சாதிவாரிக் கணக்கெடுப்பு.. ஒரே நேர்கோட்டில் மத்திய, மாநில அரசுகள்.. தவெக விஜய் குற்றச்சாட்டு

Feb 06, 2025,06:47 PM IST

சென்னை: ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது;  சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் ஒன்றிய மற்றும் தமிழக ஆட்சிளர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர் என்று தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:


ஆட்சியாளர்களின் சமூகநீதி வேடம் கலைகிறது! சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், இந்தியா முழுமைக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றிக் கொள்கைத் திருவிழாவான முதல் மாநில மாநாட்டில், சமூக நீதியை பின்பற்றும் மண்ணான தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் ஆணித்தரமாக வலியுறுத்தி இருந்தேன். மாநாட்டிற்கு பிறகு நடைபெற்ற கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். 




இந்த விவகாரத்தில், மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வை நடத்துவதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழி இருக்கிறது. எனவேதான், பீகார் மாநில அரசும் கர்நாடக மாநில அரசும் ஏற்கனவே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்து, புள்ளி விவரங்களை கையில் வைத்துள்ளன. மேலும், தற்போது தெலுங்கானா மாநில அரசும் வெறும் 50 நாட்களில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது.


 அது மட்டுமின்றி, ஒரு படி மேலே சென்று அந்த ஆய்வு அறிக்கை மீது சட்டசபையின் சிறப்பு அமர்வு கூட்டத்தை கூட்டி விவாதிக்கவும் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை, மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என்று தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால், சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வே நடத்தி முடித்த மற்ற மாநிலங்களில் பின்பற்ற தயங்குவது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.


இத்தனைக்குப் பிறகும், தமிழகத்தை ஆளும் தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே வருகிறார்கள்.


அரசியல் சாசனத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர காரணமாக இருந்த போராட்டத்தை நடத்தி, இது ஒதுக்கீடு  விஷயத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டியவர் தான் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார்.


பெரியாரே எங்கள் தலைவர்; தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் என்று சூழலுக்கு ஏற்றவாறு தங்களின் சுயலாபத்திற்காக மட்டும் அவரைப் பற்றி பெருமை பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள், சமூக நீதியைக் காக்கும் செயல்பாடான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனர். கணக்கெடுப்பைத் தான் ஒன்றிய அரசு நடத்த வேண்டும். ஆனால், அதற்கு முன்னோட்டமாக திகழும் கேஸ்ட் சர்வே என்ற ஆய்வை மாநில அரசை நடத்தலாமே? அதற்கு தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போது ஆட்சியாளர்கள் சொல்லப் போகிறார்களா?


அப்படியெனில், தெலுங்கானா மாநில அரசுக்கு மட்டும் அது சாத்தியமானது எப்படி? அங்கு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டி, சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்து, விவாதம் நடத்துவது எப்படி?


மற்ற மாநிலங்கள் போல் சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட தமிழகத்தில் நடத்தவில்லையே, ஏன்? இப்படி எத்தனை கேள்விகள் கேட்டாலும், தற்போதைய ஆட்சியாளர்கள், அவற்றை அலட்சியப் போக்குடன் கடந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.


இந்த நேரத்தில், ஒன்றை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் ஒன்றிய மற்றும் தமிழக ஆட்சிளர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஒரே வழியான, உண்மையான சம நீதி, சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால், தற்போதைய ஆட்சியாளர்களின் பொய் வேடம் தானாகவே கலையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!

news

புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை: முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவு!

news

கருவறை முதல் கல்லறை வரை... அலட்சியமும் ஊழலும் மலிந்து போன திமுக அரசு: தவெக

news

ஸ்வஸ்திக் சின்னம்.. அதிர்ஷ்டம், மங்கலம் மற்றும் செழிப்பின் அடையாளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்