வணங்கான் இசை வெளியீடு + இயக்குநர் பாலாவின் சில்வர் ஜூப்ளி.. டிசம்பர் 18ம் தேதி கோலாகல விழா!

Dec 09, 2024,01:06 PM IST

சென்னை: வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன் இயக்குனர் பாலாவின் 25 ஆம் ஆண்டு கலைப் பயணத்தை இணைத்து இரட்டை விழாவாக வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


இயக்குனர்  பாலா எழுதி, இயக்கியுள்ள படம் தான் வணங்கான். இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் சுரேஷ் காமாட்சி இணைந்து தயாரித்துள்ளார்.  ஜிவி பிரகாஷ்  இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிய இப்படத்தில் அருண் விஜய்  நாயகனாக நடித்துள்ளார். இவருடன் ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். 




படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி பத்தாம் தேதி வெளியாக உள்ளது.  இப்படத்தை இயக்கிய பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன் சேர்த்து பாலா 25 என்ற நிகழ்ச்சியை டிசம்பர் 18ஆம் தேதி மிகப்பிரமாண்டமாக  படக்குழு நடத்த திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்து வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், கலையுலகம் உறவுகளாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பிய உலகம் மட்டுமல்ல, மகத்தான திறமையாளர்களை உறவுகளாக இணைத்துக் கொண்டு இயங்கும் ஒரு குடும்பம்.


அனைவரின் சுக துக்கங்களிலும், பாராட்டுதலிலும், தோள் கொடுத்தலிலும், துணை இருத்தலிலும் இச்சிறு உலகம் தன்னைத்தானே செழுமைப்படுத்திக் கொள்கிறது.


அன்பினால் ஆகாதது உலகத்தில் என்ன இருக்கிறது? பேரன்பு மட்டுமே உலகத்தை இயக்கும் விசை. சினிமா ஒரு பேரன்பு கொண்ட பெரும் ஆலமரம். அம்மரத்தின் விழுதுகளில் ஒரு விழுது தான் இயக்குநர் பாலா. பலமான அந்த விழுது அம்மரத்தை உறுதியாகத் தாங்கியிருக்கிறது தனது பங்களிப்பின் மூலம்.  அப்படியான பங்களிப்பின் மூலம் நிறைய நாயகர்களை, கலைஞர்களை தனது இருபத்தைந்து ஆண்டு காலத்தில் உருவாக்கி உள்ளார் இயக்குநர் பாலா. 


அதுவரை திறமை இருந்தும் முகவரி கிடைக்காமல் தவித்தவர்களைத் தேடி எடுத்து தன் படங்களையே அவர்களது முகவரியாக ஆக்கியவர் அவர். அவர் தன் கலை உளியால் துளித்துளியாக செதுக்கிய சிற்பங்கள் தான் தமிழ்த் திரை உலகம் என்கிற ராஜகோபுரத்தில் மின்னிக் கொண்டிருக்கின்றன. 


பாலா என்ற தனிமனிதர் ரத்தமும் சதையுமாக உருவாக்கிய  சிறிய படப்பட்டியலில் அவர் சாதித்திருப்பது நீண்ட வரிசை. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துப் போனவர்களில் அவரும் ஒருவர். எல்லோரும் ஒரு பாணியில் கடந்து பாதை அமைத்துக் கொண்டிருக்கும்போது, தனக்கென ஒரு பாணியை அழுத்தமாக அமைத்துக் கொண்டவர்.


மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள், உடலால்... உடல் புலன்களால் பாதிக்கப்பட்ட எளிய மனிதர்கள், புறக்கணிக்கப்பட்ட வாழ்வில் அன்பைத் தேடி அலைபவர்கள் என அதுவரை பேசப்படாத, பாலா உருவாக்கிய செல்லுலாய்டு மனிதர்கள் காலம் காலமாய் தமிழ்த் திரையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். 


அவர்களின் கடின வாழ்வைத் தன் அகத்தின் மூலம் பார்த்து பதிவு செய்த பாலாவின் திரை மொழி மிக அசாத்தியமானது.  நாம் வாழும் காலத்தில் கலை ஆன்மா கொண்ட ஒரு மகத்தான மனிதனைக் கொண்டாடவும்... பெருமைகொள்ளச் செய்யவும்  ஓடும் ஓட்டத்தில் நமக்கு நேரம் வாய்க்காமல் போயிருக்கிறது.  இன்னமும் அதைக்  காலம் தாழ்த்திக் கொண்டே போகக் கூடாது. அவரது இருபத்தைந்தாம் ஆண்டை விமர்சையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ். 




இயக்குநர் பாலா இயக்கி, அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் "வணங்கான்" படத்தின் ஆடியோ வெளியீட்டையும், இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணத்தையும் இணைத்து இரட்டை விழாவாக டிசம்பர் 18 ஆம் தேதி அன்று மாலை 5 மணியளவில் சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடத்த உள்ளோம். 


இது பாலா என்கிற ஒரு தனிப்பட்ட இயக்குநருக்கான விழா மட்டுமல்ல. கால் நூற்றாண்டாக தமிழ்த் திரையை கலையம்சம் பொருந்திய தனது திரைக்காவியங்களால் நிறைத்த ஒரு மாமனிதனுக்கு நாம் செய்கிற மரியாதை. திரையுலகின் ஆகச்சிறந்த ஆளுமைகளும் வாழ்த்த,   இன்னும் பல ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் இயக்குநர் பாலா ஆரோக்கிய நடைபோட, நீங்களும் உடனிருந்து வாழ்த்த அழைக்கிறோம். தமிழ்த் திரையுலகின் அனைத்து நண்பர்களையும் ஒரே குடும்பமாய் நின்று வாழ்த்த வருகை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என அறிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?

news

என்ன வேணும் உனக்கு.. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த புது அப்டேட்.. இனி இதையும் பண்ணலாம்!

news

PMK issue: டெல்லி விரைந்தார் அன்புமணி.. அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டமா?.. மீண்டும் பாமக பரபரப்பு

news

கர்நாடக முதல்வரை மாற்ற திட்டமா.. மல்லிகார்ஜூன கார்கே சொன்ன பதில் இதுதான்!

news

Bihar model Road: 100 கோடியில் ரோடு.. ரோட்டு மேல காரு.. காரைச் சுத்தி யாரு?.. அடக் கொடுமையே!

news

ஆதார்-ஐஆர்சிடிசி அக்கவுண்ட் இணைக்க இன்றே கடைசி... தட்கல் டிக்கெட் எடுக்க புதிய ரூல்ஸ்

news

நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது.. குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது: சீமான்!

news

தொடர் குறைவில் தங்கம் விலை.... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

68 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் மாதத்தில் 120 அடியை தொட்டு அசத்திய மேட்டூர் அணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்