சைவ சித்தாந்தச் சுடர் பா.சுமதி மோகன்
முருகனே!செந்தில் முதல்வனே!மாயோன் மருகனே!ஈசன் மகனே!ஒரு கைமுகன் தம்பியே!நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கை தொழுவேன் நான்!!
தமிழ் மொழி என்பது வெறும் பேச்சு மொழியாக இல்லாமல் அதன் ஒவ்வொரு இலக்கியப் பெருமையிலும் உலகை மயக்கும் மகத்துவத்தைக் கொண்டுள்ளது. முருகப் பெருமான் வரலாறு பற்றி முதன்முதலாகத் தமிழில் படைக்கப்பட்ட அற்புதமான காவியமான திருமுருகாற்றுப்படையானது முருகபக்தி இலக்கியத்தின் முதல் ஒளிக்கதிர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
திருமுருகாற்றுப்படையின் சிறப்பு!

திருமுருகாற்றுப் படை என்பது சங்க இலக்கியமான பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. மதுரை நகரைச் சேர்ந்த பெரும் புலவர் நக்கீரர் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடியது தான் திருமுருகாற்றுப் படை. "இயற்கை அழகே முருகன் "என்பது நக்கீரரின் அழுத்தமான எண்ணமாகும்.இந்நூல் 317 அடிகளைக் கொண்டு ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டுள்ளது.வீடுபேறு அடைவதற்குத் தகுதியான ஒருவரை முருகப்பெருமான் இருக்கும் இடத்திற்கே அழைத்துச் செல்லுதல் என்பது ஆற்றுப் படையாகக் குறிப்பிடுகிறார் நக்கீரர் பெருமான். திருமுருகாற்றுப் படைக்குப் புலவர் ஆற்றுப்படை என்ற வேறு பெயரும் உண்டு.குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் நின்று அருள்பாலிப்பான்.ஆறுபடை என்பதே ஆற்றுப்படை எனத் திரிந்துவிட்டது என்றும் ஓர் கருத்துண்டு. முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதி, சந்தோஷம், உடல் ஆரோக்கியம், வீடு பேறு கிடைப்பது நிச்சயம்!
திருமுருகாற்றுப்படை பக்தி இலக்கியத்தின் முதன்மை நூலாகக் கருதப்படுகிறது. பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் காப்புச் செய்யுள் போல் அமைந்துள்ளது. பன்னிரு திருமுறைகளுள் 11 ம் திருமுறையாகப் போற்றப்படுகிறது. முருகப்பெருமானின் பக்தி, தவம்,வீடு பேறு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது ஆறுபடை வீடுகளின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது.
முருகனின் ஆறு படை வீடுகள்.!!
முருகனின் ஆறுபடை வீடுகளும் மனித உடலில் உள்ள மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம்,மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை அல்லது ஆக்ஞை, சகஸ்ராரா ஆகிய ஆறு முக்கிய ஆதாரங்கள் என்று யோகிகள் குறிப்பிடுகின்றனர்
1.திருப்பரங்குன்றம்.
முருகன் தேவேந்திரனையும்,தேவர்களையும் சூரபத்மனிடமிருந்து மீட்டபிறகு அதற்கு நன்றிக்கடனாக இந்திரன் தம் மகள் தேவசேனாவை முருகனுக்கு மணம் முடித்துவைத்த திருத்தலம்.
2.திருச்செந்தூர்!!
முருகன் சூரபத்மனை வதம் செய்த திருத்தலம் இது இரண்டாம் படை வீடாகும். திருச்சீரலைவாய் என்ற சிறப்புப் பெயர் தலம் இது.
3.பழனி
முதல் படை வீடு என்ற பெருமை பெற்ற இத் திருப்பதிக்கு திருஆவினன்குடி என்ற பெயரும் உள்ளது. பழம் நீ என்பதே பழனி எனத்திரிந்தது. ஞானப்பழம் தனக்குக் கிடைக்காத காரணத்தால் முருகன் தன் பெற்றோரிடம் கோபம் கொண்டு ஆண்டிக் கோலத்தில் நின்ற தலம் இது. சித்தர் போகர் பிரதிஷ்டை செய்த நவபாஷானத்தால் ஆன முருகன் சிலை இங்கே மிகக் பிரசித்தமானது.முருகனின் முதல் படைவீடு என்ற பெருமை பெற்ற தலம் இது.
4.சுவாமி மலை!!
பிரணவ மந்திரத்தை அதன் உட்பொருளை தன் தந்தை சிவபெருமானுக்கு முருகன் உபதேசம் செய்த தலம் இது .குன்றுதோறாடல் என்ற சிறப்புப் பெயர் பெற்ற தலம் இதனை சிலப்பதிகாரமும்,திருமுருகாற்றுப்படையும் 'திரு ஏரகம் 'என்று குறிப்பிடுகின்றன.
5 .திருத்தணிகை!!
முருகன் சிக்கல் என்ற திருத்தலத்தில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்து சினம் தணிந்து அமைதியடைந்து கோயில் கொண்ட திருத்தலம் இது. முருகன் குறவர் பெண் வள்ளியைத் திருமணம் செய்ததும் இந்தத் தலத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
6.பழமுதிர்சோலை!
முருகனின் சிறப்பை புலவர் நக்கீரர் "இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலைக் கிழவோனே "என்று கூறித் தனது திருமுருகாற்றுப்படையை நிறைவு செய்த திருத்தலம் இது அழகர் மலை ,அழகர் கோயில் என்ற சிறப்புப் பெயர் பெற்றது. முருகன் வயோதிகர் வடிவில் நக்கீரருக்குக் காட்சியளித்த இடம் சைவ - வைணவ ஒருமைப்பாட்டின் சின்னமாகப் பெயர் பெற்ற தலமாக உள்ளது .
பாடல் காட்டும் பாதை
திருமுருகாற்றுப்படை நூலில் வரும் வழிகாட்டல் என்பது வெறும் புவியியல் பயணமல்ல. அது முருகனைச் சென்று அடையக் கூடிய ஓர் ஆன்மீகப்பாதையாகவே பார்க்கப்படுகிறது. திருமுருகாற்றுப் படை பாடலின் தனிச்சிறப்பு பழங்குடியினரின் முருக பக்தி, இயற்கை அழகை,விரிவாக நேர்த்தியாக விவரிக்கிறது.குறவர், வேளிர், வில்லவர்கள் போன்ற பழங்குடியினர் முருக வழிபாட்டில் எவ்வளவு பங்காற்றுகிறார்கள் என்பதைப் பாடல் பல இடங்களில் நம்மிடம் காட்டுகிறது.
"கேழ்வரகு நெற்கலந்த களஞ்சியச் சிறப்பும் , வேட்டையாடி வாழும் குறவர் ஆடலும் "இப்படி இயற்கை வாழ்வு, பக்தி, மட்டுமல்லாமல் மலைப்பகுதிகளில் காணப்படும் காடுகள், மரங்கள், விலங்குகள், பறவைகள், ஆறுகள் என்று அனைத்து விவரங்களும் மிகவும் அழகாக வர்ணிக்கப்படுகின்றன.இவையனைத்தும் தமிழர் வாழ்வியலோடு தொடர்புடையது என்பதை நிரூபிக்கின்றன.
மொழி, இலக்கியம், இசையில் நூலின் சிறப்பு!
"அறுகனையும் வேலும் அருள் நிறைந்த பார்வையும் செந்தமிழால் பூத்த செந்திலே " எனும் பாடலில் கவிஞரின் உள்ளம் ஒலிக்கிறது.
திருமுருகாற்றுப்படை இலக்கியத்திலும் உச்சத்தில் உள்ளது. அதன் உவமைகள், உளவியல் நூணுக்கங்கள், பன்முகமான அழகு மொழிகள்,இசை நடைகள் ஆகியவற்றால் தமிழ் இலக்கியத்தில் மிகவும் போற்றப்படும் நூலாக அமைந்துள்ளன.
திருமுருகாற்றுப்படையின் தாக்கம்!
1.திருமுருகாற்றுப்படை கல்விப் பணியில் முதுகலை மாணவர்களுக்கு ஒரு ஆய்வுத்தொகுப்பாக உள்ளது.
2.பள்ளி செல்லும் மாணவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் எளிமையான பக்திப் புனிதமாக இருக்கிறது.
3.ஆலயங்கள், மற்றும் பாரம்பரிய விழாக்களில் இசை வடிவில் பாடப்படுகிறது.
இன்னும் கூட இந்தப் பாடல் திருப்புகழ் உள்ளிட்ட பக்திப்பாடல்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.முருகனைப்பற்றிய எந்த வகையிலும் திருமுருகாற்றுப்படையின் தாக்கத்தைக் காணலாம்.
திருமுருகாற்றுப்படையானது ஓர் பக்திப் பயணமாக, ஓர் இயற்கைக்கையேடாக,தமிழர் வாழ்க்கை மற்றும் மரபின் அடையாளமாக அமைந்துள்ளது.
திருமுருகாற்றுப்படை பக்திப் பாடல் நூல் மட்டுமல்ல.
1.தமிழ் இனத்தின் சான்று.
2.தமிழ் மொழி அழகின் சான்று.
3.தமிழரின், பழங்குடி மக்களின் வாழ்வியல் சான்று.
திருமுருகாற்றுப்படை மன அழுத்தத்தில் இருந்து விடுதலை தரும் ஆன்ம பாதை.உலகெங்கும் உள்ள தமிழ் கூறும் மக்கள் இந்நூலைத் தங்கள் அடையாளத்தின் அத்தியாயமாகக் கொண்டாட வேண்டும்.
சான்றுகள், மேற்கோள்கள்!
"முருகனை உணரவேண்டும் என்றால் திருமுருகாற்றுப் படையாக வாழவேண்டும் ".
திருமுருகாற்றுப்படை என்பது முருகனின் தெய்வீகக் கவிதை நூல் மட்டுமல்ல. அது தமிழர் கலாச்சாரத்தின் கண்ணாடி.
- உ.வே.சாமிநாத ஐயர்.
திருமுருகாற்றுப்படை பக்தி இலக்கியத்துக்கே வித்திட்டது - முனைவர். கி.வே.ஜெயராமன். (முருகனும்,தமிழும்)
கிரேக்க கடவுள் Ares மற்றும் ரோமன் பெயரில் Mars.அதாவது போர்க்களத்தில் வீரத்தையும், காதலையும் பிரதிபலிக்கும் கடவுளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகனும் இதே போல் அழகு,வீரம், ஞானம்,காதல், அன்பு எல்லாம் நிறைந்த பரம் பொருள்.!!
சக்தி வடிவேலனுக்கு அரோகரா.!!!
(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர். பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
கடந்த 2 நாட்களாக சரிவில் இருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு... அதுவும் எவ்வளவு உயர்வு தெரியுமா?
Year in Search 2025.. அதிகம் தேடப்பட்ட சமையல் குறிப்புகள்.. ஆஹா அது இருக்கா.. சூப்பரப்பு!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருமுருகாற்றுப் படை.!!!
கீழக்கரை அருகே விபரீதம்.. சாலையோரம் நின்றிருந்த கார் மீது இன்னொரு கார் மோதி விபத்து!
அமுதமாய் மனம் நிறைந்த கோபாலனே.. பார்த்தனின் பார்த்தசாரதியே.. புருஷோத்தமனே!
அமாவாசை அன்று அவள் என் செய்வாள்?
அதலக்காய் பாத்திருக்கீங்களா?.. இப்ப சீசன்.. விட்ராதீங்க.. வாங்கி சாப்பிடுங்க.. சூப்பர் ஹெல்த்தி!
{{comments.comment}}