தென்தமிழ் தலையங்கம்: ஜனநாயகத்தின் மூச்சுக்காற்று.. கேட்டால்தான் தருவதா அரசாங்கம்?

Oct 07, 2026,10:04 AM IST

- சு.தா.அறிவழகன்


போராட்டங்கள் என்பது ஏதோ சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் அவசர நடவடிக்கை அல்ல; அது ஜனநாயகத்தின் மூச்சுக் காற்று. குடிமக்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்று. தங்களின் கோரிக்கைகளும் வேண்டுதல்களும் ஆட்சியாளர்களின் செவிகளை எட்ட வேண்டும், அழுத்தமாகச் சொன்னால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் மக்கள் வீதிக்கு வருகிறார்கள். அகிம்சை வழிப் போராட்டங்கள் மூலம்தான் மகாத்மா காந்தி நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார் என்பதை வரலாறு நமக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.


ஆனால், சுதந்திர இந்தியாவில் நம்மை நாமே ஆண்டுகொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் போராட்டங்களுக்குப் பஞ்சமே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. எங்கு பார்த்தாலும் ஏதேனும் ஒரு போராட்டம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. குடிநீர் இல்லை, மின்சாரம் இல்லை, பஸ் வசதி இல்லை, மோசமான சாலைகளைச் சீரமைக்க வேண்டும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும், ஆபத்தான தொழிற்சாலைகளை மூட வேண்டும் என மக்கள் எழுப்பும் குரல்கள் மிகப்பெரிய ஆடம்பரக் கோரிக்கைகள் அல்ல; அவர்களின் அன்றாட வாழ்வாதாரத் தேவைகள்.


சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும், குடிநீருக்காகவும் சாலைக்காகவும் மக்களைப் போராட வைப்பது அரசின் பெரும் வீழ்ச்சியையே காட்டுகிறது. இதில் மக்களைக் குறைசொல்வதற்கு ஆட்சியாளர்களுக்கோ அல்லது சமூகத்திற்கோ எள்ளளவும் உரிமை கிடையாது. போராட்டங்கள் இயல்பாக உருவாவதில்லை; ஆட்சியாளர்களின் அலட்சியமும் சூழலுமே மக்களைப் போராட நிர்பந்திக்கிறது.


இத்தகைய போராட்டங்கள் இல்லாத நிலை உருவாக வேண்டுமானால், அரசாங்கத்தின் அணுகுமுறையில் அடிப்படை மாற்றம் வர வேண்டும். சிங்கப்பூர் போன்ற முன்னேறிய நாடுகளைப்போல, மக்களுக்கான அரசுகள் இங்கு அமைய வேண்டும். கட்சி சார்ந்த அரசுகள் இருக்கக் கூடாது. ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து விட்டால், அது கட்சி சார்ந்த அரசாக இருக்கக் கூடாது. மாறாக மக்களின் அரசாக மாறி விட வேண்டும். அதுதான் உண்மையான மக்களாட்சியாக இருக்க முடியும்.




மக்களின் தேவைகளை முன்கூட்டியே உணர்ந்து, அவர்கள் வீதிக்கு வந்து கேட்காமலேயே நிறைவேற்றித் தரும் சுறுசுறுப்பான நிர்வாகம்தான் மக்களுக்குத் தேவை. மக்கள் ஒவ்வொரு தேவைக்கும் போராடிக் கேட்டுத்தான் ஒரு அரசு செய்யப் போகிறது என்றால், அத்தகைய நிர்வாக அமைப்பின் அவசியம்தான் என்ன? மக்களே தங்கள் தேவைகளைத் தாமே பார்த்துக்கொள்ளலாமே? கிராம சபை போல மாநிலத்தை பல்வேறு வகைப்பாடுகளாகப் பிரித்து மக்களிடேமே கொடுத்து நிர்வாகிக்கச் சொல்லி விடலாம். அவர்கள் தங்களுக்குத் தேவையானதை செய்து கொள்ளலாமே இல்லையா!


போராட்டங்கள் அற்ற, அமைதியான மற்றும் முற்போக்கான சமூகத்தை உருவாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் அரசுகளுக்கே உள்ளது. மக்கள் போராடும் சூழலைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும். ஆட்சியாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படும்போதுதான் மக்களும் அரசும் நிம்மதியான, ஆரோக்கியமான பாதையில் பயணிக்க முடியும். அதேசமயம், தேவையில்லாத வகையில், அரசியல் உள்நோக்கம் கொண்ட போராட்டங்களை ஒடுக்குவதும் கூட அரசின் கடமைதான். 


எதற்கெடுத்தாலும் போராட்டமா நாடு சுடுகாடாகி விடாதா என்று கேட்பதற்குப் பதில், போராட்டங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து அந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது மட்டுமே போராட்டங்கள் இல்லாத சமுதாயம் அமைய உதவும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tuesday Thoughts: பெண்களோட கம்பீரம் எப்படி இருக்கணும் தெரியுமா?

news

டெல்லியில் பரபரப்பு: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

போவோமா.. ஊர் கோலம்.. ஒரு நிமிடக் கதை (29)

news

"அவ அவங்க அப்பா மாதிரி".. அப்பா!

news

தென்தமிழ் தலையங்கம்: ஜனநாயகத்தின் மூச்சுக்காற்று.. கேட்டால்தான் தருவதா அரசாங்கம்?

news

அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

news

செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்