- ஸ்வர்ணலட்சுமி
திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிப்பதே மகா புண்ணியம் என்பார்கள். அப்படி என்றால், அந்த தீபத்தை ஏற்றவது எவ்வளவு புண்ணியத்தை தரும் என்று நினைத்து பாருங்கள். திருவண்ணாமலை மலை மீது தீபம் ஏற்றும் பாக்கியத்தை பெற்றவர்கள் பருவத ராஜகுலத்தினர். திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்று அப்பணியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள்.
திருவண்ணாமலை நகரில் மட்டும் அவர்களின் சுமார் 2000 குடும்பங்கள் உள்ளன. அவர்களில், ஐந்து வம்சாவழிகளாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தீபம் ஏற்றும் உரிமையை நிறைவேற்றுகின்றனர்.
மகாதீபம் ஏற்றும் உரிமை இவர்களுக்கு எப்படி கிடைத்தது?
பருவத ராஜகுல வம்சத்தின் வழிவந்த, பருவதராஜனின் மகளாக அவதரிக்கிறார் பார்வதி தேவி. பருவத ராஜகுலத்தினர் மீன் பிடி தொழிலை மேற்கொள்வதால் மீனவர்கள் என்றும், செம்பொன்னால் செய்யப்பட்ட படகில் சென்று மீன் பிடித்ததால் செம்படவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
முன்னொரு காலத்தில், பிரம்ம ரிஷிகளின் தவத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர் அசுரர்கள். பிரம்ம ரிஷிகள் கோபப்படும்போது, அவர்கள் மீன் உருவாக மாறி, கடலுக்குள் சென்று மறைந்து கொள்வார்கள். இதனால் ரிஷிகள், சிவ பெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான், பருவதராஜனை அழைத்து, கடலுக்குள் மீன் வடிவில் மறைந்துள்ள அசுரர்களை அழிக்குமாறு கட்டளையிட்டார். அதற்கு உதவியாக ஞான வலையையும், தேவதச்சனான விஸ்வகர்மா உருவாக்கிய செம்பொன் படகையும் அளித்தார்.
கடலுக்குள் சென்ற பருவதராஜன், மீன் வடிவிலான அசுரர்களை பிடித்து கரையில் போட்டார். இருந்தாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் கடலுக்குள் துள்ளி குதித்து மறைந்தனர். சோர்வடைந்த பருவதராஜன், மகள் பார்வதியிடம் உதவி கேட்டார். மனம் இறங்கிய பார்வதிதேவி, கடல் நடுவே அகோர உருவில் வாய் திறந்து நின்று மீன்களை எல்லாம் விழுங்கி அழித்தார். அப்போது எதிர்பாராத விதமாக, கடலுக்கு அடியில் தவம் புரிந்த மீன மகரிஷி சிக்கி கரைக்கு வந்தார்.
தன்னுடைய தவம் கலைந்த கோபத்தில், ‘‘உமது ராஜவம்சம் அழிந்து, மீன் பிடித்துதான் வாழ வேண்டும்,” என்று பருவத ராஜாவுக்கு சாபமிட்டார். இதனால் அதிர்ந்த பர்வதராஜா, ஓடோடிச்சென்று சிவனிடம் முறையிட்டார். கருணை கொண்ட சிவன், கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக காட்சித் தருவேன், அந்த ஜோதியை ஏற்றும் பணியை பருவதராஜ வம்சத்தினர் தான் நிறைவேற்ற வேண்டும். ஜோதியை தரிசிக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா எனும் எழுப்பும் முழக்கத்தின் புண்ணியமெல்லாம் பருவதகுலத்திற்கே சென்று சேரும் என வரம் அருளினார். அதன்படியே, காலம் காலமாக பருவத ராஜகுலத்தினர் திருவண்ணாமலையில் ஜோதி ஏற்றும் பணியை நிறைவேற்றி வருகின்றனர்.
3500 கிலோ சுத்தமான பசு நெய், 1500 கிலோ எடையும், 1000 மீட்டர் காடா தூணியால் திரிக்கப்பட்ட திரியும் இதற்காக உபயோகிக்கப்படுகிறது. இவைகள் மலைமேல் தலைச் சுமையாகவே இவர்களால் கொண்டு செல்லப்படுகிறது. தீபம் ஏற்றுவதற்காக தேர்வு செய்யப்படும் பர்வதராஜ குலத்தை சேர்ந்த 5 பேர், ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருப்பார்கள். திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றும் அடியார்க்கு அண்ணாமலையார் கோயிலில் பரிவட்டம் கட்டப்படும். பின்னர், அண்ணாமலையார் சந்நதியில் ஏற்றப்படும் பரணி தீபத்தில் இருந்து, மகா தீபம் ஏற்றுவதற்கான தீபச்சுடரை ஒரு மண் சட்டியில் வைத்து சிவாச்சாரியார்கள் இவர்களிடம் வழங்குவார்கள்.
மேளதாளம் முழங்க இவர்களை மலைமீது வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறும். மண்சட்டியில் ஏந்திச் செல்லும் தீபச்சுடரை, அணையாமல் 2,668 அடி உயர மலை உச்சிக்கு கொண்டு செல்வார்கள். மலை மீது வைக்கப்பட்டுள்ள மகா தீப கொப்பரையில் நெய்யும், திரியும் இட்டு, அதன் மீது, கற்பூர கட்டிகளை குவிப்பார்கள். அண்ணாமலையார் திருக்கோயிலில் மாலை 5.58 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சி தருவார். அப்போது, கோயில் கொடிமரம் எதிரே இவர்கள் மரபைச் சேர்ந்தவர்கள் அகண்ட தீபம் ஏற்றுவார்கள். அதைத்தொடர்ந்து, அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை ஏற்றுகிறார்கள்.
மகா தீபத்தை ஏற்றும் சுடரை, சிவாச்சாரியார்களிடமிருந்து பெற்றுச் செல்லும் இவர்கள், மலை மீது ஏறுவதற்கு முன்பு பாவ பிராயச்சித்தம் வேண்டுதல் நடத்துவது வழக்கம். திருவண்ணாமலையே இறைவன். எனவே, மலை மீது கால் வைத்து ஏறிச்செல்வது பெரிய பாவம். ஆகவே, மலையடிவாரத்தில் உள்ள குகை நமசிவாயர் கோயில் அருகில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருப்பாதத்தின் முன்பு ‘மூவுலகை காக்கும் ஈசனே, உமது திருப்பணியை நிறைவேற்றவே மலை மீது பயணிக்கிறோம். எங்களை மலை மீது அனுமதியும்’ என்று உளமாற பிரார்த்தித்துக் கொண்ட பிறகே இவர்கள் பயணம் தொடரும்.
தீபம் ஏற்றும் போது, இவர்கள் மரபைச் சேர்ந்தவர்கள் சிவபுராணம் பாடிக்கொண்டிருப்பர். சிவனுக்கு உகந்ததான சங்கொலி முழங்குவர். மகா தீபம் மலை மீது தொடர்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும். ஒவ்வொரு நாளும், அண்ணாமலையார் கோயிலில் இருந்து தீபம் ஏற்றுவதற்கான கற்பூரம் மற்றும் திரியை இவர்களே பெற்றுச்செல்வர். மகா தீபத்திலிருந்து வழியும் நெய்யை பறவைகளோ எறும்போ அண்டுவதில்லை என்பது ஆச்சரியம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}