சர்வதேச அளவில்.. பெண்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான மனித உரிமை மீறல் இதுதான்!

Feb 06, 2026,01:29 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed


பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான சர்வதேச பூஜ்ஜிய சகிப்புத்தன்மை தினத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.


உலகில் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களில் மிகவும் கொடூரமானதும், மனிதாபிமானமற்றதுமான நடைமுறைகளில் ஒன்றாக பெண் பிறப்புறுப்பு சிதைவு (Female Genital Mutilation – FGM) உள்ளது. இது ஒரு பெண்ணின் உடல், மனம், மரியாதை ஆகிய அனைத்தையும் பாதிக்கும் செயலாகும். 


இது ஒரு சடங்காக உலகின் பல பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்தச் சடங்கு மருத்துவத் தேவை இன்றி, கலாச்சாரம், பழக்கவழக்கம், மத நம்பிக்கை என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகிறது. 


பெண்களின் உடல் முழுமையை மறுக்கும் இச்செயலுக்கு எதிராக உலக மக்களின் கவனத்தை ஈர்க்கவும், இதை முற்றிலும் ஒழிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 6ஆம் தேதி “பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான சர்வதேச பூஜ்ஜிய சகிப்புத்தன்மை தினமாக” அனுசரிக்கப்படுகிறது.


பெண் பிறப்புறுப்பு சிதைவு என்றால் என்ன?




பெண் பிறப்புறுப்பு சிதைவு என்பது, பெண் குழந்தைகள் அல்லது பெண்களின் பிறப்புறுப்பு பகுதிகளை மருத்துவக் காரணமின்றி பகுதி அல்லது முழுவதுமாக வெட்டுதல், மாற்றுதல், காயப்படுத்துதல் போன்ற செயல்களை உள்ளடக்கியது. இது பொதுவாக சிறு வயதிலேயே மேற்கொள்ளப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) இதை ஒரு மனித உரிமை மீறல் என்றும், பெண்களின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் செயல் என்றும் அறிவித்துள்ளது.


பெண்களின் உடல்நல உரிமையை மறுக்கிறது. 

குழந்தைகள் மீதான வன்முறையாகும்.  

பாலின சமத்துவத்திற்கு எதிரானது. 


பெண் பிறப்புறுப்பு சிதைவு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழக்கமாக சில சமூகங்களில் காணப்படுகிறது. இது

பெண்களின் பாலியல் உணர்வை கட்டுப்படுத்த திருமணத்திற்கு “தகுதியானவர்” என சமூகத்தில் ஏற்றுக்கொள்ள

தூய்மை, மரியாதை என்ற தவறான நம்பிக்கைகளின் அடிப்படையில் என்ற காரணங்களை முன்வைத்து செய்யப்பட்டன.ஆனால் இதற்கான மருத்துவ ஆதாரம் எதுவும் இல்லை. மாறாக, இது பெண்களின் வாழ்க்கையை முழுமையாக பாதிக்கும் ஒரு வன்முறை நடைமுறையாகும்.


பெண் பிறப்புறுப்பு சிதைவு பெண்களின் வாழ்நாள் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.


உடல் பாதிப்புகள்

கடுமையான வலி

அதிக ரத்தப்போக்கு

தொற்றுநோய்கள்

பிரசவ சிக்கல்கள்

சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்பு

மனநல பாதிப்புகள்

பயம் மற்றும் மனஅழுத்தம்

மனச்சோர்வு

தன்னம்பிக்கை இழப்பு

வாழ்நாள் முழுவதும் தொடரும் மனவேதனை.. இவை அனைத்தும் ஒரு பெண்ணின் வாழ்க்கைத் தரத்தை கடுமையாகக் குறைக்கின்றன.


வாழ்வதற்கான உரிமை, உடல் பாதுகாப்பு உரிமை, ஆரோக்கிய உரிமை, மரியாதையுடன் வாழும் உரிமை

ஆகிய அடிப்படை மனித உரிமைகளை முற்றிலும் மீறுகிறது. ஐக்கிய நாடுகள் சபை இதை பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்முறையாக அறிவித்துள்ளது.


 உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல். அரசுகள் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்க ஊக்குவித்தல். சமூகங்களில் உள்ள தவறான நம்பிக்கைகளை மாற்றுதல். பெண்களுக்குரிய உரிமைகளை பாதுகாத்தல் போன்றவை இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.


பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற சொல், இச்செயலுக்கு எந்தச் சூழலிலும் அனுமதி இல்லை என்பதை வலியுறுத்துகிறது.


பல நாடுகளில் பெண் பிறப்புறுப்பு சிதைவு கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத் தண்டனை, அபராதம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. 


இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இது சட்டரீதியாக தடை செய்யப்பட்டாலும், விழிப்புணர்வு இல்லாத சமூகங்களில் மறைமுகமாக நடந்து வருகிறது. ஆகவே, சட்டத்துடன் சேர்ந்து கல்வியும் விழிப்புணர்வும் அவசியமாகின்றன.


இந்த பழக்கத்தை ஒழிப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களைத் தங்கள் உடல் உரிமைகள் குறித்து அறிவுறுத்துதல் பெற்றோர்கள் மற்றும் சமூகத் தலைவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் வேண்டும். பள்ளி பாடத்திட்டங்களில் மனித உரிமை கல்வி சேர்த்தல் மூலம் மட்டுமே நீடித்த மாற்றம் சாத்தியமாகும்.


பெண் பிறப்புறுப்பு சிதைவை ஒழிப்பது அரசுகளின் பொறுப்பாக மட்டுமல்ல. குடும்பங்கள், சமூகத் தலைவர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் என அனைவரின் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும்.  பெண்களை சமமாக மதிக்கும் சமூகமே உண்மையான முன்னேற்றம் அடைய முடியும்.


பெண் பிறப்புறுப்பு சிதைவு என்பது ஒரு பழக்கம் அல்ல.அது ஒரு வன்முறை. கலாச்சாரம் அல்லது மரபு என்ற பெயரில் மனித உரிமைகளை பாதிக்க எவருக்கும் உரிமை இல்லை. 


பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான சர்வதேச பூஜ்ஜிய சகிப்புத்தன்மை தினம் உலகம் முழுவதும் பெண்களின் குரலாக ஒலிக்கிறது. பெண்கள் பாதுகாப்புடன், மரியாதையுடன் வாழும் சமுதாயத்தை உருவாக்க, நாம் அனைவரும் இந்த கொடூர நடைமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போது மட்டுமே சமத்துவமான, நியாயமான உலகத்தை உருவாக்க முடியும் என்பதை உணர வேண்டும்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வாழ்க்கையை வடிவமைக்கும் மதிப்புகள்.. மறக்கக் கூடாத மாண்புகள்!

news

சிந்திக்க சில நொடிகள்.. வாழ்க்கையை வசப்படுத்த 5 பொன்னான விதிகள்!

news

விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?

news

தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி

news

தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

news

தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

news

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி

news

பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!

news

தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

அதிகம் பார்க்கும் செய்திகள்