- சு.தா.அறிவழகன்
ஒரு கடிதம் எழுதினேன்.. அதில் உயிரை அனுப்பினேன்.. இவை சாதாரண வரிகள் இல்லை.. உணர்வுகள்.
இன்று தேசிய அஞ்சல் தினம்!
இப்போதெல்லாம் பலருக்கும் பேப்பரையும் பேனாவையும் எடுத்து எழுதினாலே கை நடுங்கும். காரணம் எழுதும் கலையை மறந்து போனதுதான். ஒரு காலத்தில் நாம் கைகள் வலிக்க வலிக்க கடிதம் கடிதமாக எழுதித் தள்ளிய காலமும் உண்டு.. எல்லாவற்றையும் பேசியும் எழுதியும் கடந்த காலம்தானே அந்தக் காலம்.. இன்று அந்த பொற்காலம் போய் விட்டது.
"பேஜர்" என்று வந்ததோ அன்றே எல்லாமே பேஜாராகிப் போய் விட்டது. இன்று அந்த பேஜரும் கூட மறைந்து போய் விட்டதுதான் காமெடியானது.
இன்றைய 'வாட்ஸ்அப்', 'ஈமெயில்' தலைமுறை அறிந்திராத, அனுபவித்திராத அரிய கலை கடிதம் எழுதும் கலை. 'போஸ்ட் கார்டு', 'இன்லேன்ட் லெட்டர்' (உள்நாட்டு அஞ்சல் அட்டை), 'மணி ஆர்டர்' போன்ற சொற்களெல்லாம் இன்றைக்கு அருங்காட்சியகப் பொருட்களாகவும், அகராதியின் பழைய பக்கங்களாகவும் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
ஒரு காலத்தில், மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும் அஞ்சல் பெட்டியையும், தபால்காரரின் மிதிவண்டி மணியோசையையும் சுற்றியே இயங்கின.

"அண்ணே எனக்கு லெட்டர் வந்துருக்கா" என்று தபால்காரர் மணியடித்துக் கொண்டு போகும்போதெல்லாம் பின்னாடியே ஓடிப் போய் நாம் கேட்கத் தவறியதில்லை. "சார் போஸ்ட்" என்ற குரல் கேட்காமல் நமது எந்த நாளும் கடந்ததில்லை.
பேரன்பையும் வெட்கத்தையும் தாங்கிச் சென்ற காதலர்களின் ரகசியக் கடிதங்கள், குடும்பத்தின் சுமையைத் தாங்கும் தலைவனின் நலம் விசாரிக்கும் தகவல்கள், படிக்கப் போன இடத்தில் ஹாஸ்டலில் தங்கியிருந்து அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எழுதிய கடிதங்கள், சின்ன போஸ்ட் கார்டில் நுனுக்கி நுனுக்கி குடும்பத்தினரின் நலம் விசாரித்து எழுதப்பட்ட கடிதங்கள், வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவித்த இளைஞனுக்குக் கிடைத்த நேர்காணல் அழைப்புக் கடிதங்கள் (Interview Call Letter), சட்டென்று வீட்டின் அமைதியைக் குலைத்து, கண்ணீரைப் வரவழைக்கும் 'டெலிகிராம்' (தந்தி) தந்த துக்கச் செய்திகள்... இப்படி மனித உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தக் முகவரியாக அஞ்சல் துறை விளங்கியது.
கடிதம் எழுதுவது என்பது வெறும் தகவல் பரிமாற்றம் அல்ல; அது ஒரு கலை. வரிகளை யோசித்து யோசித்து எழுதுவதும், எழுத்துப் பிழை வந்துவிட்டால் அதை மறைக்கப் பாடுபடுவதும், முகவரியைச் சரியாக எழுதி, உரிய Stamp ஒட்டி, சிவப்பு அஞ்சல் பெட்டியில் போட்டுவிட்டு அது போய் சேரும் வரை காத்திருப்பதும்... அந்த "காத்திருத்தல்" தந்த சுகமே தனித்துவமானது! சமயத்தில் நண்பர்களைப் பழிவாங்க, குறைந்த மதிப்பிலான ஸ்டாம்ப் ஒட்டி கோர்த்து விடும் கலாட்டாக்களையும் நாம் செய்துள்ளோம்.. மறக்க முடியுமா அதையெல்லாம்!
இன்றோ, 'இன்ஸ்டன்ட் மேசேஜ்' உலகத்தில் நாம் வாழ்கிறோம். நொடிப் பொழுதில் செய்தி போய் சேர்ந்துவிடுகிறது, ஆனால் அதில் அன்றைய 'மடல்' தந்த மனித நேயமும், உணர்வின் ஆழமும் இருப்பதில்லை. 'டைப்' செய்யப்படும் எழுத்துக்களுக்கு நடுவே, ஒருவரின் சொந்தக் கையெழுத்து தரும் அந்தத் 'தொடு உணர்வும்' அன்புச் சுவடும் காணாமல் போய்விட்டன.
நமக்குப் பிடித்தமானவர்களின் கையெழுத்தைப் பார்க்கும்போது, தாயின் முந்தானையைத் தொடும் அந்த சுகம் கிடைக்கும்.. வருடல் கிடைக்கும். பாசப் பிணைப்பை உணர்ந்தோம்.. குடும்பத்திலிருந்து வரும் ஒவ்வொரு கடிதத்தைப் படித்து முடிக்கும்போது கண்களில் தண்ணீர் முட்டிக் கொண்டு நிற்காமல் அந்த கடித வாசிப்பு முடிவதும் இல்லை.
ஒரு அருமையான சேவை, ஓர் உன்னதமான மனிதக் கலை இன்று தொழில்நுட்பப் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, தன் முகவரியைத் தொலைத்து நிற்கிறது.
இன்றைய அஞ்சல் தினத்தில், தொலைந்துபோன அந்தப் பழைய வசந்தத்தை மீட்க முடியாவிட்டாலும்... நம் கைப்பட ஒரு சிறிய கடிதத்தை எழுதி, நமக்கு நெருங்கிய ஒருவருக்கு அனுப்பிப் பார்ப்போமே! டிஜிட்டல் திரைகள் தராத பெரு மகிழ்ச்சியை, அந்த காகித நறுமணம் நிச்சயம் நமக்குத் தரும்.
மதுராநாதகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026...இரண்டு தொகுதிகளிலும் தவெக தொடர்ந்து முன்னிலை
தென்தமிழ் தலையங்கம்: மறக்கப்பட்ட 'மடல்கள்'… தொலைந்து போன 'தொடு உணர்வு'!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Navajothi Arun Poem: அன்னைக்கோர் வாழ்த்து!
{{comments.comment}}