Tn election 2026 தமிழகத்தில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது...6 மணிக்கு பிறகு அமலாகும் கட்டுப்பாடுகள்

Apr 21, 2026,10:50 AM IST

சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் 2026 க்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. 6 மணிக்கு பிரச்சாரம் ஓய்ந்த பிறகு அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய கட்டுபாடுகள் குறித்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் ஏப்ரல் 21ம் தேதியான இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதற்கு பிறகு அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விதிமீறல்களைத் தவிர்க்க பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்கள் இங்கே விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.


பிரசாரம் மற்றும் பொதுக் கூட்டங்களுக்குத் தடை :




- இன்று மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள் நடத்தவோ, ஊர்வலங்கள் செல்லவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ யாருக்கும் அனுமதி இல்லை. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

- தொலைக்காட்சி (TV), வானொலி (FM), வாட்ஸ்அப் (WhatsApp), முகநூல் (Facebook) மற்றும் எக்ஸ் (X) தளம் போன்ற எந்தவொரு ஊடக வாயிலாகவும் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிகள் அல்லது கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுவதும் குற்றமாகக் கருதப்படும். இந்த விதிகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

- தொகுதியின் வாக்காளர் அல்லாத வெளிமாவட்ட அரசியல் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இதனை உறுதி செய்யத் திருமண மண்டபங்கள், விடுதிகள் (Lodges) மற்றும் விருந்தினர் இல்லங்களில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

- நட்சத்திரப் பேச்சாளர்களுக்கான வாகன அனுமதி இன்று மாலை 6 மணியுடன் ரத்தாகிறது.

- வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளருக்கும் அதிகபட்சம் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் (சொந்தப் பயன்பாடு, தேர்தல் முகவர் மற்றும் பணியாளர் பயன்பாட்டிற்கு).

- வாக்காளர்களை வேட்பாளர்களின் வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்வது முற்றிலும் சட்டவிரோதமானது.

- வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு வெளியே, 2 நபர்களைக் கொண்ட தேர்தல் பணி அலுவலகத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு.


தேர்தல் ஆணையத்தின் இந்த நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி, ஜனநாயகக் கடமையை அமைதியான முறையில் நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்