தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது பஞ்சாபில் கொடூரத் தாக்குதல்.. தலைவர்கள் கடும் கண்டனம்

Jan 24, 2025,08:23 PM IST

பதின்டா, பஞ்சாப்: பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அனைத்து வீராங்கனைகளும் தற்போது பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2024-2025 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டி  பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. கடந்த 22ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த கபடி போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து கபடி அணியினர் கலந்து கொண்டுள்ளனர்.


இன்று தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. தமிழ்நாட்டிலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகமும், பஞ்சாப் தரப்பில் தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடந்துகொண்டிருந்தது. அப்போது  தமிழக அணியினர் வெற்றி பெரும் தருவாயில் இருக்கும் போது  எதிர் அணியினர் பவுல் அட்டாக் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டுள்ளனர்.




அப்போது நடுவர் தமிழக வீராங்கனைகளை தாக்கியுள்ளார். இதனால் தமிழக வீராங்கனைகளுக்கும் நடுவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பஞ்சாப் வீராங்கனைகள், பார்வையாளர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் கூட்டாக சேர்ந்து தமிழக வீராங்கனைகளை கடுமையாக தாக்கியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இது குறித்து பஞ்சாப் பயிற்சியாளர் புகாரின் அடிப்படையில் தமிழக பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் காவல் நிலையத்திற்கு சென்ற தமிழக மகளிர் அணியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


இதைத் தொடர்ந்து போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக வீரர்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் தலைவர்


இன்று (23.01.2025) பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே கபடி போட்டியின் போது ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதைக் கண்டித்து கேள்வி எழுப்பிய தமிழக கபாடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.


இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். மேலும் தமிழ்நாட்டின் கபடி பயிற்சியாளரை கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது.


மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, நம் மாநில விளையாட்டு வீரர்களை பாதுகாக்க வேண்டுமெனவும், பஞ்சாபில் இருந்து அவர்களை பத்திரமாக அழைத்து வரவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.


டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்


பஞ்சாப் மாநிலம்  பதின்டா நகரில் உள்ள  குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டிருப்பதாகவும், பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.


பிகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியுடன் இன்று நடைபெற்ற போட்டியின் போது, பிகார் வீராங்கனைகளின் விதிமீறல்கள் குறித்து புகார் செய்ததால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. பஞ்சாப் மாநில அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல், தமிழக பயிற்சியாளர் மீதான வழக்கை திரும்பப் பெறச் செய்வதுடன், பிகார் அணியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.


டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்


பஞ்சாபில் தமிழக கபடி விளையாட்டு வீராங்கனைகள் தாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தமிழக அரசு உடனே  செய்ய வேண்டும்.. காயமடைந்த வீராங்கனைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்... அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. பிரச்சனைகள் என்ன என்று கண்டறிந்து அவர்கள் சென்றிருக்கும் பணி சிறப்பாக அமைய பக்கபலமாக இருந்து அவர்கள் பத்திரமாக திரும்புவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.


டிடிவி தினகரன்


பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் - வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.


பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்க சென்றிருந்த அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு, தமிழக பயிற்சியாளரையும் அம்மாநில காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.


உரிய விதிமுறைகளை பின்பற்றி கபடி போட்டியை நடத்த வேண்டிய நடுவர்களே விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதோடு, அதனை சுட்டிக்காட்டிய தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.


எனவே, பஞ்சாப் மாநில அரசை தொடர்பு கொண்டு தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக கபடி பெண்கள் அணியின் பயிற்சியாளரையும், வீராங்கனைகளையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். 


டாக்டர் சி. விஜயபாஸ்கர், அதிமுக


பஞ்சாபில் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியின்போது நம் தமிழக கபடி வீராங்கனைகள் மீது கடும் தாக்குதல் நடத்திய காணொளி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.


பஞ்சாப் எதிரணி வீராங்கனைகள் நம் தமிழக வீராங்கனைகளை தாக்கிய போதிலும் தமிழக அணி பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.


உடனடியாக, தமிழக அரசு இதில் தலையிட்டு பயிற்சியாளரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து வீராங்கனைகளின் பாதுகாப்பையும், எவ்வித அச்சுறுத்தலுமின்றி அவர்கள் விளையாடுவதையும் உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன். 


திருமுருகன் காந்தி


பஞ்சாபில் தமிழக பெண் கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அனைவராலும்   கண்டிக்கப்பட வேண்டிய மோசமான தாக்குதல் இது. 


பெண் வீராங்களை மிகமோசமாக தாக்கும் பஞ்சாப் மாநிலத்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும். நம் வீரர்களுக்கு உரிய பாதுகாப்பளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையை துணிச்சலாக எதிர்த்து நின்ற நம் வீராங்கனைகளுக்கு துணை நின்று  ஆதரவளிப்போம். அந்த வீராங்கனைகளை வரவேற்கவும், அவர்கள் மீதான தாக்குதலுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் அழுத்தத்தையும் கொடுப்போம். தமிழன் மீதான தாக்குதல் எங்குநடந்தாலும் நாம் ஒன்றுபட்டு எதிர்வினை செய்வோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!

news

DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு

news

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி

news

C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!

news

234 தொகுதிகளிலும் தவெக தனி ஆவர்த்தனம்.. வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!

news

Thiruvarur Aazhi Ther: திருவாரூர் தேர் – பலர் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்!

news

புனித வாரம் தொடங்கியது.. தமிழ்நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

news

திருவாரூரில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அசைந்து வரும் ஆழித்தேர்!

news

முதல் தோட்டா.....!

அதிகம் பார்க்கும் செய்திகள்