தென்தமிழ் தலையங்கம்: இந்திய அரசியலில் சோனியா காந்தியின் அசைக்க முடியாத பயணம்!

Nov 17, 2026,10:15 AM IST

- சு.தா.அறிவழகன்


Belonging: A Journey of Love என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதை பரபரப்பான பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நூலின் வெளியீடு டெல்லியில் விமரிசையாக நடந்தேறியுள்ளது.


இத்தாலியின் ஒரு சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்த எட்விஜ் அன்டோனியா அல்பினா மைனோ, இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் குடும்பத்தின் மருமகளாக மாறி, பின்னர் இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்த உணர்வுப்பூர்வமான பயணத்தை இந்நூல் விவரிக்கிறது.


இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்தது, அவர்களின் காதல், திருமணத்திற்குப் பிறகு இந்தியக் கலாச்சாரத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் தன்னை மாற்றிக்கொண்ட விதம் ஆகியவை இதில் 

ஆழமாகப் பகிரப்பட்டுள்ளன.


மாமியார் இந்திரா காந்தியுடனான நெருக்கமான உறவு, இந்திரா காந்தியின் படுகொலை, ராஜீவ் காந்தியின் பிரதமர் பதவிக்காலம் மற்றும் 1991-ல் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு தான் எதிர்கொண்ட தனிப்பட்ட துயரங்கள் குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.


அரசியலிலிருந்து விலகியிருக்க விரும்பிய தான், சூழ்நிலையின் கட்டாயத்தால் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றது, 2004-ல் பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளுக்குப் பின்னால் இருந்த மனநிலையை இந்நூல் வெளிப்படுத்துகிறது.




வெளிநாட்டில் பிறந்த ஒரு பெண், இந்தியாவைத் தனது தாயகமாக ஏற்றுக்கொண்டு (Belonging) பயணித்த அன்பும் சவால்களும் நிறைந்த வாழ்க்கை வரலாறாக இந்நூல் அமைந்துள்ளது.


இந்திய அரசியலில் சோனியா காந்தியின் பயணம் மிகப் பெரியது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை இரும்புப் பெண்மணி என்று அழைப்பார்கள். அவரது தலைமைத்துவ பண்பு, தைரியமான குணம், யாருக்கும் அஞ்சாத தன்மை என இந்திரா காந்தியின் அடையாளங்கள் பல.


காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை வகித்த சோனியா காந்தியும் கிட்டத்தட்ட இந்திரா காந்தி போலவே பல்வேறு சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்தார். அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்டு வெல்லவும் செய்தார்.


இத்தாலியில் பிறந்து இந்தியாவின் மருமகளான சோனியா காந்தி, ஆரம்பத்தில் அரசியலில் இருந்து விலகியே இருந்தார். இருப்பினும், 1991-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் தொடர் வற்புறுத்தலின் பேரில் 1997-ஆம் ஆண்டு அவர் அரசியலில் இணைந்தார். 1998-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றபோது, கட்சி பலவீனமான நிலையில் இருந்தது. அவரது வருகை கட்சிக்குப் புத்துயிர் அளித்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


சோனியா காந்தியின் அரசியல் பயணத்தில் அவர் பல கடுமையான சவால்களைச் சந்தித்தார். அவர் இத்தாலியில் பிறந்தவர் என்பதால், இந்தியாவின் உயரிய பதவிகளை வகிக்கத் தகுதியற்றவர் என எதிர்க்கட்சிகளும், காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற சரத் பவார் போன்ற தலைவர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.


தனிப்பெரும்பான்மை இல்லாத காலகட்டத்தில், பல்வேறு கொள்கைகளைக் கொண்ட பிராந்தியக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை (UPA) உருவாக்குவது அவருக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஆனால் அந்த அரசை மிகத் திறமையாக சோனியா காந்தி கொண்டு சென்றார். கூட்டணியை முழுமையாக ஒருங்கிணைக்கவும் செய்தார்.


2004 மற்றும் 2009 தேர்தல்களில் கூட்டணி வெற்றி பெற்றாலும், இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் 2014, 2019 பொதுத் தேர்தல்களில் கட்சி சந்தித்த பெரும் தோல்விகள் அவரது தலைமைக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டன.


கடந்த சில ஆண்டுகளாக அவர் சந்தித்து வரும் உடல்நலப் பிரச்சினைகள், அவரது தீவிர அரசியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தியுள்ளது.


2004-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பிரதமர் பதவியை ஏற்காமல் மன்மோகன் சிங்கைப் பரிந்துரைத்த அவரது முடிவு, இந்திய அரசியலில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பலரால் பார்க்கப்படுகிறது. இது பதவி ஆசையற்ற தியாகம் என அவரது ஆதரவாளர்களால் போற்றப்படும் அதே வேளையில், பின்னணியில் இருந்து அதிகாரத்தைச் செலுத்துவதற்கான அரசியல் வியூகம் என எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.


தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA), தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் உருவாக்கப்படுவதில், தேசிய ஆலோசனைக் குழுவின் (NAC) தலைவராக இருந்து அவர் முக்கியப் பங்காற்றினார். 


பல ஆண் ஆளுமைகள் நிறைந்திருந்த காங்கிரஸ் கட்சியை தொய்வின்றி, சமரசம் செய்து கொள்ளாமல் அதேசமயம் அனைவரையும் அனுசரித்தும் நடந்து, கட்சியையும், கூட்டணி ஆட்சியையும் வெற்றிகரமாக நடத்துவது என்பது மிகப் பெரிய சவால். அந்த சவாலை திறம்பட சமாளித்தார் சோனியா காந்தி என்றுதான் சொல்ல வேண்டும்.


இந்தியாவின் மிகப் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸை நீண்ட காலம் வழிநடத்திய தலைவர் என்ற முறையில், சோனியா காந்தியின் அரசியல் வாழ்க்கை ஆதரவும் விமர்சனமும் நிறைந்த ஒரு முக்கிய அத்தியாயமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அவரது சுயசரிதை அனைவருக்கும் அவசியமானதே. குறிப்பாக அரசியலுக்கு வர விரும்பும் பெண்களுக்கு இந்த நூல் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கானகம்!

news

மறக்க முடியாத அனுபவம்!

news

தென்தமிழ் தலையங்கம்: இந்திய அரசியலில் சோனியா காந்தியின் அசைக்க முடியாத பயணம்!

news

வங்கக்கடலில் உருவாகும் ‘அக்வான்’ புயல்: வடதமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை!

news

அமைச்சர் ஆதவ் அர்ஜூவாவை பிரிவதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

news

பாலகிருஷ்ணன் மரணம்: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

news

கோவை சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: நவம்பர் 27-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!

news

திருவண்ணாமலையில் கோலாகலமாக களை கட்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

news

நல்லாசிரியர் த. பொன் ரேகாவின் புதுமையான வழிகாட்டுதலில் மலர்களால் மிளிர்ந்த திருவள்ளுவர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்