சென்னை: தமிழகத்தில் தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, வரும் ஜூன் 22ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 25-ஆம் தேதி தமிழக அரசு சார்பில், கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்குக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் பெரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். இது விவசாயிகளை ஏமாற்றும் வேலை என கூறி, பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யும் படி வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இந்த தள்ளுபடி வரம்பை மேலும் உயர்த்தி ரூ.75,000 வரையிலான பயிர்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு இன்று காலை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அது போதாது, முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சேலத்தில் சாட்டையடி போராட்டம் :
பயிர்க்கடன் தள்ளுபடியில் நிலவும் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், சேலம் நல்லாகவுண்டம்பட்டியில் விவசாயிகள் தங்களது உடல்களில் சாட்டையால் அடித்துக் கொண்டு வினோதமான முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தவெக அரசு தற்போது அறிவித்துள்ள ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி என்பது தங்களுக்கு எவ்வகையிலும் போதுமானதாக இல்லை என்றும், தேர்தல் சமயத்தில் தவெக அளித்த வாக்குறுதியின்படி பயிர்க்கடனை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் கண்டனம் :
விவசாயிகளின் இந்த நியாயமான போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தொகையை ரூ.75,000 ஆக உயர்த்தியிருப்பது போதுமானதாக இல்லை. மாநிலம் முழுவதும் உள்ள 8.21 லட்சம் விவசாயிகளுக்கு வெறும் ரூ.35,000 மட்டுமே கடன் தள்ளுபடி செய்வது எந்த விதத்திலும் நியாயமல்ல" என்று தவெக அரசின் மீது காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
ஜூன் 22-ல் அடுத்தகட்ட நடவடிக்கை :
அரசின் இந்த அரைகுறையான அறிவிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் விஜய்யின்
பிறந்தநாளான ஜூன் 22 அன்று தமிழ்நாடு முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் விவசாயிகளின் இந்த வாழ்வாதாரப் போராட்டம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
{{comments.comment}}