இருக்கா. நான் அட்லீஸ்ட் மயிலாப்பூர் மாமியோட டீம்ல சேரலாம்னு இருக்கேன். அதுக்குத்தான் இன்னிக்கு எனக்கு மாமி டெஸ்ட் வச்சிருக்கா. மசால் வடை பண்ணிண்டு வரச் சொல்லி இருக்கா. கோடம்பாக்கம் கோகிலா கோந்து லட்டு பண்றாளாம். ஊரப்பாக்கம் ஊர்மிளா ஊறுகாயோட வரா. சைதாப்பேட்டை சியாமளா ..”
“சப்பாத்தியோட வராளா?”
“சாம்பாரோட வரான்னு சொல்ல வந்தேன்.”
“எல்லோரும் வறவறன்னு சாப்பாட்டுக்கு காஞ்சு போய் இருக்கேள்ன்னு மட்டும் தெரியறது. ஏம்மா, உனக்கு மசால் வடைக்கு என்ன இன்க்ரெடியண்ட்ஸ் சேர்க்கணும் என்றாவது தெரியுமா?
“கடலை பருப்பு முக்கியமா வேணும். அதைத்தான் தேடறேன். பூச்சி புடிச்சுண்டு ஒரு டப்பால இருந்தது.”

மதன் தலையில் அடித்துக் கொண்டான்.
“கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் கடலைப்பருப்பை கண்டுபிடிச்சேன்.” மஞ்சுளாவின் மந்தஹாச சிரிப்பு.
கடலைப்பருப்பு சல்லடையில் ஆவாஹனம் ஆனது. சலசலவென்று செக்கான் பூச்சிகள் கீழே உதிர்ந்தன.
“கடலைப்பருப்புல பாதி சைஸ் கூட இல்லை இந்த செக்கான் பூச்சி. எப்படி அதை சாப்பிடும் ? “ மதனின் மாளாத கவலை!!!!
“ம்ம் நான்தான் அதுகளுக்கு பல்செட் வச்சு கொடுத்தேன். கடிக்கிறதுக்கு. பிரிட்ஜில் இருந்து கோஸ், இஞ்சி பச்சை மிளகாய் எல்லாம் எடுத்து வெளியிலே வை. மசால் வடையிலே போடணும்.”
“மசால் வடைக்கு வெங்காயம் தானே முக்கியம்.”
“இது ஆச்சார மசால் வடை. நோ வெங்காயம் நோ பூண்டு.”
“முட்டைக்கோஸ் மட்டும் தானா? “
“கோஸ் அப்படின்னு சொன்னா போதும். முன்னால அடைமொழி வேண்டாம் அது அனாச்சாரம். திருவல்லிக்கேணி திவ்யா சொல்லி இருக்கா.”
“ஆனால் பூச்சி கடலைப்பருப்பு போட்டு நான்வெஜ் ஆக்கிட்டியே. அம்மா, என்னை ஆளை விடு நீயே எல்லாத்தையும் பாத்துக்கோ.” மதன் அலறி அடித்துக் கொண்டு ஓடாத குறையாக சென்றான்.
ஐந்து நிமிடத்தில் அம்மாவின் ஹலோ ஹலோ என்ற குரல் கேட்டு கீழே வந்து எட்டிப் பார்த்த மதன் அதிர்ச்சியில் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே நின்றான்.
மஞ்சுளா உடல் முழுவதையும் பிரிட்ஜ்னுள் நுழைத்துக்கொண்டு யார் அங்கே என்று அலறிக் கொண்டிருந்தாள்.
“அம்மா, அப்பா அங்க இல்ல, ஃபோனும் அங்க இல்ல. யாரோட பேசிண்டு இருக்க?”
“இல்லடா ஃபிரிட்ஜுகுள்ள இருந்து யாரோ கதவை தட்டினா.”
“அம்மா உள்ளே குள்ளமும் இல்ல உயரமும் இல்லை. எலெக்ட்ரிசிட்டி ஃபிளக்சுவேஷன்னால சில சமயம் அப்படி சத்தம் கேட்கும்.”
கொத்தமல்லி கருவேப்பிலைகள் முகத்தில் தோரணமாட திரும்பினாள் மஞ்சுளா.
“அம்மா நான் வெளில போறேன். இன்னும் கொஞ்ச நாழி இங்க இருந்தேன்னா என் மண்டை மசாலா ஃபுல்லா காஞ்சு போயிடும்.”
“டேய், எனக்கு ஹெல்ப் பண்ணுடா”
புல்லட்டின் உறுமலுடன் பதில் வந்தது. “செக்காம்பூச்சி மசால்வடை நீயே பண்ணு.”
மஞ்சுளா வாயிலை நோக்கி முறைத்துக்கொண்டே “ஹும் எல்லாம் நானே பண்றேன். தெரியாதா என்ன?” என்று சப்(ப)தித்தாள். (சபதம்)
அடுத்த அரைமணியில் சமையல் கட்டு அமர்க்களப்பட்டது. மிக்ஸி வீறிட்டது.
“இந்தக் கோஸை லேயர் லேயரா உரிக்கறது, இந்த இந்திக்காரா கல்யாணத்துல சுஹாக்ராத்ல மணப்பெண்ணோட கூங்கட்ட (முக்காடு) மாப்பிள்ளை மெதுவா ராத்திரி பூரா விலக்கி அவள் முகத்தை பார்க்க முயற்சி பண்ணிக் கொண்டிருப்பான். அந்த மாதிரி இருக்கு.” மஞ்சுளா தன் பேச்சுக்கு தானே சிரித்தாள். பாவம், மளிகைப் பொருட்கள் மௌனம் காத்தன.
“கேஸ் சிலிண்டரை இவர் சரியாகவே ஃபிக்ஸ் பண்ணல. அதனாலதான் வடையெல்லாம் கருகி கருகி போறது.” மஞ்சுளாவின் புலம்பல் மதுரை வரை ஒலித்தது.
“நான் மதுரையை மட்டும் தான் எரித்தேன், மசால் வடையை அல்ல, அல்ல, அல்ல, ” வானுலகில் கண்ணகி திடீரென்று முழங்கிய பதில் மொழியைக் கேட்ட கோவலனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
கணவன்மார்கள் எப்பொழுதுமே பரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.
தாரில் முக்கியதை போல் காட்சியளித்தன வடைகள். இரவு 10 மணிக்கு மெதுவாக திரும்பி வந்த மதன் மஞ்சுளாவின் மலர்ந்த முகத்தைப் பார்த்து பீதி அடைந்தான். ஏனென்றால் கருகிய வடைகளை புகைப்படம் எடுத்து அவனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தார் அப்பா.

அம்மாவுக்கு ஏதேனும் புத்தி பேதலித்து விட்டதோ என்ற நியாயமான எண்ணம் அவனுக்கு உதித்தது.
“மதனா, மாமி என்னை டீம்ல சேத்துண்டுட்டாடா.”
“என்னதூதூதூதூ?” மதன் மயங்கி விழவில்லை. பேச்சுக் குளறியது அவனுக்கு. விழிகள் நிலை குத்தி நின்றன.
மஞ்சுளா மகா பெருமையுடன் நடந்ததை விவரித்தாள்.
“நான் பொலம்பினதெல்லாம் மந்தவெளி மோகனாவுக்கு கேட்டுடுத்து. ஓடோடி வந்துட்டா. கடலைப்பருப்பை ஊற வச்சு எடுத்துண்டு வந்துட்டா. மசால் வடையில சில பேர் சோம்பு போடுவாளாமே. அதுக்கு பதிலா புதினா இஞ்சி வத்த மொளகா எல்லாம் போட்டு சூப்பரா ஒரு மசால் வடை பண்ணினா பாரு. மாமி மோகனாவ மசால்வடை இன்சார்ஜா போட்டுட்டா. நான் தான் அசிஸ்டன்ட்.”
மதன் நமுட்டு சிரிப்பு சிரித்தான்.
“நீயும் அசிஸ்டன்ட் தானா?”
அப்பா மதனை சைகை காண்பித்து அழைத்தார். “மந்தவெளி மோகனாவுக்கு போன் போட்டு சொன்னதே நான் தான். இல்லாட்டா இன்னிக்கு என் மானமும் சேர்ந்து போயிருக்கும்.“
தந்தையும் மகனும் சிரிப்பில் ஆழ்ந்தனர்.
போதும் காற்றே உன் பேச்சை நிறுத்து!!
என்னுள் உறைந்தவன்!
Short Story: மயிலாப்பூர் மாமியும் மசால் வடையும்!
சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!
கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!
தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்
நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்
LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்
{{comments.comment}}