பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

Sep 22, 2026,10:04 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தும்  நிகழ்ச்சியில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று கலந்து கொண்டார்.


சென்னை திருவான்மியூரில் உள்ள காந்தி கிராமம் சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உணவை பரிமாறி இத்திட்டத்தின் விரிவாக்கத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.


முன்னதாக மாணவர்களுக்கு தனது கையால் அவர் சர்க்கரைப் பொங்கலைப் பரிமாறினார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து முதல்வரும் சாப்பிட்டார். அப்போது தனது அருகில் இருந்த மாணவியிடம் பிரே பண்ணிட்டு சாப்பிடுவோம் என்று அவர் கூறியதாக அந்த மாணவி பின்னர் தெரிவித்தார். சாப்பிட்டு முடித்த பின்னர் தட்டை எடுத்துக் கொண்டு போய் ஊழியரிடம் கொடுத்தார் விஜய்.




அதன் பின்னர் அனைத்து வகுப்புகளுக்கும் சென்ற முதல்வர் விஜய், மாணவர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தண்ணீர் கேட்ட ஒரு மாணவனுக்கு அவரே டம்பளரில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தார்.


கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் காலை உணவுத் திட்டம். இதுவரை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இக்காலை உணவுத் திட்டம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றப்பட்டு, தற்போது 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 15.30 லட்சம் கூடுதல் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.


மாநிலம் முழுவதும் உள்ள 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் விரிவாக்கத்திற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதல் தொகையாக ரூ. 217.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலை உணவுத் திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 724 கோடியாக உயர்ந்துள்ளது.


சென்னையைப் பொறுத்தவரை 447 பள்ளிகளுக்கு உணவு விநியோகிக்கப்படும். நகராட்சிகளில், 2,150 பள்ளிகளுக்கும், ஊரகப் பகுதிகளில் 12,857 கிராமப்புறப் பள்ளிகளில் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பள்ளிகளிலேயே சுடச்சுட உணவு தயாரிக்கப்பட்டும் வழங்கப்படும்.




முன்னதாக முதல்வர் பிறப்பித்திருந்த ஒரு உத்தரவில், சமையலறைகள், உணவு கூடம் மற்றும் பரிமாறப்படும் இடங்கள் அனைத்தும் மிகுந்த சுகாதாரத்துடன் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்களுக்குச் சத்தான, சுவையான மற்றும் சூடான உணவு தினமும் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார்.


மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வந்து, கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அரசின் இந்நடவடிக்கை பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ

news

Swarnalakshmi Writes: செப்டம்பர் 22.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா..?

news

Inclusive Education in My Classroom: Every Child Matters

news

Tuesday Special Recipe: நெல்லிக்காய் பச்சடி!

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

அதிகம் பார்க்கும் செய்திகள்